முந்திரிக்காட்டு நாயகன் தமிழரசன்.

Image

படுகொலை நாள் இன்று

இன்று தமிழ் மண் மீதும் போராட்டங்கள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் அத்தனை தோழர்களும் தோழர் தமிழரசன் நினைவு நாளை கொண்டாடி வருகிறர்கள். இன்றைய சமூகத்தின் மறந்துபோன தமிழரசனை நினைவூட்டுவது நம் கடமை.

தோழர் தமிழரசன் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தில் 1945ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று  பிறந்தவர்.  பொறியியல் மாணவராக இருந்த காலத்திலேயே தன்னை நக்சல்பாரி கட்சி எனப்படும் மார்க்சிய லெனினிய இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். அதனாலே தமிழரசன் முந்திரிக் காட்டு மக்களின் நாயகன் என்று அழைக்கப்பட்டார்.

ஆட்சியாளர்களை எதிர்த்து ஏராளமான மக்கள் போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். குறிப்பாக, பட்டியல் இன மக்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்பார். தனிக் குவளை எதிர்த்து டீக்கடைகள் முன்பு நடத்திய போராட்டம். அன்னக்கிளி என்ற சகோதரி கொல்லப்பட்ட சமயத்தில் அவர் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் மிக முக்கியமானவை.

நக்சல்பாரி தலைவர் தோழர் சாருமஜீம்தார் மறைவுக்குப் பின் இந்திய அளவிலும் குறிப்பாக தமிழகத்திலும் மார்க்சிய லெனினிய கட்சி மூன்று போக்குகளாக உடைந்த சமயத்தில் கூட்டக்குழு என்ற நக்சல்பாரி அமைப்பில் மிக முக்கிய பங்காற்றினார். அந்த அமைப்பு தான் பிற்காலத்தில் ஆந்திர மக்கள் யுத்தம் கட்சியில் இணைந்தது. அதன் பின்னான நாட்களில், தேசிய இனப் பிரச்சினையின் காரணமாக முரண்பட்டு புலவர் கலியபெருமாள் அவர்களுடன் இணைந்து தமிழ்நாடு பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற தனி அமைப்பு கண்டார்.

அவர் தேசிய இன மற்றும் சாதியப் பிரச்சினைகளின் தீவிரத்தை உணர்ந்து எழுதிய பெண்ணாடம், மீன்சுருட்டி அறிக்கைகள் தமிழக வரலாற்றில் முக்கியமானவை. ஏட்டுக் கல்வியோடு நிறுத்தி கொள்ளாமல் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை அமைப்பு ரீதியாக முன்னெடுத்த தமிழகத்தின் முதல் தேசிய இனப்போராளி தோழர் தமிழரசன் தான். 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது இதே செப்டம்பர் முதல் நாளில் பொதுமக்கள் என்ற பெயரில் போலீசார் அவரையும் இன்னும் சில தோழர்களையும் பொன்பரப்பி என்ற ஊரில் வைத்துக் கொடூரமாக கொன்றார்கள். ஒரு பக்கம் ஈழ விடுதலை போராட்டத்துக்கு ஆதரவானவராய் தன்னை காட்டிக் கொண்ட எம்.ஜி.ஆர் இன்னொரு பக்கம் தமிழின போராளிகளை அழித்தொழித்தார். ஆண்டுகள் பல கடந்தாலும் தமிழக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தோழர் தமிழரசன். அப்பழுக்கற்ற மாவீரன்.

சாதி ஒழிப்பும், வர்க்க ஒழிப்பும், பார்ப்பன-பனியா தேசத்தின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலையே ‘தமிழ்த்தேசியம்’ எனும் முழக்கத்தினை முன்னகர்த்தி, எளிய தமிழர்களை சாதி, மதம் கடந்து ஒன்றாக்கிய மாவீரன்.

பண்ணையார் ஆதிக்கம், முதலாளிகளின் ஏகபோகம், கந்துவட்டி கொடுமைக்காரர்கள், சாதிவெறியர்கள், ஆணவப்படுகொலைக்கு மக்களை தள்ளும் கயவர்கள், அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள், உழைக்கும் சமூகத்தினரிடையே ஒற்றுமை, இந்திய-பார்ப்பனிய-பனியா நலன்களை பாதுகாக்கும் கட்டமைப்புக்குகளை எதிர்த்தல் என ஆழமாக களம் கண்டவர் தோழர்.தமிழரசன்.

கயவர்களால் சூழப்பட்டு உயிர்போகும் நிலையிலும், மக்களுக்கு இன்னல் வரக்கூடாது என்பதால் எதிர்தாக்குதல் செய்யாமல் களத்தில் உயிர்துறந்த மாவீரன் தோழர்.தமிழரசன் மற்றும் அவரோடு விதைகளாக மடிந்த தோழர். தோழர்கள் தர்மலிங்கம், அன்பழகன், பழனிவேல், செகநாதன் ஆகிய மாவீரர்களின் நினைவுநாளில் வீரவணக்கம்.

Leave a Comment