நாடுகளுக்கு இடையில் வேலி எதற்கு..?
ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்து பயணிகளின் அவசரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஞானகுரு.
‘‘சாமி.. வணக்கம்’’ ஆஜானுபாகுவான உருவத்தில் ஒரு ராணுவ அதிகாரி ஆஜரானான். அவனுடைய உடுப்பைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.
’’சொந்த ஊருக்குத்தானே போறீங்க..?’’
’’ஆமாம் சாமி… ராமநாதபுரம்’’
’’உங்க ஊருக்கு அந்நிய ராணுவத்தால ஏதாவது ஆபத்து இருக்குதோ..?’’ முகத்தை சீரியஸாக வைத்தபடி கேட்ட ஞானகுருவின் தடாலடிக் கேள்வி அவனுக்குப் புரியவில்லை என்பது அவனது குழம்பிய முகத்தில் தெரிந்தது.
’’இல்லே… ராணுவ உடையில் போறீங்களே… இறங்குனதும் சண்டை போட வேண்டி இருக்குமோன்னு கேட்டேன்…’’
அப்போதும் கேள்வியின் குதர்க்கம் புரியாமல், ‘‘ஓ… இந்த டிரெஸ்ஸோட போறதைச் சொல்றீங்களா சாமி…. இப்படிப் போனாத்தான் சாமி மரியாதையா இருக்கும், பார்க்குறவங்க மதிப்பாங்க, பயப்படுவாங்க…’’ என்றான் பெருமையாக.
’’ஆடைக்குத்தான் மரியாதை என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறாய். நீ கெட்டிக்காரன்தான்’’ என்று புன்னகைத்த பிறகுதான், கிண்டல் உறைத்தது. சட்டென அவனிடம் சீற்றம் எட்டிப்பார்த்தது. ’’சாமி… என்னைப் பத்தித் தெரியாமப் பேசுறீங்க… கார்கில் போர்ல நாலுபேரை நேருக்குநேர் நின்று ஷூட் பண்ணியிருக்கேன். அதுக்காக டிஃபென்ஸ் மினிஸ்டர் கையால விருது வாங்கி இருக்கேன்…’’ சீருடையில் தொங்கிய விருதுகளில் ஒன்றைக் காட்டினான்.
’’ம்… நாகரிகமான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், ‘நாட்டுக்காக நான்கு கொலைகளைச் செய்தேன். அதற்கு விருது கொடுத்திருக்கிறார்கள்’ என்கிறாய் அப்படித்தானே…?’’
இப்போது கொஞ்சம் யோசித்து, கோபத்தைக் குறைத்துப் பேசினான்.
’’சாமி… செத்தவனுக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதமா? நாட்டுக்காகத்தான செஞ்சேன். அதை கொலைன்னு எப்படிச் சொல்ல முடியும்… யுத்த தர்மம் அதுதானே..?’’
’’ஆஹா… நாட்டுக்காக நீ எதையும் செய்துவிடுவாயோ… அதர்மமான இந்த தர்மத்தை கெட்டியாகப் பிடித்திருக்கிறாய். சரி, சொல். உனக்கு இந்த உலகில் யாரை மிகவும் பிடிக்கும்?’’
’’என் மனைவிதான் சாமி. ஊரில் எனக்காகவே காத்திருக்கும் என் மனைவியின் கடிதத்தைப் படித்தாலே என்னையறியாமல் கண்ணீர் வந்துவிடுகிறது. அடுத்ததாக என்னுடைய குழந்தையின் குரலை கேட்கும் போதெல்லாம் ஆனந்தம் வருகிறது’’
’’அப்படியென்றால் உன்னிடம் எக்கச்சக்க அன்பும் இருக்கிறது, கொலை வெறியும் இருக்கிறது … அப்படித்தானே?’’
’’சாமி… என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை… நேரடியா சொல்லுங்க சாமி…’’ அருகிலிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கேட்டான்.
’’உன்னுடைய மனதில் உண்மையான அன்பு இருக்கும்பட்சத்தில், எவரையாவது வெறுக்க முடியுமா? கொல்ல முடியுமா? எதிரியைக் கொன்று அதைக் கொண்டாட முடியுமா? நீ கொன்று போட்டவனுக்கும் ஒரு மனைவி, குழந்தை இருக்கும் என்பது தெரியுமா? அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தக் குடும்பம் ஏமாந்துபோய் அழுதிருப்பார்கள் என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறாயா? ’’
’’நான் செஞ்சது தப்புன்னு சொல்றீங்களா சாமி?’’ உடனே கலவரமானான்.
’’உன் மீது தவறு இல்லை, இந்த ராணுவம் என்ற அமைப்பே தவறுதான். எதற்காக இந்தியா, பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் என்று நாடுகள் பிரிந்திருக்க வேண்டும். எல்லா இடத்திலும் நம்மைப் போன்ற மக்கள்தானே இருக்கிறார்கள். உலகில் இருக்கும் மக்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து வாழ்ந்தால் ராணுவம் தேவையில்லை, கொடியும் தேவை இல்லை… கொலையும் தேவையில்லை என்பதுதான் என் போன்ற பிச்சாண்டிகளின் ஆசை…
மொழியாலும் இனத்தாலும் உலக மக்கள் வேறுபட்டு இருந்தாலும் உணர்வுகளால் ஒன்றாகத்தானே இருக்கிறார்கள். அழுகைக்கும் சிரிப்புக்கும் ஏது பாஷை? காதலுக்கும் காமத்துக்கும் ஏது இனம்? அன்பு இருக்கும் இடத்தில் அடக்குமுறைக்கு என்ன வேலை…’’ அந்த பேச்சு அந்த ராணுவ அதிகாரிக்குப் பிடிக்கவில்லை என்றாலும், குற்ற உணர்ச்சி ததும்பும் குரலில், ‘‘சாமி… நான் மட்டுமில்ல, ராணுவத்தில வேலை பார்க்கிற நிறையபேர், போரையும் கொலை செய்ய விரும்புறதில்லை. எப்போ, யாருக்கு, யார் கையால் மரணம்னு தெரியாம வாழ்ந்துக்கிட்டு இருக்கிறோம், பெண்டாட்டி, பிள்ளையை விட்டுட்டு குளிர்ல, மழை, வெயில்ல பாடாப்படுறோம். நீங்க சொன்னமாதிரி ஏதாவது நடந்தா நல்லதுதான், ஆனா எனக்கு ராணுவத்தை விட்டா வேற வேலை தெரியாது சாமி….’’
’’வீட்டுக்காக என்றாலும் நாட்டுக்காக என்றாலும் அதன் பெயர் கொலைதான். நீ அந்த வேலையை விட்டு வெளியே வந்தால், அந்த வேலைக்குச் செல்ல ஆயிரம் பேர் காத்திருப்பார்கள் என்பதுதான் நிஜம். ஆகவே, நீ மட்டும் மனம் மாறுவதில் அர்த்தம் இல்லை… இந்த அரசியல் மாற வேண்டும் மனிதனை மனிதன் பிரித்துவைக்கும் மனப்பான்மை மாற வேண்டும்.
கருப்பர்கள், வெள்ளையர்கள் என்றோ இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என்று பாகுபாடு பார்த்து காற்று அடிப்பதில்லை. அப்படியொரு சுதந்திரக் காற்று உலகம் முழுவதும் வீசட்டும். வேலிகள் இல்லாத உலகம் அமையட்டும்…” என்றார் ஞானகுரு.
‘’மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்குப் போய்க்கொண்டு இருந்தேன், என்னிடம் கேள்விகளை நிரப்பிவிட்டீர்கள்…’’ என்றபடி நகர்ந்தான் ராணுவ அதிகாரி