உண்மை சம்பவம் தெரிஞ்சுக்கோங்க
அரதப்பழசான இந்த ஜோக் ஞாபகம் இருக்கிறதா..?
‘’அம்மா.. இன்னைக்கு நான் ஸ்கூலுக்குப் போகலை…. வயிறு வலிக்கிற மாதிரி இருக்குது…”
‘’டானிக் தர்றேன், குடிச்சுட்டு கிளம்புற வழியைப் பாரு…’’
‘’இல்லேம்மா… எல்லா பசங்களும் கிண்டல் பண்றாங்க…’’
‘’அதையெல்லாம் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கோ… நீ ஸ்கூலுக்குப் போய்த்தான் ஆகணும்…’’
‘’ஒரு நாள் லீவு போட்டா என்னாயிடும்..?’’
‘’என்னாயிடுமா.. நீதான் ஸ்கூலுக்கு ஹெட் மாஸ்டர், நீயே ஒழுங்கா ஸ்கூலுக்குப் போகலேன்னா மத்த வாத்தியாருங்க எப்படி வேலைக்கு வருவாங்க..?’’ – இந்த ஜோக் சொல்லவரும் செய்தி என்ன தெரிகிறதா.? இந்த உலகில் பெரும்பாலோர் மனதுக்குப் பிடிக்காத வேலையைத்தான் செய்துகொண்டு இருக்கிறார்கள். பிடிக்காத வேலை என்றாலும், அதிலிருந்து வெளியே வர முயற்சிக்காமல் வேலையை குற்றம் சொல்கிறார்கள். சீனியர் மீது கோபம் கொள்கிறார்கள். தனக்கு மட்டுமே இந்த நிறுவனத்தில் அநியாயம் நடக்கிறது என்று வருத்தப்படுகிறார்கள்.
ஆழ்மனதால் இந்த எண்ணங்களை மாற்ற முடியுமா? எப்போதும் என் மீது குறை கண்டுபிடிக்கும் மேனேஜர் என்னை பார்த்ததும் புன்னகைக்கும் வண்ணம் செய்வதற்கு ஆழ்மனதால் முடியுமா.? எனக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கு ஆழ்மனம் உதவி செய்யுமா என்று நண்பர் கேட்டிருந்தார்
அவருக்கான பதில் நிச்சயம் முடியும் என்பதுதான். ஆம், ஆழ்மனம் அத்தகைய சக்தி வாய்ந்தது. அதாவது, உங்கள் விருப்பம் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால், அதனை ஆழ்மனம் நிச்சயம் நிறைவேற்றித் தரும்.
ஆழ்மனம் எத்தனை வலிமையானது என்பதை புரிந்துகொள்வதற்கு ஒரு சம்பவத்தை சொல்ல வேண்டும்.
வானதிக்கு ஒயிட் சாக்லேட் என்றால் கொள்ளை பிரியம். அதேநேரம் காளான் என்றால் படு அலர்ஜி. அதனால், அவள் காளானை கண்களால் பார்க்கக்கூட விரும்புவதில்லை. இது, அவளுடைய சர்க்கிளைச் சேர்ந்த எல்லோருக்குமே தெரியும்.
இந்த நிலையில், வானதிக்கு பிறந்த நாளை அவளது தோழர்கள், தோழிகள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவதற்கு முடிவு செய்தார்கள். கேக் வாங்கிவரும் பொறுப்பை அவளுடைய காதலன் ரவீந்திரன் எடுத்துக்கொண்டான். எல்லோரும் ஒன்று சேர்ந்ததும், கேக் வெட்டுவதற்கு வந்தாள் வானதி. அழகான உடையில் தேவதை போல் ஜொலித்தாள்.
கேக் இருந்த அட்டைப் பெட்டியைத் திறந்ததும், அத்தனை பேருமே அதிர்ந்துவிட்டார்கள். ஆம், அங்கே இருந்தது கேக் அல்ல. நிறைய காளான்கள். அதை பக்கத்தில் பார்த்ததும் வானதிக்கு படபடப்பு வந்துவிட்டது. முகம் சிவந்து, உடலெல்லாம் வியர்த்து மூச்சு இரைக்க ஆரம்பித்தது.
’ஏன் இப்படி செய்தாய்…? அவளுக்கு காளான் அலர்ஜி என்பது உனக்குத் தெரியுமே… பிறந்த நாளன்று இப்படியா வானதியை சிரமப்படுத்துவது’ என்று எல்லோரும் ரவீந்திரனை கடிந்துகொண்டார்கள்.
அவன் புன்னகையுடன், ‘வானதி… ரிலாக்ஸ்…. இவை எல்லாம் காளான்கள் அல்ல. காளான்கள் வடிவில் செய்யப்பட்ட ஒயிட் சாக்லேட்’ என்றான்.
அடுத்த நிமிடம், சட்டென சூழ்நிலை மாறியது. நண்பர்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள். வானதிக்கு மூச்சு இரைப்பு நின்று போனது. முகம் சிவந்துபோனதும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு வந்தது. முகத்தில் புன்னகை அரும்பத் தொடங்கியது.
‘நான் இவை நிஜமான காளான் என்று பயந்தேவிட்டேன்…’ என்றவள் அந்த காளான் சாக்லேட்டை எடுத்து சுவைக்கத் தொடங்கினாள். காளான் சாக்லேட் சாப்பிட்ட வானதிக்கு எதுவும் ஆகவில்லை. இதுதான், மனம் செய்யும் மேஜிக்.
அங்கே நிஜமான காளான் இல்லவே இல்லை, ஆனாலும் அவளுடைய உடல் நிஜ காளானுக்கு எப்படி அலர்ஜியை வெளிப்படுத்துமோ, அப்படியே பொய் காளானுக்கும் எதிரொலித்தது. ஆம், மனம் விரும்புவதையே உடல் செயல்படுத்தும். உடல் மட்டுமல்ல, இந்த பிரபஞ்சமும் உங்களுடைய ஆழ்மன ஆசையை நிறைவேற்றுவதற்கு துணையாக நிற்கும்.