ஸ்டாலின் நிதி ஒதுக்குங்க
இந்தியாவிலேயே மிகச்சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு தமிழகத்தில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இன்றைய நிலையில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் சிறப்புகளை தி.மு.க.வினர் பெருமை பேசும் நேரத்தில் சிஏஜி அறிக்கை கடும் விமர்சனம் வைத்திருக்கிறது.
தரமான மருத்துவம் அனைவருக்கும் இலவசம் என்று செயல்படும் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் 538 – நரம்பியல் அறுவை சிகிச்சைகள், 1375 – சிறுநீரக அறுவை சிகிச்சைகள், 512 – பொது அறுவை சிகிச்சைகள், 1000 – புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், 137 – இதய பைபாஸ் அறுவை சிகிச்சைகள் என மொத்தம் 18 மாதங்களில் 5000 அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கிறது என்று பெருமையாக அறிவித்தார்கள்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மீதான சிஏஜி அறிக்கை. 2016 – 2022-ம் ஆண்டு, தமிழ்நாடு பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவை துறை பராமரிப்பு பற்றிய இந்திய தலைமை தணிக்கையகம் அறிக்கை வெளியாகியுள்ளது.
‘’தமிழ்நாடு மாநில சுகாதார துறையில் குடும்ப நல அசிஸ்டன்ட் மற்றும் பயிற்சியாளர், பெண் சுகாதார ஆய்வாளர் (Women Health Visitor), மகப்பேறு குழந்தைகள் நல அலுவலர் உள்ளிட்ட பணிகளில் 75 சதவிகித காலிபணியிடங்கள் உள்ளன. இரண்டாம் நிலை சுகாதார மையங்களில் தேவைக்கு குறைவாகவே மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உள்ளனர். ஆரம்ப சுகாதார மையங்களில் டாக்டர் மற்றும் நர்ஸ் பணிகளுக்கு பெருமளவு காலி பணியிடங்கள் உள்ளது. சில இடங்களில் மருந்து சப்ளை குறைவாக இருக்கிறது அல்லது இல்லவே இல்லாமலும் இருக்கின்றன.
சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு காத்திருப்பு அறை, ரெஜிஸ்ட்ரேஷன் கவுன்டர், குடிநீர், கழிப்பிடம் போன்றவை இல்லாததும், சமையல், மார்ச்சுரி போன்ற இடங்களில் உள்ள குளறுபாடிகளாலும் சுகாதார துறையின் தரம் அடிப்பட்டிருக்கிறது. ஐ.சி.யூ மற்றும் ஆப்ரேஷன் தியேட்டர்களின் எண்ணிக்கையும் மாவட்ட தலைநகர்களில் பற்றாக்குறையாக இருக்கின்றன. தேசிய சுகாதார கொள்கைப்படி, பட்ஜெட்டில் 8 சதவிகிதத்தை சுகாதாரத் துறைக்கு ஒதுக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு 5 சதவிகிதம் மட்டுமே ஒதுக்குகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்டாலின் கூடுதல் நிதி ஒதுக்கினால் நல்லது. தமிழகத்தின் நிலையே இப்படி என்றால் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் நிலைமை எப்படி இருக்குமோ.?