என்ன செய்தார் சைதை துரைசாமி – 444
2015ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், சென்னை நகரம் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமழையை சமாளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட மாநகராட்சி நடவடிக்கைகள் குறித்து மாநகர மன்றத்தில் பேசினார் மேயர் சைதை துரைசாமி.
அப்போது அவர், ‘’புயல் மற்றும் மழையை சமாளிக்க எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள மாநகராட்சி தயார் நிலையில் இருந்தது என்பதுதான் உண்மை. இப்படி எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தியதால்தான் சென்னை மாநகரம் வெள்ள பாதிப்பில் பெரிதும் பாதிக்கப்படாமல் தப்பியது.
சென்னை மாநகர் முழுக்க மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருநூறு அடிகளாக இருந்த சாலைகள், இப்பொழுது எண்பது அடி, அறுபது அடி சாலைகளாக சுருங்கி விட்டது. இதனால் இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழைக் காலத்தில் கூடுதலாக நெரிசல் ஏற்படுகிறது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை அதிகம் பெய்து புதிய சாதனை படைத்துள்ளது. அந்த புதிய சாதனையை சென்னை நகரம் தாங்கி இருக்கிறது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை என்பது அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் முடியும் வரை நீடிப்பதாகும். இவ்வாண்டு வடகிழக்கு பருவ மழை சற்றே காலதாமதமாக, அதாவது கடந்த அக்டோபர் திங்கள் 28-ம் நாளன்று துவங்கியது.
இவ்வாறு தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியபின் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்தது. இது கடந்த 100 ஆண்டுகளில் பெய்திராத மழை அளவாகும்.
இயற்கைப் பேரிடரான மழை வெள்ளத்தால் உலகம் முழுக்க ஏராளமான பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன. நம் இந்தியாவிலும் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன. மும்பையில் கடந்த 10.09.1930 அன்று 548 மி..மீ மழையும், 05.07.1974 அன்று 575 மி.மீ. மழையும், 05.08.1976 அன்று 265 மி.மீ மழையும், 10.09.1981 அன்று 475 மி.மீ. மழையும், 26.07.2015 அன்று 944 மி.மீ. மழை 6 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதேபோல் வேறு சில வெள்ள நிகழ்வுகளும் உண்டு. 2013ல் வட இந்தியாவில் வெள்ளத்தால் இறந்தவர்கள் 5700 பேர். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் 2005ல் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1503 பேர். 1931ல் சீன நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சம் பேர். 1974ல் வங்கதேசத்தில் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 700 பேர். இப்படி உலகம் முழுக்க பருவமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு நிலை பல மாதங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கன மழை நான்கு கட்டங்களில் பெய்தது. இந்த மழையின் பாதிப்பிலிருந்து மீண்டு, மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில், 1.12.2015 அன்று மீண்டும் ஒரு மாமழையை சென்னை மாநகரும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களும் சந்தித்தன. இந்தப்பெரு மழையின் காரணமாக, மீண்டும், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன…’’ என்றார்.
- நாளை பார்க்கலாம்.
