கைவிடப்படும் குழந்தை ராட்சசன் ஆகிறது

சினிமா எனும் வாழ்க்கை Frankenstein

குழந்தை பிறக்கும்போது சுயநலம், சூழ்ச்சி, வஞ்சம், பேராசை போன்ற குணங்கள் இருப்பதில்லை. வளரும் காலத்திலேயே இவற்றை எல்லாம் வளர்த்துக்கொள்கிறது.

பெற்றோர், உறவு, நட்புகளின் அன்பு, ஆதரவுடன் வளர்பவர்கள் இந்த உலகத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள். அதேநேரம் பெற்றோராலும் சமூகத்தாலும் கைவிடப்பட்ட குழந்தையே சாத்தானாக மாறிவிடுகிறது என்பதுதான், ஃபிராங்கென்ஸ்டைன் திரைப்படத்தின் ஒரு வரிக் கதை.

இந்த கதைக்கு ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் உண்டு. ஏனென்றால், இந்த கதையை மேரி ஷெல்லி எழுதியபோது, அவருக்கு 17 வயதுதான். எனவே, அவரது பேர் போடாமல் முதல் புத்தகம் வெளியானது. அந்த நாவலுக்கு அமோக ஆதரவு கிடைத்த பிறகே அடுத்தடுத்த பதிப்புகளில் மேரியின் பேர் இடம் பிடித்தது.

பிரிட்டனை சேர்ந்த மேரி ஷெல்லியின் தந்தை வில்லியம் காட்வின் ஒரு தத்துவவியல் அறிஞர், தாய் மேரி வால்ஸ்டன்கிராஃப்ட் ஒரு பெண்ணியவாதி. அதனால் சின்ன வயதிலிருந்தே படிப்பும் எழுத்தும் மேரிக்கு கைவரப்பட்டது.

அறிவியல் புனைக்கதையின் முதல் நாவல்

அன்றைய சூழலில் சில அறிவியல் கதைகள் வெளியாகியிருந்தன என்றாலும், மேரி ஷெல்லி 1818ம் ஆண்டு எழுதிய, ‘ஃபிராங்கென்ஸ்டைன்; ஆர் த மாடர்ன் ப்ரோமெதியஸ்’ (Frankenstein; or The Modern Prometheus) என்ற நாவலே, அறிவியல் புனைக்கதையின் முதல் நாவல் என்று கருதப்படுகிறது.

மேரி உயிருடன் இருந்த காலத்திலேயே, இந்த நாவல் மேடை நாடகமாக நடிக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இன்று வரை இந்த நாடகம் லண்டனில் தினமும் நடந்துகொண்டே இருக்கிறது. காமிக்ஸ் புத்தகமாக, தொலைக்காட்சித் தொடராக, அனிமேசன் விளையாட்டாகவும் இந்த கதை வெளியாகி ஹிட் அடித்துள்ளது. அதோடு ஐந்தாறு வருடங்களுக்கு ஒரு முறை இதே கதையை வெவ்வேறு இயக்குனர்கள் மீண்டும் மீண்டும் சினிமாவாக சலிக்காமல் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த நவம்பரில் மீண்டும் சினிமாவாக வெளியாகியுள்ள, ’விக்டர் ஃபிராங்கென்ஸ்டைன்’ இப்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.

உலகின் மகத்தான கவிஞராக அறியப்படும் ஷெல்லியின் மனைவியே இந்த கதையை எழுதிய மேரி. 30 வயதுக்குள் இறந்த கவிஞர் ஷெல்லியின் படைப்புகள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதற்கு மேரி மேற்கொண்ட முயற்சிகளே காரணம்.

மேரி ஷெல்லியின் முதல் படைப்பின் தாக்கத்தினால், அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 30, ’ஃபிராங்கென்ஸ்டைன் தினமாக வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது.  திகில் நாவல் அலையை தொடங்கி வைத்த மேரி ஷெல்லியின் வாழ்க்கையும் ஒரு மர்ம அத்தியாயமாக முடிந்தது. 52வது வயதில் நடந்த மேரி ஷெல்லி மரணம் அடைந்தார். அது, இயற்கை மரணமா அல்லது தற்கொலையா என்ற சர்ச்சை இன்று வரை முடிவுக்கு வரவில்லை.

இனி, சினிமாவுக்குள் நுழையலாம்.

இயற்கைக்கு விரோதமான செயல்

ஒரு பணக்கார மருத்துவரின் மகன் விக்டர். கர்ப்பிணி என்றும் பாராமல் தாய்க்கும் தந்தைக்கும் சண்டை நடந்துகொண்டே இருக்கிறது. தாய் தாக்கப்படுவதைக் கண்டு வருந்துகிறான் விக்டர். பிரசவம் நடக்கையில் பிள்ளை மட்டும் காப்பாற்றப்படுகிறது.

தாயின் மரணத்துக்கு தந்தையே காரணம் என்று கருதும் விக்டர் அவரை கடுமையாக வெறுக்கிறான். தம்பியிடம் தந்தை அதீத அன்புடன் இருப்பதைக் கண்டு மேலும் வெறுப்படைகிறான். தன் கோபம், ஆத்திரம் அனைத்தையும் படிப்பில் காட்டுகிறான். தந்தையை விட மிகப்பெரும் அறுவை சிகிச்சை மருத்துவராக மாறுகிறான்.

இந்த அங்கீகாரம் மட்டும் போதும் என்று விக்டருக்குத் தோன்றவில்லை. அதனால் மருத்துவத்தில் யாரும் செய்யாத சாதனையை செய்யத் துடிக்கிறான். அதாவது, புதிய உயிர் படைக்கும் கடவுளாக மாற விரும்புகிறான். மனித உடல்களை ஒன்று சேர்த்து, அதற்கு மின் சக்தி மூலம் உயிர் கொடுக்க முடியும் என்று நிரூபிக்க முயற்சி செய்கிறான். இயற்கைக்கு விரோதமான செயல் என்று அவனுடைய ஆய்வுக்கு ராயல் கல்லூரி தடை விதிக்கிறது.

இந்த விரக்தியில் அவனுடைய அகங்காரம் அதிகமாகிறது. தன்னை நிரூபிக்கத் துடிப்பவனுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் பெரும் பணக்காரன் உதவி கிடைக்கிறது. மனித உடல் பாகங்கள் தேவை என்றதும் கைதிகளைக் கொடுக்கிறான். அவர்களைக் கொன்று உடல் பாகங்கள் எடுக்கிறான் விக்டர். அதேபோல் போரில் மரணம் அடைந்தவர்களின் உடல்களில் இருந்தும் பாகங்கள் தேடித்தேடி எடுக்கிறான்.

ஒருவழியாக உடல் தயாராகிறது. மின்னல் ஏற்படுகையில் கிடைக்கும் அதீத மின் சக்தி மூலம் பிணக்குவியலில் இருந்து உருவாக்கப்பட்ட உடலுக்கு உயிர் கொடுக்கத் தயாராகிறான் விக்டர். அந்த உருவத்திற்குள் தன் மூளையை வைக்குமாறு கேட்கிறான் ஆயுத வியாபாரி. ஏனென்றால் அவன் ரகசிய நோயினால் மரணத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறான்.

ஆனால், அவன் கோரிக்கையை ஏற்க மறுக்கிறான் விக்டர். தன் விருப்பத்தை நிறைவேற்றவில்லை என்றால் இந்த ஆய்வு தொடராது என்று ஆயுத வியாபாரி மிரட்டியதும் நடக்கும் மோதலில் அந்த வியாபாரி மரணம் அடைகிறான். அந்த நேரத்தில் மின்னல் அடித்ததும் அந்த ஆய்வுக்கூடம் சின்னாபின்னமாகிறது. தன்னுடைய ஒட்டுமொத்த உழைப்பும் தோல்வி அடைந்துவிட்டது என்று வருத்தமாகிறான் விக்டர்.

பிண மனிதனுக்கு உயிர்

ஆனால், விக்டர் உருவாக்கிய பிண மனிதனுக்கு உயிர் வந்துவிட்டது என்ற உண்மை தெரியவருகிறது. சாத்தியமே இல்லை என்று எல்லோரும் மறுத்த ஒரு விஷயத்தை விக்டர் சாத்தியமாக்கி சாதனை படைத்து விட்டான் விக்டர்.

அந்த பிண மனிதன் குழந்தை போன்று எதுவும் அறியாதவனாக இருக்கிறான். காயங்கள் உடனடியாக ஆறிவிடுகிறது. அதன் வலிமை அளப்பரியதாக இருக்கிறது. அதே நேரம் பிண மனிதனுக்கு எதையும் உடனடியாக புரிந்துகொள்ளும் சக்தி இல்லை. அதற்கு எதையும் கற்றுத்தர முடியவில்லை என்றதும் விக்டர் பொறுமை இழக்கிறான்.

அதற்கு தெரிந்த ஒரே ஒரு விஷயம் விக்டர் என்ற அவனுடைய பேர் மட்டும்தான். விக்டர், விக்டர் என்று அவன் பெயரை அன்புடன் கூப்பிடுகிறது.

வேறு எதையும் கற்றுக்கொள்ள முடியாத அந்த பிண மனிதனை சமாளிப்பது விக்டருக்கு எரிச்சலாக இருக்கிறது. அந்த பிணமனிதன் விக்டரின் கண்களுக்கு மான்ஸ்டராகத் தெரிகிறது. அழிவில்லாத இப்படியொரு படைப்பை உருவாக்கியது மாபெரும் தவறு என்பதை உணர்கிறான். அதனால் அதனிடம் அன்பு காட்டாமல் புறக்கணிக்கிறான்.

தற்செயலாக ஆய்வுக் கூடத்துக்கு வரும் விக்டரின் தம்பியும் அவனுக்கு மனைவியாகப் போகும் பெண்ணும் இந்த உருவத்தைப் பார்த்துவிடுகிறார்கள். அது மான்ஸ்டர் அல்ல குழந்தை போன்றது என்பதை அந்த பெண் பார்த்தவுடன் புரிந்துகொள்கிறான். எந்த அச்ச உணர்வும் இல்லாமல் பழகுகிறாள். அவர்களை ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே அனுப்பிவிடுகிறான்.

தன் ஆணவம், அகங்காரம் காரணமாக உருவாக்கிய மான்ஸ்டர் இந்த உலகின் சாபக்கேடு என்று நினைக்கிறான். அதன் அளப்பரிய ஆற்றலைக் கண்டு அச்சப்பட ஆரம்பிக்கிறான். எனவே, அதனை அழிக்கும் முடிவுக்கு வருகிறான். ஆய்வுக் கூடத்தை ஒட்டுமொத்தமாக தீயிட்டுக் கொளுத்திவிட்டு, அதிலிருந்து தப்புகிறான் விக்டர்.

அகங்காரம் மான்ஸ்டர்

புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு விக்டர் முற்படும் நேரத்தில், அவனை கண்டுபிடித்து அங்கே வந்து சேர்கிறது மான்ஸ்டர். அவன் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் மான்ஸ்டரிடம் தென்படுகிறது. அதாவது, மான்ஸ்டரால் படிக்க முடிகிறது, பேச முடிகிறது, மனிதர்களைப் போன்று சிந்திக்க முடிகிறது,

அதை மீண்டும் அழிக்கும் போராட்டத்தில் விக்டர் மீண்டும் இறங்குகிறான். ஆனால், அந்த முயற்சியில் விக்டரின் தம்பியும் அந்த பெண்ணும் உயிர் இழக்கிறார்கள்.

அதன் பிறகும் விக்டரை பின் தொடர்கிறது மான்ஸ்டர். ஒரு கோரிக்கை வைக்கிறது. தன்னைப் போன்று இன்னொரு மான்ஸ்டர் உருவாக்கிக் கொடுத்தால், விக்டரிடம் இருந்து விலகிவிடுவதாகச் சொல்கிறது.

இந்த யோசனை இப்போது இருப்பதைவிட பெரிய ஆபத்து என்பதால் மறுக்கிறான் விக்டர். எனவே, அதன் கண்களில் படாமல் தப்பியோடுகிறான். ஆனாலும், அவனை பின் தொடர்ந்து தாக்குகிறது, தன் விருப்பத்தை நிறைவேற்றும்படி துன்புறுத்துகிறது.

இதுவரையிலான மான்ஸ்டர் கதையை, தன்னைக் காப்பாற்றிய கப்பலின் கேப்டனிடம் சொல்கிறான் விக்டர். அவனை தேடி அங்கேயும் வருகிறது மான்ஸ்டர். கப்பல் கேப்டனிடம் தன்னுடைய கதையை சொல்லத் தொடங்குகிறது.

மான்ஸ்டரின் பார்வையில் புதிய கதை ஒன்று ஆரம்பமாகிறது. அது, கதை அல்ல கவிதை. அன்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்ட ஒரு குழந்தை எப்படி மான்ஸ்டராக மாறுகிறது என்பதே அந்த கதை. அந்த அற்புதத்தை திரையில் பாருங்கள்.

மனிதர்களே மான்ஸ்டர்

ஒரு வகையில் இது அறிவியல் புனைவுக் கதை அல்ல. ஒரு குழந்தையின் உளவியல் கதை. ஒரு நிராகரிக்கப்பட்ட குழந்தை, அன்பு காட்டுவதற்கு யாரும் இல்லாத உலகத்தில் அழிவுப்பாதையை தேர்வு செய்கிறது.  

படத்தில் வரும் பிண மனிதன் மான்ஸ்டர் அல்ல; ஒருவரின் தோற்றத்தை வைத்து குற்றவாளியாக பார்க்கும் மனோபாவமே மான்ஸ்டர். நிராகரிக்கப்பட்டு தனிமையில் இருக்கும் மனிதர்களே மான்ஸ்டர் என்ற உளவியலை இந்த படம் சொல்லித்தருகிறது. தன்னால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும் என்ற மனிதரின் தவறான நம்பிக்கை இறுதியில் அழிவு தருகிறது.

மான்ஸ்டர்கள் தாங்களாக உருவாவதில்லை, மனிதர்களும், இந்த சமூகமுமே மான்ஸ்டரை உருவாக்குகிறது. அன்பு, பொறுப்பும் மனிதரை உருவாக்கும். நிராகரிப்பும், அகங்காரமும் மான்ஸ்டரை உருவாக்கும்.

மான்ஸ்டர் எல்லா மனிதருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது என்பதை உணர்வதே மனிதம்.

Leave a Comment