• Home
  • சினிமா
  • தமிழகத்தின் நகைச்சுவை சக்கரவர்த்தி..!

தமிழகத்தின் நகைச்சுவை சக்கரவர்த்தி..!

Image

என்.எஸ்.கிருஷ்ணன் எனும் வள்ளல்


திரைப்படங்களில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு மக்களைச் சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர். அவர், குமரி மாவட்டத்திலுள்ள ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29ம் நாள் பிறந்தார். நாகர்கோயில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்பதன் சுருக்கம்தான் என்.எஸ்.கிருஷ்ணன். குடும்ப வறுமை காரணமாக படிப்பைத் தொடர இயலாமல், மளிகைக் கடையில் பணி புரிந்தார். பின்னர், அந்தப் பகுதியில் இருந்த நாடகக் கொட்டகையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதால், அங்கு சென்று சோடா மற்றும் தின்பண்டகளை விற்றார்.
அங்கு பார்த்த காட்சிகளை தன் நண்பர்களிடையே நடித்துக் காட்டி தன் நடிப்புப் பயிற்சியை மேலும் வளர்த்துக்கொண்டார்.

அவரது நாடக ஆசையை அறிந்த அவரது தந்தை, 1924ம் ஆண்டு நாகர்கோயிலில் உள்ள பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிட்டார். அங்கு அவர் கற்றுக் கொண்டவைதான் வாழ்நாள் முழுவதும் அவரது சாதனைகளுக்கு வித்திட்டது. அங்கு நடிப்பு மட்டுமல்லாது, பாடவும், வில்லுப்பாட்டும் கற்றுக் கொண்டு ஒரு முழுமையான கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். அதன்பின்னர் நாடகத் துறையில் தீவிரமாக இயங்கத் தொடங்கினார்.

பல மேடைகள் ஏறி, மக்களின் மனங்களை வெற்றிக் கொள்ளத் தொடங்கிய என்.எஸ்.கே, ஒரு கட்டத்தில் சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். மேலும், தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் வலம்வந்தார். 1936ல் வெளிவந்த சதிலீலாவதி என்ற படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில்தான் எம்.ஜி.ஆரும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார்.
இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர்.

 நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி  பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடிய கிருஷ்ணன், பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தார். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

 கலைவாணர் புகழின் உச்சியில் இருந்தபோது அவரது வாழ்க்கையை முடக்கிப்போட்டது ஒரு வழக்கு. பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும்  தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகக் கூறி இருவரும் கைதானார்கள். பல்வேறு மாதங்களுக்கு பின், லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப்பின்னும் விடுவிடுவென படங்களில் நடிக்கத் துவங்கினார் கலைவாணர்.


கலையுலகில் கருத்துக்களை வழங்கியதுபோல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வழங்கியவர். காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார். தன்னைத் தேடி வருபவர்களின் துயரங்களை  கேட்டு, அவர்களுக்கு உதவுவதில் அக்கறை காட்டும் மனிதாபிமானியான என்.எஸ்.கே., ஒருகட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்.


அவரது இறுதிநாட்களில், அவரிடம் வேலை செய்த ஒருவர், ‘தன் மகளுக்குத் திருமணம்’ என்று வந்து நின்றபோது, சுற்றும்முற்றும் பார்த்து கண்ணில்பட்ட ஒரு விலையுயர்ந்த வெள்ளி கூஜாவை எடுத்துக்கொடுத்து, ‘என்னிடம் பணமாக கொடுக்க எதுவும் இல்லை. இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்’ என்றாராம். அதுபோல், தினமும் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம்.  ஏதோதோ காரணம் சொல்லி பணம் கேட்க, இவரும் பணம் கொடுப்பாராம்.

‘அவன் உங்களை ஏமாற்றுகிறான்’ என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்ல, ‘ ஏமாற்றி அவன் என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப் போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே’ என்பாராம், மனிதாபிமானி என்.எஸ்.கே.
இப்படி, தன் நகைச்சுவையால் தமிழகத்தைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த என்.எஸ்.கே., உடல்நிலை பாதிப்பால் 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி இவ்வுலகைவிட்டு மறைந்தார்.

Leave a Comment