ஞானகுரு தரிசனம்
பிரமாண்டமான பங்களாவுக்குள் நுழைந்ததும், ஞானகுருவையும் வேதாச்சலத்தையும் தனி அறையில் இருக்கச் செய்தார்கள். கொஞ்சநேரத்தில் ‘குருஜி’ அழைக்கிறார் என்று பக்கத்து அறைக்கு கூட்டிச் சென்றார்கள்.
குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில், நவீன சோபாவில் அமர்ந்திருந்த குருஜி எழுந்து நின்று வரவேற்று அமரச் சொன்னார். வேதாசலம் கூச்சத்தோடு அமர, ஞானகுரு எந்த யோசனையும் இன்றி எதிரே இருந்த ஒரு சோபாவில் அமர்ந்து, சுருட்டை வெளியே எடுத்தார்.
குருஜிக்குப் பின்னே நின்ற சீடன் வேகமாக அருகே வந்து, ‘‘எங்கள் குருஜிக்கு புகை அலர்ஜி…’’ என்று இழுத்தான்..
‘‘சரி… கொஞ்சநேரம் உங்கள் குருஜியை வெளியே இருக்கச் சொல்லுங்கள், புகை பிடித்ததும் கூப்பிடுகிறேன்’’ என்று சொல்லிவிட்டு பற்றவைத்தார் ஞானகுரு.
நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த குருஜி, ‘‘பரவாயில்லை… புகையுங்கள்’’ என்று சொல்லிவிட்டு சீடர்களை கண்களாலே வெளியே அனுப்பினார். கடைசி சீடன் வெளியேற முயன்றபொழுது அவனை மட்டும் கூப்பிட்டு நிறுத்தி, ‘‘இவர்களுக்கு நம் மையத்தில் தயார் செய்யப்பட்ட இயற்கை பானம் கொண்டு வாருங்கள்’’ என்று சொல்லி அனுப்பினார்.
எங்களைப் பார்த்து, ‘‘நெருப்பை பயன்படுத்தாமல் தயாரான இயற்கைப் பானத்தை சுவைத்துப் பாருங்கள், அற்புத பலம் தரக்கூடியது…’’ என்றார்.
‘‘ஏன் நெருப்பு பாவகரமானதா…?’’ என்று கேள்வியை வீசினார் ஞானகுரு.
‘‘அப்படியில்லை…’’ என்று தடுமாறியவர் சுதாரித்துக்கொண்டு, ‘‘இயற்கையாக காய்கறிகளில் கிடைக்கும் சக்திகள் நெருப்பினால் அழிந்துவிடக் கூடும் என்பதால்தான் நெருப்பை தவிர்க்குமாறு எங்கள் மையத்தில் அறிவுறுத்துகிறோம்’’ என்றார்.
அந்த பதில் ஞானகுருவுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் அமைதியானார். உடனே வேதாசலம் ஞானகுருவை சுட்டிக்காட்டி, ‘‘இவரோட பேரு என்னான்னு எனக்குத் தெரியாது. இங்கேயே சுத்திக்கிட்டு இருப்பார், திடீர்னு நாலைஞ்சு வருஷம் காணாமப் போயிடுவார். நிறைய படிச்சவர் போல திருமந்திரம், வேதம் எல்லாம் சொல்லுவார். பிச்சைக்காரனைப் போல ரோட்டுல குடிச்சுட்டு விழுந்தும் கிடப்பார். ஆனா எதைப்பத்திக் கேட்டாலும் பதில் சொல்வார். எத்தனையோ பேர் இவர்கிட்ட சீடரா இருக்கேன்னு தொந்தரவு பண்ணியிருக்காங்க, பதிலே சொல்லாம காணாமப் போயிடுவார்’’ என்றார்.
உடனே குருஜி, அவரைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். ‘‘தமிழ்நாட்டுல நிறைய இடங்கள்ல எங்க ஆசிரமம் இருக்குது, மக்கள் எல்லோரும் சந்தோஷமா, நிறைவா வாழணும்கிறதுதான் எங்களோட குறிக்கோள். என்னை எல்லோரும் குருஜின்னு சொன்னாலும், நான் தலைவனா நினைச்சுக்கிறதில்லை, கடவுள் அவதாரமாகவும் சொல்லிக்கிறதில்லை. எல்லா மனிதர்களும் மண், பொன், பொருள், பதவி, பெண் போன்றவற்றில் இருந்து விழிப்பு உணர்வு அடைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்’’ என்றார்.
‘‘இதைச் சொல்ல ஆசிரமங்கள் எதுக்கு…?’’ ஞானகுரு கேள்வி கேட்டதும், புன்னகைத்து அந்த கேள்வியைத் தவிர்த்து, ‘‘உங்களுடைய ஆன்மிக அனுபவங்களைக் கேட்க ஆர்வமா இருக்கேன்…’’ என்றார்.
‘‘நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலையே..’’ ஞானகுரு மீண்டும் கேட்டார்.
‘‘ஆசிரமம் அமைக்கிறது என்னோட விருப்பம் இல்லை. எல்லாமே சீடர்களோட ஆசை, முயற்சிதான். அவங்க ஆசையை நிறைவேத்துறதுக்காக ஆசிரமங்கள் கட்டி அங்கிருந்து முடிந்தவரை மக்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் வேலைகளை செய்கிறோம். இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பாக இதனை பயன்படுத்துகிறோம்.’’ என்றார்.
‘‘இதுவரை யாராவது பயன் அடைந்திருக்கிறார்களா?’’
பதில் சொல்ல விருப்பம் இல்லை என்பது போன்று குருஜி அமைதி காக்கவே, ஞானகுரு சுருட்டை அணைத்துவிட்டு பேசத் தொடங்கினார்.
‘‘கோயில், ஆசிரமங்கள், பிரார்த்தனைக் கூடங்கள் எல்லாமே மக்களுக்கு போலி ஆறுதல் தரலாமே தவிர அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லாது, மெய்ஞானம் தரவும் செய்யாது. புத்தருக்கு போதி மரத்தின் அடியில், மகாவீரருக்கு வெட்டவெளியில், முகமது நபிக்கு மலையில் ஞானம் கிடைத்தது. ஆசிரமத்தில் எவருக்கும் ஞானம் கிடைத்ததில்லை… ஆசிரமத்தில் எந்த விழிப்பும் உண்டாகாது. உங்கள் அடிமைகள் மட்டுமே உருவாவார்கள்…’’ என்றபடி வசதியாக சாய்ந்து உட்கார்ந்தார்.