சைதை சா. துரைசாமி, மேனாள் பெருநகர சென்னை மேயர்.
லஞ்சம், ஊழல், முறைகேடுகளுக்கு எதிராக ஒரு கட்சி உருவானது என்றால், அது அதிமுக மட்டும்தான். புரட்சித்தலைவரின் அதிமுக உருவாக விதை போட்டவன் என்ற வகையில், அந்த வரலாற்று சம்பவத்தை இன்றைய நாளில் இளம் தலைமுறையினருக்கு விளக்குகிறேன்.
எம்.ஜி.ஆர்.தான் திமுக
1967 சட்டமன்றத் தேர்தலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சுடப்பட்ட போஸ்டரால் கிடைத்த அனுதாப ஓட்டுகளே முதன்முதலாக திமுகவை வெல்லவைத்து, பேரறிஞர் அண்ணாவை முதல்வராக்கியது. அண்ணா மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர்.தான் கருணாநிதியை முதல்வராக்கினார். 1971 தேர்தலில் தமிழ்நாடு முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மீண்டும் கருணாநிதியை முதல்வராக்கியதும் எம்.ஜி.ஆர்.தான்.
ஆனால், இந்த வெற்றிக்குப் பிறகு கருணாநிதி தன்னையும், தன் குடும்பத்தையும் முன்னிறுத்தத் தொடங்கினார். அவரது ஆதரவாளர்களுக்கு ஆட்சியும் அதிகாரமும் வளைந்து கொடுத்தது. லஞ்சமும் ஊழலும் பெருகியதை பெருந்தலைவர் காமராஜர் மேடைகளில் கடுமையாக விமர்சனம் செய்தார். அண்ணா வழியில் நேர்மையான ஆட்சிக்கு உத்தரவாதம் கொடுத்த எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி உருவானது.
இந்த நேரத்தில் மதுரை மாநாட்டில் எம்.ஜி.ஆருக்குப் பதிலாக மு.க.முத்து தலைமையேற்று ஊர்வலம் நடத்தியதைக் கண்டு என்னைப் போன்ற ரசிகர்களுக்கு ரத்தம் கொதித்தது. எம்.ஜி.ஆர். மன்றங்களை மு.க.முத்து மன்றங்களாக மாற்றுவதற்கு கிளைக்கழகச் செயலாளர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்.
இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல் தாம்பரம் பாலு வீட்டில் ஒன்றுகூடி ஆலோசனை செய்தோம். எம்.ஜி.ஆர். மன்றங்களுக்கு பிரத்யேக கொடி உருவாக்கும் ஆலோசனை நடந்தது. எம்.ஜி.ஆருக்கு ராசியான தாமரைப்பூவை கொடியில் வைக்கலாம் என்ற என் ஆலோசனை ஏற்கப்பட்டது. அதேபோல் ‘தென்னக புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். புகழ்பரப்பும் கலைக்குழு’ அமைக்கவும் முடிவெடுத்தோம்.
புரட்சித்தலைவரிடம் அனுமதி கேட்பதற்கு 1972, அக்டோபர் 1 அன்று சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த எம்.ஜி.ஆர். மன்றங்களின் ஆலோசனைக் கூட்டம், அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் இன்றைய அதிமுக தலைமையகமான சத்யா திருமண மண்டபத்தில் நடந்தது.
கருணாநிதி சூழ்ச்சி
இந்த கூட்டம் குறித்து உளவுத்துறை மூலம் அன்றைய முதல்வர் கருணாநிதிக்குத் தகவல் சென்றதும், ஒரு தந்திரம் செய்தார். அன்றைய பாண்டிச்சேரி முதல்வர் ஃபரூக் மரைக்காயர் மூலம் எம்.ஜி.ஆருடன் சமாதானம் பேசினார். ’எம்.ஜி.ஆர். விரும்பியபடி இனி திமுக ஆட்சி நடக்கும்’ என்று உறுதி கொடுத்தார். ஆனால், இப்படி ஒரு சந்திப்பு நடந்தது எங்களுக்குப் பின்னரே தெரியவந்தது.
எனவே, இந்த கூட்டத்திற்கு புரட்சித்தலைவர் ஒரு தெளிவான முடிவுடன் வந்தார். ’’நீங்கள் அனைவரும் ஒரு முடிவுடன் இருக்கிறீர்கள். ஆனால், அண்ணா கண்ட இருவர்ணக் கொடிதான் நமது அடையாளம். தாய்க்கழகமா, சேய் மன்றமா என்று கேட்டால், நான் தாய்க்கழகம்தான் வேண்டும் என்பேன்…’’ என்று அழுத்தமாகப் பேசி ரசிகர்கள் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டார். அரங்கமே நிசப்தமாகிவிட்டது.
புரட்சித்தலைவரிடம் கொந்தளிப்பு
அனைவரும் அதிர்ச்சியில் இருந்தாலும் நான் சுதாரித்துக்கொண்டு மேடையில் இருந்து இறங்கி எம்.ஜி.ஆர். கார் அருகே நின்றுகொண்டேன். காரில் ஏறவந்த புரட்சித்தலைவரிடம் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு கையெடுத்து கும்பிட்டபடி, ‘’வணக்கம்ணே, எம்.ஜி.ஆர். மன்றங்களை க்ளோஸ் செஞ்சிட்டீங்க;; என்றேன்.
ஏனென்று கேட்டதும், கட்சியில் புரட்சித்தலைவருக்கும் ரசிகர் மன்றங்களுக்கும் எதிராக நடக்கும் அத்தனை சூழ்ச்சி, துரோகங்களையும், சென்னையில் மட்டும் 48 மன்றங்கள் மூடப்பட்டதையும் கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் மளமளவென கொட்டினேன். நான் சொன்னதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கிளம்பிவிட்டார்.
எம்.ஜி.ஆர். மனம் மாறியது
எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்றதும் நான் கூறிய தகவல்களின் உண்மைத்தன்மையை விசாரித்தார். எல்லாமே முழு உண்மை என்றதும் புரட்சித்தலைவரால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக ஆர்.எம்.விரப்பனிடம் கால்ஷீட் தேதிகளைக் கேட்டறிந்து, அக்டோபர் 8ம் தேதி இரண்டு பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு தேதி கொடுத்தார்.
அதன்படி, திருக்கழுக்குன்றம், சென்னை லாயிட்ஸ் ரோடு கூட்டங்களில் பேசிய எம்.ஜி.ஆர்., ‘நான் தான் தி.மு.க., தி.மு.க.தான் நான். கிளைக்கழகச் செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சொத்துக்கணக்கு காட்ட வேண்டும்’ என்று உரிமைக்குரல் எழுப்பினார். எம்.ஜி.ஆரின் பேச்சு திமுகவை உலுக்கியது. இதையடுத்து புரட்சித்தலைவர் கட்சியிலிருந்து 10ம் தேதி நீக்கப்பட்டார்.
கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட செய்தி தமிழகத்தை அதிரவைத்தது. குமரி முதல் சென்னை வரை கடையடைப்பு, ஊர்வலம், மறியல், மோதல், கைது என்று களேபரமானது. இதையடுத்து, அனகாபுத்தூர் ராமலிங்கம் மூலம் பதிவு செய்யப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அக்டோபர் 17ம் தேதி உருவானது. இதுதான் அதிமுக உருவான வரலாறு.
இகுறித்து அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், ‘’சைதை துரைசாமி மட்டும் அமைதியாக இருந்திருந்தால் அன்றைய தினம் அதிமுக உருவாகியிருக்காது’’ என்று பல இடங்களில் பெருமைப்படுத்தியிருக்கிறார். இதனாலே நான் புரட்சித்தலைவரின் நம்பிக்கையான தளபதியாக மாற முடிந்தது என்பதை எண்ணியெண்ணி இன்றும் பெருமைப்படுகிறேன். வாழ்க எம்.ஜி.ஆர். நாமம்.
