• Home
  • அழகு
  • சிவப்பழகு க்ரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து

சிவப்பழகு க்ரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து

Image

அழகுப் பொருட்கள் ஜாக்கிரதை

அழகு என்பது ஒரு வரப்பிரசாதம். ஆனால், எல்லோருக்கும் அது அத்தனை எளிதில் கிடைத்துவிடுவதில்லை. அதற்காக பியூட்டி பார்லர் போனாலும் சிலருக்கு திருப்தியான அழகு கிடைக்காது. அட, அழகு கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை, ஆபத்து வராமல் இருந்தால் சரிதான் என்கிறார்கள் நிறைய பெண்கள்.

ஆம், சில அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் விலை மலிவானவை. அவை பெரும்பாலான பெண்களுக்கு ஒத்துக்கொள்ளாது. அதனால், அந்த பொருட்களைப் பயன்படுத்திய சில மணி நேரங்களில் முகத்தில் அரிப்பு, கண்களில் எரிச்சல் தோன்றும்.

இந்த தொந்தரவு வேண்டாம் என்று சிலர் இருப்பதிலேயே நல்ல பிராண்ட் வாங்கி பயன்படுத்துவார்கள். அதிலும் ஒரு சிக்கல் என்னவென்றால், பிரபலமான நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்புகள் மார்க்கெட்டுக்கு வருகின்றன. அதனால் சரியான அழகு சாதன பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லா விட்டால் உங்கள் முகத்தில் நீங்களே விழிக்க முடியாது. அந்த அளவுக்கு பக்க விளைவுகளால் முகம் பரிதாப தோற்றத்திற்கு மாறிவிடும். காசை கொடுத்து கஷ்டத்தை விலைக்கு வாங்கியது போல ஆகிவிடும்.

எந்த பொருட்கள் அதிக ஆபத்தாக இருக்கிறது என்று பார்க்கலாம். நிறைய பேர் சிவப்பழகு வேண்டும் என்று அப்படிப்பட்ட க்ரீம்களுக்கு அதிக பணம் செலவழிக்கிறார்கள்.

சிவப்பழகு கிரீமில் ஹைட்ரோ க்யூனோன் என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது. இது சருமத்தை மிருதுவாக்கும். மேற்புற பகுதியை பிளீச் செய்யும். அதனால் சருமம் சிவப்பாக மாறிவிட்டது போல் தோன்றும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சருமத்தின் அடர்த்தி குறைந்துகொண்டே போகும். அதனால் தசைகள் தளர்ந்துபோகும். சுருக்கங்களும் தோன்றக்கூடும். இந்த ரசாயனம் சில மாய்சரைசிங் கிரீம்களிலும் கலக்கப்படுகிறது. இது தவிர சிவப்பழகு கிரீம்களில் கலக்கப்படும் வேறு சில ரசாயனங்கள் புற்றுநோய் ஏற்படவும் வழிவகுக்கும். போலி தயாரிப்புகளில் ரசாயனங்களின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் பாதிப்பும் அதிகரிக்கும்.

லிப்ஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் காரியம் சிலருக்கு உதடுகளில் அரிப்பை ஏற்படுத்தும். பொதுவாக காரியத்தின் அளவு குறைவாக இருக்க வேண்டும். எனவே சரியானதை தேர்வு செய்து  வாங்க வேண்டும். இந்த காரியம் வாய் வழியாக வயிற்றுக்குள் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதால் பல பிரச்னைகள் உருவாகலாம்.

உடலுக்கு பயன்படுத்தும் பாடிலோஷன்களிலும், வேறு பல கிரீம் களிலும் ‘ஆண்டிமைக்ரோபியல்’ எனப்படும் ரசாயனம் கலக்கப்படுகிறது. அதன் வீரியம் கூடும்போது பெண்களுக்கு தைராய்டு பிரச்சினை, விரைவில் பருவமடைதல், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, உடல் பருமன் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். சிலருக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது தவிர அலர்ஜி, ஆஸ்துமா, சொறி போன்ற பாதிப்புகளும் ஏற்டலாம்.

கண் புருவ மை, தலைக்குப்போடும் ஷாம்பூ , முகப்பூச்சு, நகப்பூச்சு, வியர்வை தடுப்பான்கள், முகத்தில் போடும் நிறமேற்றிகள் எல்லாமே அலுமினியம், பாதரசம், காரீயம், ப்ளுரிட் , சிலிகான், எதில் அல்கஹால், பாரபின், ப்ரோபிளின் கிளைக்கால் போன்ற நச்சுக்கிருமிகளின் கலவைகளால்தான் தயாரிக்கப்படுகின்றன.

இந்த நச்சுக்களால் இதய நோய், சிறு நீராக பாதிப்பு, சர்க்கரை நோய், மார்பக புற்று நோய், மலட்டுத் தன்மை, ஆஸ்த்மா, தோல் வியாதிகள் ஏற்படுவதாக ஆய்வக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அழகு சாதனப் பொருள்களால் அழகு நம்ம கையில் இருக்குமோ இல்லையோ கட்டாயம் நோய்கள் நம் கையில் இருக்கும்.

காரியம் என்ற நச்சை உதட்டுச் சாயமாக பயன்படுத்துவோர் நாளமில்லா  சுரப்பிகள் செயல்பாட்டு குறைவையும், வியர்வை தடுக்கும் நறுமண பொருள்களில் உள்ள அலுமினியம் என்ற நச்சு பெண்களுக்கு மார்பக புற்று நோயைத் தருவதாகவும், வெயிலில் முகம் கருப்பாக மாறாமல் இருக்க பயன்படுத்தும் அழகு சாதனப்பொருளில் உள்ள ஆக்சி பென்சொன், பெண்களின் சுரப்பிகள் செயல்பாட்டை தடுப்பதாகவும் அறிவியல் ஆய்வேடுகள் தெரிவிக்கின்றன. சோடியம் லாரெட் மன அழுத்த  நோயும், ப்யுடைல் க்ளிக்கோல் கல்லீரல் பாதிப்பையும், ட்ரை கிளோசன் குழந்தை பிறப்பை தடுக்கும் காரணியாகவும் செயல்பட்டு, மக்களை அழகாக மாற்றுகிறோம் என்ற பெயரில்  ‘அழ வைக்கும்’ பொருள்களாக  நம் வீட்டில் குடியேறுகின்றன.

வைட்டமின் -D  சூரிய ஒளி மூலம் அதிகமாக நம் தோலுக்கு, எலும்பிற்கு  வலு சேர்க்கும் நிலையில் சன் ஸ்க்ரீன் கிரீம் என்ற பெயரில் விற்கும் கிரீம்களை பூசுவதால், வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படுவதோடு, தோலின் நிறமும், எலும்பின் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

பொதுவாக, நாம் உண்ணும் உணவே நம்  அழகைத் தீர்மானிக்கும். சைவ உணவு உண்பவர்கள் இயற்கையாகவே அழகான தோற்றத்துடனும், உடல் எடை கூடாமலும் இருப்பார்கள்.  தோல் நிறம் மேம்பட தினமும் 3 லிட்டர் தண்ணீர், பால்,நெய், தயிர், மோர், எலுமிச்சை, மஞ்சள், தேன் , தேங்காய், கீரைகள், பழங்கள், காய்கறிகள், பாசிப்பயறு, பாதாம், வால்நட், கிரீன் டீ உண்டு வந்தாலே தோல் நிறம் மேம்படும். நம்மூர்  வேம்பு, துளசி, வில்வம், மஞ்சள், சோற்றுக்கற்றாழை ,மாவிலை,மருதாணி, செம்பருத்தி போன்றனவற்றில் கிடைக்காத அழகா செயற்கை அழகு சாதனத்தில் இருக்கிறது.

நம் அழகை விட உடல் ஆரோக்கியமும், நிம்மதியும்தான் முக்கியம்  என்பதை ஒவ்வொரு பெண்ணும் புரிந்துகொள்ள வேண்டும். அளவோடு மேக்கப் செய்துகொண்டால், ஆபத்தும் குறைவாக இருக்கும்.

Leave a Comment