போட்டு வெளுக்கும் மாஜி
தமிழகத்தில் ஏற்கெனவே ஒரு முறை திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசிய பஞ்சாயத்து பற்றி எரிந்தது. தி.மு.க.வினர் கொதித்து கொந்தளித்து எப்படியோ அடங்கிப் போனது. இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை கவர்னர் அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி நிறம் அடிக்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சயாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் மாஜி அமைச்சர் மனோ தங்கராஜ், ‘’திருவள்ளுவரே உயிரோடு எழுந்து வந்து சொன்னாலும் சில ஜென்மங்கள் திருந்தாது. பிறர் உழைப்பில் வாழ்வது, பிறர் சொத்துக்களை அபகரிப்பது, பிறர் அறிவை திருடுவது போன்றவற்றை நியாயப்படுத்துவது பாசிச அணுகுமுறை. எந்த உரிமைகளையும், நெறிமுறைகளையும், நியாயங்களையும் கடந்து சொந்த நலனுக்காக பிறரின் உழைப்பு, சொத்து மற்றும் அறிவை தேசியம், மதம், இனம் போன்றவற்றோடு இணைத்து மக்களை கவர்ந்து அதிகாரத்தை கைப்பற்றும் தந்திரத்தை பாசிசவாதிகள் தொன்று தொட்டு கையாள்கிறார்கள். உலக பொதுமறை தந்த திருவள்ளுவரை மதத்தோடு இணைக்க நினைப்பது பொதுநலனுக்கு முற்றிலும் எதிரான பாசிச அரசியல் அணுகுமுறை’’ என்று கடுமை காட்டியிருக்கிறார்.
மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசன், ‘’வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பவர்கள் அதை இயக்கும் மின்சாரத்தில் எப்படி கைவைக்க முடியாதோ, அப்படித்தான் வள்ளுவருக்கு காவியடிப்பவர்கள் வள்ளுவத்தில் கைவைக்க முடியாது. மின் ஆற்றலைவிட வலிமையானது வெறுப்பு அரசியலுக்கு எதிராக வள்ளுவம் பேசும் அறத்தின் ஆற்றல்’’ என்று எதிர்ப்பு காட்டியிருக்கிறார்.
பா.ஜ.க.வினர் என்னமும் வம்புச் சண்டையை ஆரம்பிக்காதது ஏன் என்று தெரியவில்லை.