க்யூட் குட்டி கதை
எந்த ஒரு செயலிலும் இறங்குவதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்கலாம். ஆனால், இறங்கியபிறகு வெற்றி மட்டுமே சிந்தனையாக இருக்க வேண்டும். வெற்றி அடையும் வரை போராடிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தேவை விடாமுயற்சி மட்டும்தான்.
ஒரு குட்டிக் கதை. ஒரு கிராமத்தில் இரண்டு வருடங்களாக மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டது. அதனால் இரண்டு பேர் அவரவர் இடத்தில் கிணறு தோண்டினார்கள். கிணறு வெட்டிக்கொண்டே போனாலும் தண்ணீர் ஊற்று தென்படவே இல்லை. அதனால் ஒருவர் இனி பிரயோஜனமில்லை என்று கிணறு தோண்டுவதை நிறுத்திவிட்டார். அவரை புத்திசாலி என்று பாராட்டியவர்கள் அதன்பிறகும் தோண்டியவரை கிண்டல் செய்தனர். ஆனாலும் அவர் மனம் தளராமல் தோண்டினார். திடீரென ஒரு நாள் ஊற்று தென்படவே, தண்ணீர் மளமளவென நிரம்பியது. உடனே ஊர் மக்கள் அத்தனை பேரும் ஓடிவந்து அவரது விடாமுயற்சியை பாராட்டினார்கள். பாதியில் தன் முயற்சியை நிறுத்தியவரை இப்போது கிண்டல் செய்தனர். இதுதான் விடாமுயற்சியின் பலன்.
வெற்றிக்கு ஆசைப்படும் பலரும், திடீரென வரும் பிரச்சினைகளை தோல்விகளைக் கண்டதும் பயந்து விடுகின்றனர். பிரச்னைகளை எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் போராடுவதற்கு அச்சப்படுகிறார்கள். இனிமே தங்களுக்கு வெற்றியே கிடைக்காது என்று தப்புக்கணக்கு போட்டுவிடுகிறார்கள். முயற்சியும் பயிற்சியும்தான் வெற்றிக்கு அடிப்படை என்ற உண்மையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
எத்தனை சாதகமான நிலையிலும் எதிர்பாராத தோல்வியும் தொந்தரவும் வரத்தான் செய்யும். எனவே, தோல்விகளை முடிவாகப் பார்க்காமல், தடையாக மட்டுமே பார்த்து, அதனை வெற்றிகொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு தோல்வியையும் ஓர் அனுபவமாக எடுத்துக்கொண்டு வலிமை அடைய வேண்டும்.
தோல்வி எனும் கதவை மூடுவதைக் கண்டு அதிர்ந்துநில்லாமல், மீண்டும் மீண்டும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளை தட்டிக்கொண்டே இருக்க வேண்டும். தட்டுங்கள் திறக்கப்படும் என்று இயேசு சொன்னது, மனிதனின் விடாமுயற்சியைத்தான். விடாமுயற்சிதான் வெற்றிக்கான சாவி என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
விடாமுயற்சியால், வரலாற்றில் இடம்பெற்றவர்கள் ஆயிரமாயிரம் பேர் இருக்கிறார்கள். வில்மாருடாப் என்பவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இனி, எழுந்தரிக்கவே முடியாது என்று அவரிடம் சொன்னார்கள். ஆனாலும் தன்னுடைய விடாமுயற்சியால், 1960 ஒலிம்பிக்கில், ஓட்டப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். அதுபோல், ஐந்து வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட ஷெல்லிமான், 1956 ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில், தங்கப் பதக்கம் பெற்றார்.
ஆகையால், லட்சியத்தை நோக்கி விடாமுயற்சியுடன் செல்லும்போது, எதையும் சாதிக்க முடியும். இதைத்தான், ‘நீ வெற்றிக்காக போராடும்போது வீண் முயற்சி என்பவர்கள், நீ வெற்றி பெற்றதும் அதை விடாமுயற்சி என்று கொண்டாடுவார்கள்’.
எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்












