சைதை சா.துரைசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்
எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் மறைந்த ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழாவையொட்டி சைதை துரைசாமி வழங்கியிருக்கும் பாராட்டுரை
புரட்சித்தலைவரின் போர்ப் படை தளபதியான அண்ணன் ஆர்.எம்.வீ அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளில் அவரின் சிறப்புகளை, பெருமைகளை நினைவு கூர்வது என் பெருமைக்குரிய கடமையாகும்.
புரட்சித்தலைவரின் நாடகம், சினிமா, அரசியல், சமூகத்தொண்டு என அவரது வாழ்க்கை முழுவதும் அவருடன், அவரது நன்மைக்காக இணைந்து நின்று பணியாற்றியவர்கள் இரண்டு பேர் மட்டும்தான். ஒருவர் ஜானகி அம்மையார், இன்னொருவர் அருளாளர் அண்ணன் ஆர்.எம்.வீ அவர்கள்.
1953ம் ஆண்டு எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு நம்பிக்கையான நபரைத் தேடினார் புரட்சித்தலைவர். அப்போது, பேரறிஞர் அண்ணாவின் சிபாரிசால் கே.ஆர்.ராமசாமியின் நாடக மன்ற நிர்வாகியான அண்ணன் ஆர்.எம்.வீ புரட்சித்தலைவரிடம் சேர்ந்தார். அதன்பிறகு புரட்சித்தலைவரின் நிழலாகவே மாறிவிட்டார்.
‘நாடோடி மன்னன்’ படத்திற்கு நிதி நெருக்கடி உருவானது. அப்போது, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பை மாற்றி, புரட்சித்தலைவருக்கு சிக்கல் வந்துவிடாத வகையில், தானாக முன்வந்து அந்தக் கடன் பத்திரங்களில் கையெழுத்துப் போட்டவர் ஆர்.எம்.வீரப்பன். அதனாலே, எம்.ஜி.ஆரின் மனசாட்சி, எம்.ஜி.ஆரின் வலதுகரம், எம்.ஜி.ஆரின் நிழல், எம்.ஜி.ஆரின் நண்பர், எம்.ஜி.ஆரின் விசுவாசி, எம்.ஜி.ஆரின் நம்பிக்கை என்றெல்லாம் மதிக்கப்பட்டார்.
புரட்சித்தலைவர் காலத்தில் அமைச்சர் பதவி வலுக்கட்டாயமாகவே ஆர்.எம்.வீரப்பனுக்குக் கொடுக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர், இளைஞர் நலன், கல்வித்துறை அமைச்சராக பல்வேறு பதவிகளில் ஆர்.எம்.வீரப்பன் மகத்தான சாதனைகள் படைத்தார். தமிழக அரசியல் வரலாற்றில் தூய்மை, நேர்மையாக வாழ்ந்த அமைச்சர்களில் ஆர்.எம்.வீ. ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் எம்.ஜி.ஆர். மன்றங்களுக்கு ஆபத்து வந்தபோது, என்னைப் போன்ற புரட்சித்தலைவர் ரசிகர்களுக்கு உறுதியான ஆதரவு கொடுத்ததும், அவர்தான் 1972, அக்டோபர் 1ம் தேதி ரசிகர்மன்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு புரட்சித்தலைவரை அழைத்துவந்தார். அந்த கூட்டத்தில்தான் அதிமுக எனும் கட்சிக்கு நான் புரட்சித்தலைவர் மனதில் விதை போடுகின்ற வாய்ப்பைப் பெற்றேன். இதையடுத்தே 8ம் தேதி கணக்கு கேட்பு பொதுக்கூட்டம், 10ம் தேதி தி.மு.க.வில் இருந்து நீக்கம், 17ம் தேதி அ.தி.மு.க. உதயம் என்று தமிழகத்தில் காட்சிகள் மாறின.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கட்சி பிளவுபட்டபோது, ஆர்.எம்.வீரப்பன் அவர்களே முதல்வராவார் என்று அனைவரும் எதிர்பார்த்த தருணத்தில், புரட்சித்தலைவரின் மனைவி வி.என். ஜானகி அம்மையாரை முதல்வராக அமரவைத்த பெருந்தன்மைக்காரர்.
புரட்சித்தலைவருக்கு ஆர்.எம்.வீரப்பன் ஒரு போர்ப்படை தளபதி போன்று நின்றார். தன்னலம் கருதாமல் புரட்சித்தலைவருக்காக காலம் முழுவதும் உழைத்த அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களுடன் பழகி, பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை என் வாழ்க்கையின் பொற்காலமாகக் கருதுகிறேன். புரட்சித்தலைவர் புகழ் உள்ளவரையிலும் ஆர்.எம்.வீரப்பன் புகழும் நிலைத்து நிற்கும்.
