- பா.ஜ.க. சமூக விரோதிகளின் கூடாரமானதாக வேதனை
தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் நின்று தோற்றுப்போன பா.ஜ.க.வில் இப்போது தமிழக பா.ஜ.க. தலைவருக்கான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடத்தை காலி செய்வதற்கு அண்ணாமலை தயாராக இல்லை என்றாலும் தமிழிசை செளந்தர்ராஜன் அதனை விட்டுத்தருவதாக இல்லை.
கட்சியின் சீனியர்களை ஐ.டி. விங் ஆட்கள் அவதூறு செய்கிறார்கள், அவர்களுக்கு முன்னாள் தலைவர் என்ற முறையில் நேரடியாக எச்சரிக்கை செய்கிறேன் என்று முரட்டுத்தனமான ஸ்டேட்மெண்ட் கொடுத்தார் தமிழிசை செளந்தர்ராஜன்.
இதையடுத்து அண்ணாமலையின் தலைமை குறித்த கேள்விக்கு, “தற்போது சமூக விரோதிகள் பலருக்கும் பாஜகவில் பொறுப்புகள் வழங்கப்படுகிறது. நான் தலைவராக இருக்கும் போது அதை அனுமதிக்கவில்லை” என்று வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதேபோன்று மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவராவேன் என்றும் பேசி வருகிறார்.
இந்த நிலையில் டெல்லிக்குப் போன தமிழிசை செளந்தர்ராஜன் அங்கு அமைச்சர் எல்.முருகன், கேசவவிநாயகம், முருகானந்தம் போன்ற தமிழக பா.ஜ.க. புள்ளிகளை ஒருங்கிணைத்து ரகசிய மீட்டிங் போட்டுப் பேசியிருப்பதாகத் தெரிகிறது. அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அண்ணாமலையை அமைச்சராக்கப் போகிறார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தாலும், அதற்கு தற்போது வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி 2026லும் கூட்டணி இல்லை என்று கூறிவரும் நிலையில், தமிழிசையை விட்டால் வேறு யாராலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர முடியாது. ஆகவே, அவரை தலைவராக்க வேண்டும் என்று பலரும் டெல்லிக்கு தகவல் அனுப்பி வருகிறார்கள்.
அக்காவுக்கும் அண்ணாமலைக்கும் மோதல் பயங்கரமா இருக்குதே.