தமிழக மீனவர்களா, இந்திய மீனவர்களா..?

Image

ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களை தொட்டுப் பார்க்கும் தைரியம் இலங்கைக்கு வராது என்று சொன்னார் பிரதமர் நரேந்திர மோடி. தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலையும் அப்படியே சொன்னார். ஆனால், மீனவர்கள் கைது தொடர்கதையாகவே இருக்கிறது. மீனவர்கள் மட்டுமின்றி, அவர்கள் படகுகளையும் பறிமுதல் செய்கிறார்கள்.

இந்த நிலையில், ‘’இலங்கையால் கைது செய்யப்படும் மீனவர்களை தமிழக மீனவர்கள் என்று பாராமல், இந்திய மீனவர்கள் கைதாகப் பார்த்து விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கும் பா.ஜ.க. தமிழ்நாட்டுத் தலைவர்  அண்ணாமலை, ‘இதற்கெல்லாம் காரணம் கச்சச்தீவை தாரை வார்த்தது தான்’’ என்று பேசி மீனவர்களை எரிச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்.

தமிழக மீனவர்கள் குறித்து அண்ணாமலை, ‘’தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சமுதாய மக்கள், இலங்கை கடற்படையால் பாதிப்புக்குள்ளாவதற்கு முழுமுதற் காரணமே, திமுக காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவைத் தாரை வார்த்ததுதான். அப்போது தெரியவில்லையா அவர்கள் இந்திய மீனவர்கள் என்று? திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது, 80க்கும் மேற்பட்ட மீனவ சகோதரர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவர்கள் இந்திய மீனவர்கள் என்பது நினைவுக்கு வரவில்லையா?

இந்தியக் குடிமக்கள் எங்குப் பாதிப்புக்குள்ளானாலும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, உடனடியாகச் செயல்பட்டு அவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலிருந்து நமது நாட்டு மக்கள் எந்தப் பாதிப்புமில்லாமல் மீட்கப்பட்டுள்ளனர். எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தமிழன், இந்தியன் என்று திமுகவின் மேடைப் பேச்சாளர்கள் போல, பிரிவினை நாடகத்தை அரங்கேற்ற முயற்சிக்க வேண்டாம். அவர் வகிக்கும் மாநில முதலமைச்சர் பதவிக்கு அது அழகும் அல்ல.’’ என்று பேசியிருக்கிறார்.

மீனவர்கள் விடுதலையைப் பற்றி பேசினால் தேவையில்லாமல் தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்று பேசி விஷயத்தை திசை திருப்ப வேண்டாம். முதலில் மீட்கும் வேலையைப் பாருங்கள் என்று மீனவ சங்கங்கள் ஆளும் கட்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்.

Leave a Comment