• Home
  • சட்டம்
  • நீதி தேவதையின் கண்ணைத் திறந்தாச்சு..!

நீதி தேவதையின் கண்ணைத் திறந்தாச்சு..!

Image

கண்ணாடியைத் திருப்புனா ஆட்டோ ஓடுமா சார்?

கண்களை மூடிக்கொண்டு நிற்கும் நீதி தேவதை சிலையே இது வரை இந்திய சட்டத்துக்கான குறியீடாக இருந்துவந்தது. இந்த நிலையில் இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் உத்தரவின் பேரில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

கண்களை மூடிய நீதி தேவதை சிலை பாரபட்சமற்ற தன்மையைக் குறிக்கிறது. பணக்காரன், ஏழை, சாதி, மதம், அந்தஸ்து என எந்த வித பாகுபாடும் இன்றி நீதி வழங்குவதை குறிக்கும் விதமாக கண்களை மூடிய நீதி தேவதை சிலை வைக்கப்பட்டது. அதே நேரத்தில், கையில் இருந்த வாள் அதிகாரத்தையும் தண்டிக்கும் சக்தியையும் குறிக்கிறது.

இப்போது அமைக்கப்பட்டுள்ள புதிய நீதி தேவதை அரசியலமைப்பு விழுமியங்களில் வேரூன்றிய நீதியின் முற்போக்கான பார்வையை பிரதிபலிக்கிறது. கண்களை திறந்த சிலை, அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதைக் குறிக்கிறது. அதே நேரத்தில் அரசியல் சட்டம் வன்முறை மூலம் அல்ல, நாட்டின் சட்டங்களின்படி நீதி வழங்கப்படுகிறது என்பதை வலியுறுத்துகிறது என்கிறார்கள்.

அண்மையில், இந்திய தண்டனைச் சட்டத்தை பாரதிய நியாய சன்ஹிதாவுடன் மாற்றியமைத்தது போல, காலனித்துவ காலச் சின்னங்களிலிருந்து விலகிச் செல்வதன் முயற்சியாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், நீதி தேவதைக்குப் பதிலாக பாரத மாதாவை அலங்காரப் பதுமையாக மாற்றி, நகை, கிரீடத்துடன் விளம்பர மாடலாக மாற்றியிருக்கிறார்கள். பாரத மாதாவுக்கு ஜே என்று குரல் ஓங்கி ஒலிக்கிறது.

காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் ஏற்கத்தக்கதே. அதேநேரம் டெம்பிளேட் மாற்றினால் மட்டும் போதாது. விசாரணை முறைகளில், தீர்ப்புகளில் வேகமும் நீதியும் தெரியவேண்டும். அதுவே முக்கியம். கண்ணாடியைத் திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும் என்ற கதையாக மாறிவிடக் கூடாது.

Leave a Comment