• Home
  • யாக்கை
  • சமையலறையில் ஒளிந்திருக்கும் ஆபத்து

சமையலறையில் ஒளிந்திருக்கும் ஆபத்து

Image

கேர்ஃபுல் தோழி

நம் உடல் நலம் காப்பதில் சமையலறையே பெரும்பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட சமையலறையில்,  கொஞ்சம் கவனம் சிதறினாலும் நமக்கு ஆபத்துதான். அதனால்தான் அந்த அறையில் எப்போதும் அதிக பாதுகாப்புடனே செயல்பட வேண்டும். சமையலறையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இங்கே பார்ப்போம்…

சமையலறையில்  வேலை பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்தில், உங்கள் கவனத்தைத் திசை திருப்புவதில் குழந்தைகளும், செல்லப்பிராணிகளும் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும். அதனால் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகையால், அவர்களை சமையலறைக்குள் அனுமதிக்காதீர்கள்.

சமையலறையில் நீண்டகைகளைக் கொண்ட லூசான ஆடைகள் மற்றும்  சிந்தடிக் வகை ஆடைகளை அணியக்கூடாது. காரணம், அவ்வகை ஆடைகளில் தீ பற்றிக்கொண்டால், அவை உங்கள் சருமத்தோடு ஒட்டிக்கொள்ளும். இதனால் காயங்கள் அதிகமாகும். தவறிவிழும் பாத்திரம் மற்றும் ஆயுதங்களால் உடல் பாகங்கள் பாதிக்கப்படலாம். ஆகையால், சமையலறையில் எப்போதுமே பாதுகாப்பான ஷூக்கள் அல்லது கால்களை மூடும் செருப்புகளை அணிந்திருக்க வேண்டும். எந்த காரணத்தாலும்,  அவசரஅவசரமாகச் சமைக்காதீர்கள். அதனால்  கவனக்குறைவு, விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

சமையலறையில் சூடான பாத்திரங்கள் மற்றும் குக்கர்களை கையாளும்போது, ஹாட் பேட்களை (சூட்டைத் தாங்கும் கையுறை) பயன்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு, மைக்ரோவேவ்வில் வைக்கப்படும் பாத்திரங்களில் பொதுவாக கடும் சூடு இருக்கும். அவைகளை வெறும் கையால் தொடவே முடியாது. ஆகையால், அவைகளை தூக்க ஹாட் பேட்கள் கண்டிப்பாக தேவைப்படும்.

அடுப்பில் எதையாவது கிளறும்போது, நீங்கள் நிற்கும் திசையை நோக்கிக் கிளறாதீர்கள். நீங்கள் நிற்பதற்கு எதிர் திசையிலேயே எப்போதும் கிளறுங்கள். அப்படிச் செய்தால் தீக்காயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.  சமையலறையில் எப்போதும் கூர்மையான கத்தியையே பயன்படுத்த வேண்டும். காரணம், கூர்மையில்லாத கத்தி அடிக்கடி வழுக்கி காயங்களை ஏற்படுத்தக்கூடும். அதுபோல், நன்றாக பழக்கம் ஏற்படும் வரை கூர்மையான கத்தியை  ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.


பொதுவாக, சமையலறையில் எந்த ஓர் உபகரணத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பும், அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என, அதனுடன் சேர்ந்துவரும் பயன்பாட்டு புத்தகத்தைக் கண்டிப்பாக படிக்க வேண்டும். ஃபுட் ப்ராஸசர் போன்ற உபகரணங்களைத் தண்ணீரில் கழுவக் கூடாது. இது, மின்கசிவை ஏற்படுத்தி உங்கள் உபகரணத்தைப் பாதித்துவிடும்.

சமைக்கும்போது சில பொருட்கள் சிந்தும்; சிதறும். ஆகையால், கீழே சிதறிக் கிடக்கும் பொருட்களை உடனே  துடைத்துவிடுங்கள். அதுகூட, விபத்துக்குக் காரணமாக அமையலாம். சூடான பாத்திரங்களைக் கையாளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக, நம்மால் தூக்க முடிந்த எடைகொண்ட பாத்திரங்களை பயன்படுத்துவதே மிகவும் நல்லது.  

ஆவி பறக்கும் உணவுகளைக் கையாளும்போது  அதிக கவனம் தேவை. உதாரணத்துக்கு மைக்ரோவேவ்வில் எதையாவது கொதிக்கவைக்கும்போது, அதன் மூடி உங்கள் பக்கம் திறந்து இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எரிவாயு சிலிண்டர் உருளைகள், கேஸ் அடுப்பு, எலெக்ட்ரிக் ஸ்டவ் உள்ளிட்டவைகளை, வேலை முடிந்ததும் அணைத்து வைப்பதே நல்லது. எளிதில் தீப்பற்றக்கூடிய இடத்தில் மண்ணெண்ணெய் கேன்கள், சானிடைஸர்கள், ஊதுபத்திகள்  வைப்பதைத் தவிர்க்கவும்.

Leave a Comment