மாதம் ஒரு பெண் கவிஞர் – கவிஞர் இராம. பெருமாள் ஆச்சி
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்” என்கிறது வள்ளுவம். உணவே மருந்தென வாழ்ந்து உடலைப் பேணிய நம் முன்னோர்களின் ஆரோக்கிய வாழ்வைப் புறந்தள்ளி புதுமையென்ற பேரில் ஒவ்வாத உணவுகளைத் தேடி உண்பதால் தேய்கின்றது நம் வாழ்நாள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எனவே, மனமகிழ்ச்சியுடன் வாழ உடல் ஆரோக்கியம் அடிப்படையான ஒன்றாகும். எண்சாண் உடலிற்குச் சிரசு(தலை) எவ்வளவு முக்கியமானதோ அதுபோல ஒரு சாண் வயிறும் மிக மிக முக்கியமானதாகும்.
‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்ற பழமொழியைக் காணாமல் போகச் செய்துவிட்டது அவசர கதியில் ஓடும் அலுவல் சார்ந்த வாழ்க்கை.
‘பாஸ்ட் புட்’ எனப்படும் துரித உணவுகள் துரிதமாகவே பல பெரிய நோய்களுக்கு வழி வகுத்து ஆயுளுக்கு அபாய மணி அடிக்கிறது. அதுபோல காலை உணவைத் தவிர்த்து வயிற்றைப் புண்ணாக்கி, வாழ்க்கையை எரிச்சலுடன் வாழ்பவர்கள் அதிகம். பூஜையறைக்கு நிகரானது வீட்டின் சமையலறை. சமையலறைதான் வீட்டிலுள்ளவர்களின் உடல்நலனைச் சீராக வைப்பதற்கான இடமாகும்.
‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்பதில் பின்னிரண்டைப் பழக்கியிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழல் முன்னிருப்பதைக் கவனத்தில் கொள்வதில்லை.
சுண்டப் பசித்த பின்பே உண்ண வேண்டுமென்பது கவிமணியாரின் பாடல் வரிகளில் ஒன்றாகும். நம் உடல் நம்மிடம் பேசுமாம். தாகமெடுப்பதை, தூக்கம் வருவதை, உடல் அசதியை உணர்த்தும் உடல் நம்மடம் பேசுவதைக் கவனத்தில் கொண்டு அதன்படி வாழ்ந்தால் இன்னல்கள் குறையும்.
வயிறு தனக்கான உணவைக் கேட்கும்போது தர வேண்டும். அதுவும் அரைப்பங்கு திட உணவும், கால்பங்கு திரவ உணவாகவும் கால் பங்கு வெற்றிடமாகவும் இருத்தல் நலம்.
இரவு உணவை எட்டு மணிக்குள் உண்பதே சாலச் சிறந்தது. நள்ளிரவில் உண்பது அதுவும் பிரியாணி போன்ற எளிதில் செரிமானமாகாத உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
பழைய சோறும், நீராகாரமும் அயலக மக்களின் தேடலுக்குப் பின்புதான் நன்மையென்று புரியுமென்றால் நம் பாரம்பரிய உணவுகளைப் பற்றி முழுமையாக எப்பொழுது அறிந்து கொள்ளப் போகிறோம்?
மூச்சுப் பயிற்சி, தியானம், யோகா போன்றவை மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மனமும், உடலும் வாழ்க்கைப் பயணத்தின் இரு சக்கரங்களெனலாம். கையளவு இதயத்தைக் கடலளவு கவலைகளால் திணறச் செய்யாமல் உடல், மனம் இரண்டையும் சமநிலையில், சரிநிலையில் பாதுகாத்தால்தான் சமூக ஆரோக்கியம் சிறக்கும். மனவளக்கலை பயிற்சிகளுக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். பிடித்த இசை கேட்பது, விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
ஐடி துறை போன்றவற்றில் பல மணி நேரங்கள் ஓரிடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் நடுநடுவே எழுந்து சற்று இளைப்பாறி பின்பு பணியைத் தொடரலாம்.
மனிதன் ஒரு சமூக விலங்கென்பர். மனிதன் தான் வாழும் வாழ்க்கையைப் பிறருக்கும் பயனுள்ளதாக வாழ்ந்தால் அவன் தெய்வத்தி்ற்கு நிகரானவனாகின்றான். முக்கியமாக போதை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு தன் உடலையும் தன்னுடன் இருப்பவர்களையும் வருத்தும் செயல்களில் ஈடுபடாதிருப்பது நலம். சமூக வலைத்தளங்களில் அளவிற்கதிமான நேரத்தைச் செலவிட்டு கண்கள் பாதிப்புக்குள்ளாவதையும், நேரம் விரயமாவதையும் தவிர்க்கலாம்.
“உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம் என்ற திருமூலரின் வாக்கைப் மெய்ப்பிக்கும் வகையில் வாழ மனத்தூய்மை அவசியம்.
ஒவ்வொரு தனிமனிதனின் ஆரோக்கியமும் சமுதாய முன்னேற்றத்திற்கான முதல்படி. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 67.7 ஆண்டுகள் என்று ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சிக் குறியீடு தெரிவித்துள்ளது. இது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டு மக்களின் சாராசரி ஆயுட்காலத்தை விடக் குறைவு.
சரிவிகித உணவு , சரியான உடற்பயிற்சி, போதிய ஓய்வு, சமநிலையான மனநிலை ஆகியவற்றிற்கான முக்கியத்துவம் கொடுத்து ‘என் ஆரோக்கியம் என்கையில்’ என்று வாழ்வோம். உயிர்வாழ்தலின் மகத்துவம் அறிவோம்.