• Home
  • சக்சஸ்
  • கால்பந்து விளையாட்டின் இந்தியப் பெருஞ்சுவர்

கால்பந்து விளையாட்டின் இந்தியப் பெருஞ்சுவர்

Image

கோஸ்தா பால் எனும் புரட்சியாளர்

இந்தியாவில் கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்தியதுடன், ஓர் அணியில் தொடர்ந்து 23 ஆண்டுகள் விளையாடியவர் கோஸ்தா பால். மேலும், இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாடும் வகையில் வீரர்களை உருவாக்கவும் செய்தவர் அவர். அதேநேரத்தில், ஆங்கிலேய நடுவரின் ஒருதரப்பு போக்கை கண்டித்து கால்பந்து விளையாட்டுக்கே முழுக்கு போட்டவர் கோஸ்தா.
யார் இந்த கோஸ்தா?
இவர், 1896ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி தற்போது வங்கதேசத்தில் இருக்கும் ஃபரீத்பூரில் பிறந்தார். அவர், சிறு குழந்தையாக இருந்தபோதே அவரது குடும்பம் கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்து வந்துவிட்டது. பின்னர், தனது வாழ்நாள் முழுவதும் அவர் இந்தியாவிலேயே இருந்தார். தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே கோஸ்தா பால் கால்பந்து விளையாட்டில் ஆர்வத்துடன் விளங்கினார். 1907ம் ஆண்டு தனது 11வது வயதில் கொல்கத்தாவில் உள்ள குமர்துளி கால்பந்து கிளப்பில் சேர்ந்து விளையாடத் தொடங்கினார்.
அவரது திறமையான ஆட்டத்தைப் பார்த்து அப்போது பிரபலமாக விளங்கிய கால்பந்து வீரர் ராஜன் சென், கோஸ்தா பாலை மோகன் பகான் அணியில் சேர்க்க பெரிதும் முயற்சி எடுத்தார். 1913ம் ஆண்டு மோகன் பகான் அணியில் சேர்ந்த அவர், தான் ஓய்வுபெறும்வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடினார். கால்பந்து மைதானத்தில், அவரது அபாரமான தடுப்பாட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனால் அவர், கால்பந்து விளையாட்டின் சீனப் பெருஞ்சுவர் என அழைக்கப்பட்டார்.
மோகன் பகான் அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி தனது தடுப்பாட்டத்தின் மூலம் தனி முத்திரை பதித்த அவர், 1921ம் ஆண்டுமுதல் அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அடுத்து, இந்திய கால்பந்து அணியின் கேப்டனாகவும் 1924ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கால்பந்து விளையாட்டில் இந்திய அணியை சர்வதேச தரத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று தீராத முனைப்புடன் செயல்பட்ட கோஸ்தா பால், திடீர் திருப்பமாக யாரும் எதிர்பாராத வகையில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

1936ம் ஆண்டு கொல்கத்தாவில் மோகன் பகான் அணிக்கும் கொல்கத்தா கிளப் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில், கொல்கத்தா அணி அப்போதைய ஆங்கிலேய அரசின் ஆதரவு பெற்ற அணியாகும். இந்த போட்டியில் நடுவராக கிளேட்டன் என்ற ஆங்கிலேயர் செயல்பட்டார்.
போட்டியின்போது மோகன் பகான் அணி கோல் போட்டு வெற்றி பெற்று விடக்கூடாது என்ற முனைப்புடன் ஒரு தரப்பாக செயல்பட்டார் ஆங்கிலேய நடுவரான கிளேட்டன். அதற்காக மோகன் பகான் அணியினர் பெனால்டி கார்னர் பகுதிக்குச் செல்லும்போது விசில் அடித்து அவர்களை கோல்போட விடாமல் தடுப்பதில் அக்கறை காட்டினார் கிளேட்டன். அவரது இந்த ஒருதரப்பு ஆதரவு செயலை கோஸ்தா பால் களத்திலேயே கண்டித்தார்.

தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும், கோஸ்தா பால் தலைமையிலான மோகன் பகான் அணியினரின் குரல் ஒடுக்கப்பட்டது. அதோடு, போட்டியின்போது கோஸ்தா பால் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக அப்போது ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய கால்பந்து சங்கம் அவருக்கு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து கால்பந்து ஆட்டத்தில் வெள்ளையர்கள் ஒருதரப்பாக செயல்படுவதாகவும் இனிமேல், தான் மோகன் பகான் அணி உள்ளிட்ட எந்த கால்பந்து அணிக்காவும் விளையாடப்போவதில்லை என்றும் அறிவித்து வெள்ளையர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தானாக முன்வந்து ஓய்வு பெற்றார் கோஸ்தா பால். அவரது ஓய்வு அறிவிப்பு இந்திய கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

சாதனை நாயகனான கோஸ்தா பால் 1976ம் ஆண்டு தனது 90வது வயதில் கொல்கத்தாவில் காலமானார். கால்பந்தில் கோஸ்தா பாலின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக மத்திய அரசு, அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. கால்பந்து வீரர் ஒருவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது அதுவே முதல்முறை. அவரது முழு உருவச் சிலை கொல்காத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நிறுவப்பட்டுள்ளது. அவரை கௌரவிக்கும் விதமாக 1998ம் ஆண்டு அவரது உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது மத்திய அரசு.

Leave a Comment