ரசம் வைக்கக் கத்துக்கோங்க

Image

சுவையோ சுவை

எத்தனை வெரைட்டியாக உணவு சாப்பிட்டாலும், கொஞ்சம் ரசம் ஊற்றி சாப்பிட்டால் மட்டுமே அந்த விருந்து முழு திருப்தி தரும். அதோடு ஜீரணத்துக்கும் உதவிகரமாக இருக்கும். எனவே, தமிழர்களின் உணவுப் பட்டியலில்  ரசத்துக்கு தனி இடம் உண்டு. உடல் நலத்துக்கு ஏற்றது மட்டுமின்றி, உடனடியாக செய்வதற்கும் எளியது, செலவும் குறைவு என்பதால் ரசம்தான் எப்போதும் பெஸ்ட். இதோ சில ரசங்கள்:

கொள்ளு ரசம்

தேவையானவை:

கொள்ளு: 2 கைப்பிடி அளவு

புளி     : எலுமிச்சை அளவு

இஞ்சி   : சிறிதளவு

நல்லெண்ணெய்: அரை டீ ஸ்பூன்

மஞ்சள் தூள்: தேவையான அளவு

கடுகு: கால் டீ ஸ்பூன்

மிளகு: அரை டீ ஸ்பூன்

சீரகம் : ஒரு டீ ஸ்பூன்

பூண்டு: எட்டு பல்

மஞ்சள் பொடி, பெருங்காயம், உப்பு மூன்றையும் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்

செய்முறை:

கடையில் கொள்ளு வாங்கி நன்றாக புடைத்து, கல் நீக்கி, நன்றாக வறுத்து ஆறவைத்து பொடியாக டப்பாவில் போட்டு வைத்திருக்கவும்.  ஒரு குக்கரில் இரண்டு கைப்பிடி அளவு கொள்ளுப்பொடி போட்டு, மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு வெயிட் போட்டு இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியை வெந்நீர் ஊற்றி நன்றாகக் கரைத்து தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூன்று நிமிடம் வரை நன்றாக கொதித்ததும் இஞ்சியை தட்டிப் போடவும். அதன்பின்னர் பெருங்காயத்தையும், பூண்டு பல்லையும் தோலோடு தட்டிப்போட்டு, மூடி வைத்து கொதிக்க விடவும்.

இரண்டு நிமிடம் கழித்து வேக வைத்த கொள்ளுத் தண்ணீரை வடிகட்டி ஊற்றவும். மிளகையும், சீரகத்தையும் நன்றாகப் பொடி செய்து சேர்க்கவும். வேறொரு அடுப்பில் கடாயில் நல்லெண்ணெய் சுடவைத்து, கடுகு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலையும் தாளிப்பிலேயே கிள்ளிப் போடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி மீடி வைக்கவும்.  உடல்வலி, அசதி, சுவாசக்கோளாறு, உடம்பில் அதிக நீர் போன்றவற்றை தீர்க்கக்கூடியது இந்த கொள்ளு ரசம், ருசியும் தேனாக இருக்கும்.

வேப்பம்பூ ரசம்

தேவையானவை:

புளி    :  எலுமிச்சையளவு

மிளகாய் வற்றல் :   1

காய்ந்த வேப்பம்பூ:  2 டீஸ்பூன்

நல்லெண்ணெய்  :  1 டீஸ்பூன்

மஞ்சள் தூள்     :  2 சிட்டிகை

கட்டிப் பெருங்காயம் :  சிறிதளவு

கறிவேப்பிலை, உப்பு, கடுகு இவை மூன்றும் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:

புளியைக் கரைக்காமல் அப்படியே ஒரு பாத்திரத்தில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து மூடி வைத்து நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பிறகு கட்டிப் பெருங்காயம் போட்டு மீண்டும் மூடி வைக்கவும். மேலும் மூன்று நிமிடங்கள் கொதித்த பின்னர் வேண்டிய அளவு தண்ணீர் விட்டு விளாவிக் கொண்டு ஒரு கடாயில் ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல் போட்டு வேப்பம்பூவையும் போட்டு பொருந்தது போல் வரும்போது கறிவேப்பிலையையும் தாளித்ததில் சேர்க்கவும். தீய்ந்து போவதற்குள் ரசத்தில் கொட்டி ஒரு முறை கலக்கி விடவும். இந்த ரசம் பித்தத்துக்கு நல்லது, வாய்க்கசப்பை எடுக்கும். சூடாகச் சாப்பிட்டால் நல்ல உறக்கத்தைக் கொடுக்கக் கூடியது.

Leave a Comment