பதறவைக்கும் வரலாற்று துயரம்
அரைப் படி நெல் கூலிஉயர்வு கேட்டதற்காக 44 உயிர்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டுவரும் கீழ்வெண்மணியின் கதை அத்தனை சுருக்கமானது அல்ல. உண்மையில் அது கூலி உயர்வுப் போராட்டம் மட்டுமல்ல, வர்க்கப் போராட்டம்.
அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் நாகை, திருவாரூர் பகுதி `கீழைத் தஞ்சை’ என அழைக்கப்பட்டது. தஞ்சாவூர் பகுதி `மேலத் தஞ்சை’ எனப்பட்டது. மேலத் தஞ்சையில் ஜமீன்தார்கள் கையிலும், கீழைத் தஞ்சையில் திருவாரூர் பகுதியில் கோயில்கள் மடங்கள் கைகளிலும், நாகைப் பகுதியில் பண்ணையார்கள் கைகளிலும் நிலங்கள் குவிந்துகிடந்தன.
நிலமற்ற பெருவாரியான பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கூலி உழைப்பாளிகளாக அல்லாமல் பண்ணை அடிமைகளாக உழைத்துவந்தனர். வேலை வாங்குவதற்காகப் பண்ணை அடிமைகளைச் சாட்டையால் அடிப்பதும் வாயில் சாணிப்பால் புகட்டுவது எல்லாம் சாதாரண நிகழ்வாக இருந்தன.
அந்த காலகட்டத்தில், `அடிச்சா திருப்பி அடி’ என்ற முழக்கத்தோடு செங்கொடியைக் கையில் ஏந்தி சீனிவாசராவ் தலைமையில், தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தோழர்களாக ஒன்றிணைந்து நிமிர்ந்து நின்றார்கள். அரசாங்கமும் பண்ணைகளும் இந்த எழுச்சியை ஒடுக்க நடத்திய அராஜகத்தில் வாட்டாக்குடி இரணியன், ஜாம்புவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், திருச்சி சிறையில் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட களப்பால் குப்பு போன்ற பல தோழர்களின் உயிர்த் தியாகம் செய்தனர்.
இத்தனை போராட்டத்துக்குப் பிறகுதான் இனாம்தாரி ஒழிப்பு, ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டங்களும் 1952-ம் ஆண்டில் `தஞ்சாவூர் பண்ணையாள், சாகுபடிதாரர் பாதுகாப்புச் சட்டம்’ போன்றவை நிறைவேற்றப்பட்டன.
சட்டங்கள் வந்தாலும் அதை நடைமுறைப்படுத்த பண்ணையார்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள் தயாராக இல்லை. 5,000 ஏக்கர் 6,000 ஏக்கர் நிலச் சொந்தக்காரர்களான குன்னியூர் சாம்பசிவ அய்யர், வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் போன்ற நிலப்பிரபுக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். வடபாதி மங்கலம், நெடும்பலம் போன்ற பகுதிகளில் இருந்த நிலப்பிரபுக்கள் திராவிட இயக்க ஆதரவாளர்களாக இருந்தனர். அவர்கள் யாரும் சட்டங்களை மதிப்பதாகவே இல்லை.
சட்டப்படி கூலி கேட்டும் போராட்டங்கள் தொடர்ந்தன. `பறையன் கட்சி’ என்று மிராசுகளால் ஏளனம் செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் போராட்டங்கள் தொடர்ந்தன. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக மிராசுகள் ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’ என்ற பெயரில் மஞ்சள் கொடியுடன் அணி திரண்டனர். விவசாயக் கூலிகளின் போராட்டத்தை அடக்க, ஆட்சியாளர்களும் கிசான் போலீஸ், கிசான் தாசில்தார் எனச் சிறப்புப் படை வரிசையைத் தஞ்சைத் தரணிக்கு மட்டும் உருவாக்கியது.
ஆனாலும் சாட்டையடிக்கும் சாணிப்பாலுக்கும் முடிவு கட்டியது செங்கொடி. பண்ணையடிமை முறையை ஒழித்தது செங்கொடி. தெருவில் செருப்பு போட்டு நடக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தது செங்கொடி. வயலில் நிற்கும் பெண்களின் முழங்கால் சேலையைக் கரண்டைக்காலுக்கு இறக்கிவிட்டது செங்கொடி.
இந்த நேரத்தில். `கூலி உயர்வுக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பண்ணைகள், அதை மீறியதால் வெண்மணியிலும் சுற்று கிராமங்களிலும் அறுவடைக்கு வயலில் இறங்க மாட்டோம்’ எனத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டினி கிடந்த உழைப்பாளிகளை அழைத்து வந்து வயலில் இறக்கினர் பண்ணைகள்.
‘வெளியிலிருந்து ஆள்களைக் கொண்டுவந்து வயல்களில் இறக்கக் கூடாது’ என்பது ஒப்பந்தம். அதை மீறிய பண்ணைகளுக்கு எதிராகச் செங்கொடியின் கீழ் உழைப்பாளிகள் உறுதியுடன் நின்றனர். பண்ணைகளுக்கு இது தங்கள் வர்க்கச் சுரண்டலையும் சாதிய ஒடுக்குமுறையையும் காப்பாற்றும் போராட்டம். தொழிலாளர்களுக்கோ `இது வாழ்வா… சாவா?’ என்ற போராட்டம்.
இந்தப் போராடம் நடந்த 1968-ம் ஆண்டு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் 27 வயதேயான என்.பக்கிரிசாமி, சிக்கல் பஸ் நிலையம் அருகில் அடித்துக் கொல்லப்பட்டார். திருவாரூர் பகுதியில் காங்கிரஸை விட்டு வெளியேறி செங்கொடி இயக்கத்துக்கு வந்த கேக்கரை ராமச்சந்திரன் போலீஸார் முன்னிலையில் வயலில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். விவசாயச் சங்க ஊழியரான இரிஞ்சூர் சின்னப்பிள்ளை பண்ணையாரின் ஆள்களால் கடத்திச் செல்லப்பட்டார். அதன் பிறகு ரத்தம் தோய்ந்த அவரது துண்டு மட்டுமே கிடைத்தது. ஆனாலும், போராட்டம் ஓயவில்லை.
1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் நாள். நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரும் காங்கிரஸ்காரருமான கோபாலகிருஷ்ண நாயுடு நேரடியாகக் களத்தில் இறங்கி, வெண்மணி மக்களின் குடிசைகளுக்குத் தீவைத்தார். அவர் தலைமையில் நாட்டுத் துப்பாக்கிகளுடன் வந்தவர்கள் விவசாயிகளைத் தாக்கினார்கள், துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். அப்படி தப்பி ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் இருந்த ராமையன் என்பவரது குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர்.
உடனடியாக கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டது. அக்குடிசை எரிந்து சாம்பலானது. அலறல் சத்தத்துடன் பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உயிருடன் அலறி உடல் கருகி மாண்டனர். இந்த சம்பவம் நடந்த தருணத்தில் அண்ணா தலைமையில் தி.மு.க, மாநில ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. பிராமணிய எதிர்ப்பையும் தமிழின அரசியலையும் முன்வைத்த தி.மு.க, சாதிய-வர்க்கப் பிரச்னையில் சமரசம் செய்துகொண்டதைத்தான் வெண்மணிப் பிரச்னையில் அவர்களின் நிலைப்பாடு காட்டுகிறது
44 அப்பாவி உயிர்கள் துடிதுடித்துச் செத்தது இந்தியாவின் மனசாட்சியை அன்று உலுக்கி எடுத்தது. நிலப்பிரபுத்துவத்தின் ஆணவத்திற்குத் தக்க பதிலடி தர வேண்டும் எனும் நியாயமான உணர்வு எங்கும் நிறைந்திருந்தது. அதைச் சட்டபூர்வமாக நிறைவேற்றிடவே செங்கொடிச் சங்கம் முயன்றது. ஆனால், நமது நீதிமன்றமும் ஆளும் வர்க்கச் சார்புகொண்டது என்பதை நிரூபிக்கும் வகையிலேயே உயர் நீதிமன்றத் தீர்ப்பு இருந்தது.
”அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். எனவே அவர்கள் குற்றவாளிகள் அல்ல” நீதிமன்றம் சொன்னது. அதனாலே கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இது ஒரு பொருளாதாரப் பிரச்னை என்பதைக்காட்டிலும், சமுதாயப் பிரச்னை என்பதுதான் முக்கியம். `பறப்பய ஒருத்தன், என்னைக் கைநீட்டி அடிக்கிறதை எல்லோரும் பார்த்துக்கிட்டா நிக்கிறீங்க?’ நாயுடுவின் ஆவேசம் அவரை ஒரு பறப்பய அடித்ததுதான்’ என்று வருகிறது. வர்க்கப்பிரச்னையும் சாதிப்பிரச்னையும் பிரிக்க முடியாமல் இணைந்ததுதான் வெண்மணி என்ற புரிதல்தான் சரியானது.
அது வர்க்கப் போர் மட்டுமல்ல; சமூகப் போராகவும் இருந்தது. அதனால்தானே மாண்டவர்கள் எல்லாம் தலித்துகளாக இருக்க, முக்கியமான குற்றவாளிகள் எல்லாம் தலித் அல்லாதவர்களாக இருந்தார்கள். இந்திய நிலப்பிரபுத்துவம் சொத்துடைமையால் மட்டுமல்லாது பிறப்பின் அடிப்படையிலான சாதியக் கட்டமைப்பாலும் வடிவமைக்கப்பட்டது. “பண்ணையடிமைகள் பேரம் பேசுவதா?” எனும் ஆளும் வர்க்க ஆதிக்க உணர்விலிருந்து மட்டுமல்ல, உயர்சாதிய ஆதிக்க உணர்விலிருந்தும் ஏற்பட்ட ஆத்திரமே அந்தப் படுகொலைகளுக்குக் காரணம்.
இந்த 50 ஆண்டுகளில் தமிழகக் கிராமப்புற வாழ்வில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. நிலச்சீர்திருத்தச் சட்டங்கள், விவசாயம் லாபம் தரும் தொழிலாக இல்லாமல் போனது, நகர்ப்புறங்களில் ஆலைத்தொழில் விரிந்தது, தகவல் தொழில்நுட்பம் மேம்பட்ட புதிய துறைகளின் வரவு போன்ற பல காரணிகளால் பண்ணையார் குடும்பங்கள் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கி, நிலவுடைமை முன்னைக்காட்டிலும் பரவலாகியிருக்கிறது.
மறுபுறம் இடஒதுக்கீட்டின் பயனால் ஓரளவு கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்ற தலித் மக்கள் பொருளாதார வாழ்வில் சற்றே முன்னேறினர். சமூக வாழ்வின் காத்திரமான மாற்றங்களுக்குப் பொருளாதார மாற்றம் அடிப்படையாக இருக்கிறது என்றாலும், மாற்றம் தானாக நடந்துவிடுவதில்லை என்பதை யதார்த்த வாழ்வு உணர்த்தி நிற்கிறது.
தமிழகக் கிராமப்புறங்களில் இடைநிலைச் சாதியினரும் தலித் மக்களும் எதிரும் புதிருமாக இருப்பதாக ஒரு தோற்றம் உள்ளது. யதார்த்தம் என்னவென்றால், இடைநிலைச் சாதியினரிலும் ஆகப் பெரும்பாலோர் உழைக்கும் மக்களே. விவசாயக் கூலிகளில் பாதிக்குப் பாதியாக இந்த இரண்டு பகுதி மக்களும்தான் உள்ளனர். வர்க்க ரீதியாகப் பார்த்தால், இந்த இரு பகுதியினரின் நலனும் ஒன்றே. இவர்கள் வர்க்க ரீதியாக ஒன்றுபட்டுவிடக் கூடாது என்று, இடைநிலைச் சாதிகளில் உள்ள ஆதிக்கவாதிகள் சாதிய ஒடுக்குமுறைகளைத் தூண்டிவிடுகிறார்கள். இவர்களை அம்பலப்படுத்தியும், சாதிய ஒடுக்கு முறைகளை எதிர்த்துக் களத்தில் நின்று போராடியும் வர்க்க ஒற்றுமையைக் கட்ட வேண்டும்.
இத்தகைய ஒற்றுமையே தீண்டாமையை ஒழிக்கும், சாதி ஒழிப்புக்கான அடித்தளத்தை அமைக்கும். அது தான் வெண்மணித் தீயில் எரிந்து சாம்பலான அந்த 44 பேரின் தியாகத்திற்கு நாம் செலுத்தவேண்டிய அஞ்சலி.