தலித் அரசியலாகும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை

Image

ஸ்டாலின் சந்திப்பு, போலீஸ் மாற்றம் பலன் தருமா?

தி.மு.க.வுக்கு ஆதரவாக பட்டியலின மக்கள் செயல்படுவதைத் தடுப்பதற்கு ஆம்ஸ்ட்ராங் படுகொலையை பா.ஜ.க., பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் பயன்படுத்திய நேரத்தில், நேரடியாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் புதிய பாதை போட்டிருக்கிறார். இப்போது நடந்திருக்கும் போலீஸ் அதிகாரிகள் மாற்றமும் புதிய வெளிச்சம் காட்டியிருக்கிறது.

ஆர்ம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நேரத்தில், அந்த சதியில் ஆரூத்ரா ஊழலில் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் வெளியாகின. அரூத்ரா மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு ஆம்ஸ்ட்ராங் உதவினார் என்றும், அந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலையானார், அதற்கு பழிவாங்கும் விதமாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகின்றன.

ஆரூத்ரா ஊழலில் குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பாஜக மாநில நிர்வாக பொறுப்பிலிருந்தவர்கள். கடந்த ஏப்ரலில் ஆருத்ராவால் பாதிக்கப்பட்டவர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். பாஜகவின் மாநில நிர்வாகி நடிகர் ஆர்.கே.சுரேஷும், ஹரீஷ் என்பவரெல்லாம் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

இந்த விஷயத்தில் பாஜகவின் மீதான குற்றச்சாட்டு வலுப்படுத்தப்படுகிற சமயத்தில் தோழர்.ஆம்ஸ்ட்ராங் மீதான அவதூறுகளை பா.ஜ.க.வினர் பரப்ப ஆரம்பித்தனர். ஆனால், இதில் திருப்பமாக அமைச்சர் எல்.முருகன் அரசு மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மரியாதை செய்ய வந்தார்.

உடனே பா.ஜ.க.வினர் தி.மு.க.வுக்கு எதிரான தலித் அரசியல் விஷயத்தைக் கையில் எடுத்தார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகள் கைதாகவில்லை என தோழர்.திருமா வெளிப்படையாக சொன்னார். பல முன்னனி செயல்பாட்டாளர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை, அதன் பின்னனி குறித்த கேள்விகள் எழுப்பினர். இதையெல்லாம் பின்னுக்கு தள்ளி ஆம்ஸ்ட்ராங் மீதான அவதூறு ட்ரோல்களை திமுகவின் சில சமூகவளைதள கும்பல்கள் தீவிரமாக செய்து கேள்விகளை மடைமாற்றின.

கொலைக்கான புலனாய்வு முழுமையாக துவங்காத நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் திரு.சந்தீப்ராய் ரத்தோர், இக்கொலையில் அரசியல் நோக்கமில்லை என்றார். இச்செய்தியை ஏன் ஒரு தலைமை அதிகாரி தெரிவித்தாரென தெரியவில்லை. அதுவும் புலனாய்வு முழுமையாக தொடங்காத நிலையில் இது ஏன் சொல்லப்பட வேண்டுமென தெரியவில்லை.

ஆளும் கட்சியின் மீது அதிருப்தி தோன்றும் வகையில் மருத்துவமனை காத்திருப்பின் போதும், ஊர்வலத்தின் போதும் தேவையற்ற கடுமையை காவல்துறையின் சில உயர் அதிகாரிகள் காட்டினர். அவர்களில் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்களாயில்லை.

மக்கள் நேசித்த தலைவருக்கான மரியாதை நிகழ்வு ஏன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது? இது யாருக்கு லாபமாக அமைந்தது என்பதெல்லாம் கேள்விகள். தேர்தல் களத்தில் பாஜகவிற்கு எதிராக நின்றவர்கள் தலித்திய மக்கள். அவர்களது வாக்குகள் தேர்தலில் தீர்க்கமான முடிவு வருவதற்கு முதுகெலும்பாக அமைந்தது. தமிழ்நாட்டில் பாஜவிற்கு எதிரான கூட்டணியில் முன்னனியில் நின்றவர்களாக தலித்திய செயல்பாட்டாளர்கள் இருந்தார்கள்.

இந்துத்துவ சனாதனத்திற்கு எதிராக பெளத்தத்திற்கு மக்களை அழைத்துச் சென்ற தோழர் ஆம்ஸ்ட்ராங்கின் அயராத பணி பேசப்படாமல், அவர் மீது அவதூறுகள் ஏன் பரப்பப்பட்டது? திமுகவின் சமூகவளைதளக்குழு பெயரில் இயங்கும் ஒரு கும்பலின் சாதியம், தனிப்பட்ட வன்மம், மறைமுக பாஜக ஆதரவு என ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? படுகொலையில் பாஜகவின் பங்கை மறைத்து, படுகொலையானவர் மீது அவதூறுகளை பரப்பியவர்களை நோக்கிய கேள்வியை நாம்தானே கேட்டாக வேண்டும்.

தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் பின்னனியில்லை என்று சொன்ன சென்னை காவல்துறை ஆணையர் பணியிட மாற்றம் செய்ப்பட்டுள்ளார். இனிமேலாவது உண்மையான புலனாய்வு நிகழுமா? திமுகவின் மரு.எழிலன், திராவிடர் விடுதலை கழகத்தின் தோழர்.விடுதலை ராஜேந்திரன், தந்தைப்பெரியார் திகவின் கோவை இராமகிருட்டிணன் போன்றோர் தோழர்.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கான மரியாதையும், அவரது பணியையும் பற்றி பதிவு செய்யும் சமயத்தில், திராவிடன் ஸ்டாக் எனும் பெயரை வைத்துக்கொண்டு தோழர்.ஆம்ஸ்ட்ராங் மீதான அவதூறுகளை தீவிரமாக்கியது திமுக சமூகவளைதள கூட்டம் ஒன்று. ஆரூத்ரா மோசடியாளர்கள், பாஜக பிரமுகர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் என நீளும் பட்டியலை நம் கவனத்திலிருந்து நீக்கிவிட்டு பாஜகவை பாதுகாத்தவர் யார் என்பது கேள்வியாக நிற்கிறது.

தோழர் திருமா எழுப்பிய ‘உண்மையான குற்றவாளிகள் கைதாகவில்லை’ என்பதும், ஊடகங்கள் எழுப்பிய ‘கொலையில் பாஜக பங்கு மீதான கேள்வியும்’ அனைவரின் கவனத்திலிருந்தும் நழுவச்செய்யப்பட்டுள்ளது. இது யாருக்கான வெற்றி, யாருக்கான தோல்வி என்பதை பொறுப்போடு சிந்திப்பது அவசியம். உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது திமுக அரசின் பொறுப்பு. இதுவே எதிர்கால பாதுகாப்பையும் உறுதி செய்யும். அதேபோல தோழர் ஆம்ஸ்ட்ராங்கிற்கான அடக்க இடத்தையும், மணிமண்டப இடத்தையும் உடனடியாக ஒதுக்குவதும் நிகழவேண்டும்.

இந்த நிலையில் ஸ்டாலின் நேரடியாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை சந்தித்துப் பேசியிருப்பது தலித் அரசியலை ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்கிறது. இப்போது காவல் துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளார்கள்.

ஒரு சாதாரண கொலையை மிகச்சரியாக எதிர்கொள்ள முடியாமல் ஸ்டாலின் அரசு தடுமாறியிருக்கிறது. இதிலிருந்து பாடம் படிக்கட்டும்.

Leave a Comment