• Home
  • சக்சஸ்
  • கிரிக்கெட்டுக்கு கபில், டென்னிஸ்க்கு பயஸ்!

கிரிக்கெட்டுக்கு கபில், டென்னிஸ்க்கு பயஸ்!

Image

இந்தியாவின் சூப்பர் ஹீரோ



சர்வதேச டென்னிஸ் அரங்கில் 17 வயதிலேயே களம் இறங்கிய லியாண்டர் பயஸ், இந்தியாவின் சார்பாக 7 முறை ஒலிம்பிக் போட்டியில் களம் கண்டுள்ளார் என்பது யாராலும் அசைக்க முடியாத ஒரு சாதனை. கபில் தேவ் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு மாபெரும் எழுச்சி உருவானது போன்று, டென்னிஸ் என்ற விளையாட்டை பிரபலப்படுத்தியவர் என்றால், அது லியாண்டர் பயஸ் தான்.

1990ம் ஆண்டு டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் வீரர்கள் மோதினர். சண்டிகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ரிசர்வ் ஆட்டக்காரராக குழுவில் இடம்பெற்றிருந்தார் 17 வயது லியாண்டர் பயஸ். அன்றைய போட்டியில் குழுவின் தலைவர் நரேஷ் குமார் விளையாடாமல், பயஸுக்கு விளையாட அனுமதி கொடுத்தார். ஜீஷான் அலி உடன் தனது முதல் டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாட களம் இறங்கினார்,, பயஸ். 5 செட் கொண்ட  இந்த போட்டியில், இந்திய அணி 4-6, 6-3, 6, 4, 6, 18-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அன்று டேவிஸ் கோப்பையை வென்ற லியாண்டர் பயஸ், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். அவரைப் பற்றிய சில குறிப்புகள்….
* லியாண்டர் பயஸ் 1973ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி பிறந்தார். இவர், கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ், பிரபலமான கூடைப்பந்து வீரரும், 1980ல் இந்திய அணியின் கேப்டனும் ஆவார். இவரது தந்தையான வெஸ் பயஸ், 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் விளையாடியவர்.
* கொல்கத்தாவில் வசித்துவந்த லியாண்டர் பயஸுக்கு டென்னிஸும், கால்பந்தும் மிகவும் பிடித்த விளையாட்டுகள். ஆனால் 12 வயதில் பயஸ், ஒரு தீர்க்கமான முடிவுடன் டென்னிஸை தேர்ந்தெடுத்தார். அதற்குக் காரணம், தன் தந்தையைப் போன்று ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தார்.
* 1996ம் ஆண்டு நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய டென்னிஸ் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் பயஸ். 1999ல் பயஸும் பூபதியும் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு  தகுதி பெற்றனர். இரண்டு வெற்றிகளுடன் அவர்கள் உலகின் வெற்றிகரமான டென்னிஸ் இரட்டையர்கள் என்று பெயர் பெற்றனர்.
* இரட்டையர் பிரிவில் புதிய கூட்டாளியை சேர்ப்பதும் பயஸின் உத்திகளில் ஒன்று. மார்ட்டினா நவரத்திலோவா, மார்ட்டினா ஹிங்கிஸ் உட்பட 120க்கும் மேற்பட்ட வீரர்களுடன் பயஸ் ஜோடி சேர்ந்துள்ளார். 2015ல் பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டிகளில் விளையாட நடாலுடன் ஜோடி சேர்ந்தார் பயஸ். அந்த சமயத்தில் தரவரிசைப் பட்டியலில் பின்தங்கியிருந்த பயஸுக்கு நடாலுடன் ஜோடி சேர்ந்ததில் நன்மை ஏற்பட்டது.
* இவர் இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 10 முறை மற்ற தொடர்களில் இரட்டையர் பிரிவு பதக்கங்களையும் வென்றவர். இதுதவிர, 66 முறை கோப்பைகளையும் உச்சி முகர்ந்துள்ளார். டேவிஸ் கோப்பை தொடரில் இரட்டையர் போட்டிகளில் கிராண்ட்ஸ்லாம் உள்ளிட்ட 44 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
* வயதானாலும் போட்டிகளில் எதிராளிக்கு கடுமையான சவால் ஏற்படுத்துவதில் பயஸ் வல்லவர். பயஸின் ஆட்டத்தை தொடர்ந்து கவனித்து வருபவர்கள், அவரது காலில் சிறுத்தையின் பலமும், வேகமும் இருப்பதாக கூறுகின்றனர். அதனாலே ஏராளமான டபுள்ஸ் விளையாட்டுகளில் அதிக வெற்றி பெற முடிந்திருக்கிறது.
*  ‘தனது விளையாட்டு பாணியை தொடர்ந்து மேம்படுத்திவருவதே தனது வெற்றியின் ரகசியம்’ என்று சொல்லும் பயஸ், 30 ஆண்டுகாலமாக  ஆக்‌ஷன், டிராமா, ரொமான்ஸ், சர்ச்சைகள் என அனைத்து அம்சங்களிலும் முன்னணியில் இருக்கிறார் என்றே சொல்லலாம்.
* 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் உரிய தகுதி இல்லாத வீரர்களுடன் தன்னை ஜோடி சேர்த்தால், போட்டியில் இருந்து வெளியேறுவதாக அச்சுறுத்தினார், பயஸ். பின்னர், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக பயஸ் வந்தது பற்றி விமர்சனங்கள் எழுந்தன. அதுபோல், அணியின் மோசமான விளையாட்டுக்குப் பிறகு பதிலளித்த பயஸ், அணி தேர்வுதான் காரணம்  என்றார்.
* 1998ம் ஆண்டு டென்னிஸ் ஜாம்பவான் பீட் சாம்ப்ராஸுடன் போட்டியிட்ட பயஸ், அவரை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அனைவரையும் வியப்படையச் செய்தார். இந்த போட்டிகள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் சாம்ப்ராஸ் டென்னிஸ் தர வரிசையில் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* தனது சுயசரிதையில், ‘மிக உயர்ந்த இயக்க ஆற்றல் கொண்ட மனிதர்’ என்று பயஸைப் பற்றி சிறப்பாக குறிப்பிட்டிருக்கிறார், ஆண்ட்ரே அகாசி.
* 51 வயதாகும் லியாண்டர் பயஸ், அதிக நேரம் விளையாடும் இந்திய டென்னிஸ் வீரர் என்ற பெருமையையும், டென்னிஸ் விளையாட்டில் 7 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இரும்பு மனிதர், மிக இளமையானவர் என்ற பெயர்களும் அவருக்கு உண்டு.

Leave a Comment