மக்கள் உயிரோடு புதைந்த பரிதாபம்
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 50க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருக்கும் நிலையில் கடும் மழை காரணமாக மீட்புப் பணிகள் தாமதம் அடைந்துவருகின்றன.
மண்ணுக்குள் புதைந்த கிராமங்களில் இருந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. ஆற்றில் மிதக்கும் உடல்களைக் கண்டு மக்கள் அழுது புலம்புகிறார்கள். இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கேரளாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஐந்து கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்தார். கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஸ்டாலின், உடனடி உதவிக்கு தமிழ்நாட்டில் இருந்து இரண்டு அதிகாரிகளை கேரளத்துக்கு அனுப்பியிருக்கிறார்.
கேரள நாட்டின் வயநாட்டில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 300 மி.மீ. மழை பதிவானதை அயடுத்து வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா அருகே உள்ள மலைப்பகுதிகளில் நள்ளிரவில் அடுத்தடுத்து நான்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முண்டக்காய் பகுதியில் பல வீடுகள், கடைகள், வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. மலப்புரம், நீலம்பூர் வழியில் செல்லும் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலச்சரிவில் கிட்டத்தட்ட 400 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் சிக்கியிருப்பதாகவும்,. தற்போது வரை 50 பேர் வரை உயிர் இழந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இன்னமும் அதிகமான நபர்கள் நிலச்சரிவுக்குள் சிக்கியிருப்பதால் உயிர் இழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இன்று ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்ல இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பிரதமரும் பயணம் செய்து ஆறுதல் செய்ய வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.