12 மருத்துவ வழிமுறைகள்
யோகம், ஞானம், வைத்தியம் எனும் மூன்றிலும் தேர்ச்சி பெற்றவர்கள் சித்தர்கள். தவிர, உடலை நன்கு பேணிக்காப்பதன் மூலம் உயிரை நன்கு வளர்க்க முடியும் என்று கூறியவர்கள் சித்தர்கள். நோயில்லாமல் உடலைப் பேணிக்காக்க சித்தர்கள் எத்தனையோ வழிமுறைகளை வகுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதில் கீழுள்ள 12 வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினாலே நோயிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
காலையில் ஆசனம், மாலையில் உடற்பயிற்சி, இடைப்பட்ட நேரத்தில் தியானம் நாள்தோறும் செய்யப் பழக வேண்டும். கூடவே மண் பாத்திரத்தில் காய்ச்சின நீரைப் பருகுதலும் பசும்பாலையும் அனுதினமும் பருகிவர, நோயற்று வாழலாம்.
காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஆகியவற்றைச் சேர்த்து வந்தால் வாதம், பித்தம் ஆகிய நோய்களின்றி வாழலாம்.
காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுவதும், இரவில் சீக்கிரம் உறங்குவதும் நோய் தீர்ப்பதற்கு வழிகள் ஆகும். தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்தது. எண்ணெய் தேய்த்து தலைமுழுகி வருவது பஞ்சேந்திரியங்களுக்கு பலம். தெளிவு, சிரசு, முழங்கால்களுக்கு வன்மை, ரோம வளர்ச்சி, நல்ல தொனி இவை உண்டாகும்.
ஒருநாளைக்கு இருவேளை உணவு உண்டால் போதும். நினைத்தபோது எல்லாம் உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
பசித்து உணவு உண்ண வேண்டும். சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. நாட்பட்ட உணவைச் சாப்பிடக்கூடாது.
உணவில் சாதத்தைக் குறைத்து, கீரைகளையும் பசுங்காய்கறிகளையும் அதிக அளவில் சேர்க்க வேண்டும். உணவுக்குப் பின் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்துக்கொள்வது நல்லது. மாதம் இருமுறை உண்ணாநோண்பு இருத்தலும் நலம்.
அளவுக்கு அதிகமான உப்பு ஆபத்தைத் தரக்கூடியது. ஆதலால் உப்பைத் தவிர்க்கவும்.
மலம், ஜலத்தை உரிய நேரத்தில் வெளியிடாமல் அடக்கிவைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
புகையிலை, சுருட்டு, பொடி முதலான தீய பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பது நல்லது.
காமம், பகை, பிறர்க்கு உதவாமை, கர்வம், பிறரை இகழ்தல், பொறாமை உள்ளிட்ட மன உணர்வுகளை நீக்குதல் அவசியம்.
நண்பகல் தூக்கம், இரவில் விழிப்பு போன்றவை நோய்க்குக் காரணமாகும். தினமும் உறங்கும்போது இடதுகையை மடக்கி, இடதுபுறமாக ஒருக்களித்து உறங்குவது நல்லது.