பாராட்டுவதே தலைமைப்பண்பு
ஒரு நல்ல தலைவருக்கு உரிய பண்பு என்ன தெரியுமா? தன்னுடன் இருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் தேவையான ஊக்கம் கொடுத்து, அவர்களை வாழ்க்கையில் முன்னேற்றுவது மட்டும்தான். அப்படி முன்னேறியவர்கள் என்றென்றும் தலைவர் மீது முழுமையான அன்பும், நம்பிக்கையும் வைத்திருப்பார்கள் என்பதை சொல்லவே தேவையில்லை.
அதனால்தான், ’ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள்கூடத் தேக்கு விற்பான்’ என்பார் கவிஞர் வாலி. ஆம், ஊக்குவிப்பதுதான் ஒருவரை உயரத்தில் உட்காரவைக்கும். இதைத்தான் கவியரசு கண்ணதாசன், ‘எவ்வளவுதான் திறமையிருந்தாலும், ஆரம்பகட்டத்தில் கைகொடுத்துத் தூக்கிவிட ஒருவர் இல்லையென்றால், எந்தத் திறமையும் பிரகாசிக்க முடியாது’ என்கிறார்.

ஆனால், இன்று ஊக்குவிப்பதைவிட, மட்டம் தட்டுவதைத்தான் பலரும் செய்கிறார்கள். இது வீட்டிலேயே தொடங்கிவிடுகிறது என்பதுதான் வேதனை. குறிப்பாக, தங்களது குழந்தைகளைப் பெற்றோர்கள் போதுமான அளவுக்கு ஊக்குவிப்பதே இல்லை. ஒருமுறை தங்கள் குழந்தை தேர்வில் தோற்கும்போது அல்லது நல்ல மதிப்பெண் எடுக்க தவறும்போது, ’உனக்கு மூளையே இல்லை, நீ உருப்பட மாட்டே” என்று திட்டுகிறார்களே தவிர, நம்பிக்கையூட்டும் வகையில் பேசி, அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிப்பதில்லை.
குழந்தைகளின் நன்மைக்காகத்தான் கண்டிக்கிறார்கள் என்றாலும், அது அவர்களுடைய மனதை அழுத்தமடையச் செய்கிறது. அதனால், தங்களால் எதுவும் செய்யமுடியாது என்ற நிலைக்கு ஆளாகிறார்கள். அதேபோல், பிற குழந்தைகளுக்கு முன் தம் குழந்தைகளின் தவறுகளைச் சுட்டுக்காட்டுவதும் குறைகளை ஒப்பிடுவதும் மட்டம் தட்டுவதுதான். மாறாக, படிப்பிலும், விளையாட்டு போன்ற விஷயங்களிலும் அவர்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் ஊக்குவிக்க வேண்டும்.. அப்படிச் செய்தால்தான், அவர்களுக்கு தங்கள் திறமையின் மீது நம்பிக்கை வரும். ‘என்னாலும் ஜெயிக்க முடியும்’ என்ற எண்ணத்துடன் அதற்கான உழைப்பை அரங்கேற்றுவார்கள்.
விளக்கில் இருக்கும் திரியைத் தூண்டிவிட்டால்தான் பிரகாசமாக எரியும். அதுபோல, ஒருவருடைய திறமையை நாம் அறிந்து, அதற்கேற்ப அவர்களை ஊக்குவித்தால்தான் அவர்களது வாழ்வு சிறப்பாக அமையும். எல்லோரிடமும் ஏதேனும் திறமை இருக்கத்தான் செய்யும். அதனை ஒருவர் கண்டறிந்து தூண்டிவிடுதல் முக்கியம். அப்போதுதான், சம்பந்தப்பட்ட நபர்களுக்கே தங்கள் திறமையின் மீது நம்பிக்கை வரும்.
இந்த ஊக்குவிப்பு குழந்தைகளுக்கு மட்டுமல்ல. எங்கும், ஒவ்வொரு மனிதருக்கும் தேவைப்படும் ஒன்றாகும். தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தங்கள் சக ஊழியர்களைப் புரிந்துகொண்டு, அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தால், கடினமான வேலைகளையும் அவர்களால் எளிதாகச் செய்துவிட முடியும். எந்தவொரு சிக்கலான தருணங்களையும் சுலபமாகச் சமாளிப்பார்கள்.
ஆர்வம், ஈடுபாடு, உற்சாகம் இவையாவும் ஊக்கப்படுத்துவதால் வரும் நல்ல தன்மைகள் ஆகும். முகம் தெரியாத சிலர் இன்று உலகிற்கே தெரியும் வகையில் உயர்ந்து நிற்கிறார்கள் என்றால், அதற்கு காரணம், அவர்கள் ஊக்குவிக்கப்பட்டதுதான். ஆகையால் நாமும் பிறரை நம்மால் முடிந்த அளவுக்கு ஊக்குவிப்போம். நாமும் உயர்வடைவோம்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்












