கல்வித் துறை கெட்டுப் போயிருக்கிறதா?
யூ டியூப் சேனலில் காமாந்திர பாடம் நடத்திக்கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவை குட்டி நித்தியானந்தா என்றே அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் அரசு பள்ளியில் நுழைந்திருப்பதை மக்களுக்கு அடையாளம் காட்டி பேரெழுச்சியை உருவாக்கிய ஆசிரியர் சங்கருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
மஹாவிஷ்னு பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை எனும் ஊரிலுள்ள மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.. மேலும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் துறை ரீதியான விசாரணையும் அசோக் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்று உதவி ஆணையாளர் தலைமையில் தொடங்கியிருக்கிறது.
இந்த நேரத்தில் தமிழக கல்வித் துறையை முழுமையாக மாற்ற வேண்டும் என்றும் அன்பில் மகேஷை அமைச்சரவையில் இருந்து அகற்ற வேண்டும் என்று தி.மு.க.வினரே போராடும் நேரத்தில், அவர் செய்திருக்கும் புதிய மாற்றங்களை சுட்டிக் காட்டிவருகின்றனர்
இது குறித்து பேசுபவர்கள், ‘’தமிழ்நாட்டில் ஒரு பள்ளி தலைமையாசிரியர் செய்த தவறான செயல்பாட்டினால் தமிழ்நாட்டின் மொத்த கல்வித்துறையையே குறை சொல்வது அபத்தமானது. நமது பள்ளிக்கல்வித்துறையால் மாணவர்கள் வாசிக்க வாசிப்பு இயக்கம் துவங்கப்பட்டு இந்த மாதமே சிறந்த நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல நூலகத்திற்கு ஆண்டுதோறும் பத்தாயிரம் ரூபாய்கு அதிகமான மதிப்புள்ள சிறந்த அறிவியல் சிந்தனையைத் தூண்டக்கூடிய நூல்கள் கல்வி துறையால் வழங்கப்படுகிறது.ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்த 6,218 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.5.59 கோடி ஒதுக்கீடு செய்து தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 3 தமிழ்கூடல் நிகழ்ச்சிகளை நடத்திட ஏதுவாக பள்ளி ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கி ஊக்கப்படுத்துகிறது.
மேலும் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஊஞ்சல் என்ற சிறார் இதழும் ஆறு முதல் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேன் சிட்டு என்ற சிறார் இதழும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் விதத்தில், நல்ல அரிய சிறப்பான சிந்தனையை தூண்டக்கூடிய வகையில் பள்ளிக்கு இலவசமாக அரசு வழங்குகிறது. ஆசிரியர்கள் வாசிக்க மாதந்தோறும் கனவு ஆசிரியர் பல்வேறு படைப்புகளோடு வருகின்றன.
இது மட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் உலக சினிமா, சிறுவர்கள் ,சிறார் சினிமாக்கள் ஹைடெக் லேப் மூலம் காண்பிக்கப்படுகின்றது. மாதந்தோறும் வானவில் மன்றம் என்ற அறிவியல் மன்ற நிகழ்வு நடத்தி அது வட்டார அளவில் மாவட்ட அளவில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பல்வேறு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கலைத் திருவிழா நடத்தி இயல்,இசை,நாடகம் மற்றும் நுண்கலைகள் என பல்வேறு திறன்களில் போட்டிகள் நடத்தி அதில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடு வரை அழைத்துச் சென்று அவர்கள் அறிவுச்சிந்தனையை தூண்டுகிறது நம்முடைய தமிழ்நாடு அரசு.
அரசுப்பள்ளி மாணவர் நலன் சார்ந்து அரசு முன்னோடி முற்போக்கு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.அரசு ஊழியர்களாக உள்ள ஆசிரிய பெருமக்களாகிய எங்கள் இனம் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும்.கடைக்கோடியில் இருக்கும் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் தன் சுய விருப்பத்திற்கு செய்யும் செயல்பாடு ஒரு கல்வித்துறையின் பெயரையே கெடுக்கும் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம்.ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல் ஆகிவிடும்’’ என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.