• Home
  • உறவுகள்
  • மாணவர் கண் முன்னே ஆசிரியை குத்திக் கொலை

மாணவர் கண் முன்னே ஆசிரியை குத்திக் கொலை

Image

கத்தியில் இருக்கிறதா தீர்வு?

சின்னச்சின்ன விஷயங்களுக்கும் கத்தியைத் தூக்குவதும் கொலை செய்வதும் இன்று சாதாரணமாகி வருகிறது. மருத்துவர் பாலாஜியை குத்திய ரத்தக் கறை அழிவதற்குள் ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் கண் எதிரே கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். தனக்குக் கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற மனநிலையில் வன்முறையில் தீர்வு தேடுபவர்கள் அதிகரிப்பது உண்மையாகவே ஆபத்தான மனநிலை.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி. இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். இந்நிலையில், சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் மதன் என்பவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ரமணியை பெண் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் ரமணிக்கு, மதனை திருமணம் செய்வதில் விருப்பமில்லை என கூறிவிட்டார். . இதனால் ஆத்திரமடைந்த மதன் இன்று காலை ரமணி பணியாற்றும் பள்ளிக்கு உணவு கொடுப்பது போல் வந்திருக்கிறார். ஆசிரியை இருந்த வகுப்புக்குள் நுழைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஆசிரியையின் கழுத்து மற்றும் இடுப்பில் குத்திவிட்டுப் போயிருக்கிறான்.  இதில் ரமணி மயங்கி விழுந்தார்.

உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி உயிரிழந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் ரமணியின் கொலையை வன்மையாக கண்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிவு செய்திருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விடியா திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்..’’ என்று தெரிவித்துள்ளார்.

எதற்கெடுத்தாலும் கத்தியால் தீர்வு தேடினால் அதன் பின்விளைவுகள் எத்தனை மோசமாக இருக்கும் என்பது தெரியாத தலைமுறை இது. ஆண் பிள்ளைகளுக்கு பள்ளிகளில் மனநலம் பரிசோதனை செய்ய வேண்டியது மிகவும் அவசியம். பிள்ளைகளுக்குத் தோல்வியும் ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை பெற்றோர் கொண்டுவர வேண்டியதும் அவசியம்.

Leave a Comment