வாழ்த்துவோம்… வளரட்டும்
சினிமா கதை, வசனம், பாடல், சண்டைக் காட்சிகள் எல்லாமே கற்பனையல்ல, எல்லாமே நம்முடன் நேரடியாக தொடர்புள்ளவை. சினிமாவும் நாமும் வேறல்ல, இரண்டும் ஒன்றுதான்.
ஆகவே, ஒவ்வோர் ஆண்டும் சிறந்த சினிமா கலைஞர்களை ஞானகுரு தமிழ்லீடர் வாழ்த்தி விருது வழங்குகிறது. கடந்த 2025ம் ஆண்டுக்கான வெற்றிக் கலைஞர்களை அறிமுகம் செய்வதில் பெருமைப்படுகிறோம்.
சிறந்த திரைப்படம் – டூரிஸ்ட் ஃபேமிலி
சிறந்த படத்துக்கு பெரிய போட்டி இல்லை என்றே சொல்லவேண்டும். பைசன் காளமாடன், காந்தா, மாரீசன் போன்ற படங்கள் மட்டுமே தகுதிப் பட்டியலுக்கு வந்தன. ஆகவே, மிக எளிதாக டூரிஸ்ட் ஃபேமிலி சிறந்த படமாக வெற்றி பெற்றுவிட்டது.
வன்முறை நிறைந்த படங்கள் வெற்றியை ஈட்டிக்கொண்டிருந்த சூழலில், தமிழ் சினிமாவுக்குள் மீண்டும் அன்பைக் கண்டுவந்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் அன்பின் மூலம் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் கவர்வதுதான் கதை.
ரத்தம் தோய்ந்த கதைகளுக்கு நடுவில் அன்பால் உலகையே வெல்லலாம் என்ற கருத்தை போதிக்கும் கதையை தேர்ந்தெடுத்து, மென்மையான கதைகளையும் தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்று நிரூபித்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் தயாரிப்பாளர்கள் நசரத் பாசிலியன், மகேசு ராஜ் பாசிலியன், யுவராஜ் கணேசன் ஆகியோர் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதைப் பெறுகிறார்கள்.
ஈழத் தமிழர் குடும்பம் கள்ளத் தோணியில் தப்பி ராமநாதபுரம் வந்து, போலீசில் சிக்குகிறது. போலீசில் இருந்த ஒரு நல்லவரால் முகாமில் அடைபடாமல் தப்பிக்கிறது குடும்பம். சென்னை வந்து கேரள குடும்பம் போல நடித்து யோகி பாபு மூலம் வீடு வாடகைக்கு எடுத்து தங்குகிறது. ஈழத் தமிழரான சசிகுமார், அந்த காலணியில் இருக்கும் அத்தனை வீட்டாருடனும் நன்றாகப் பழகி இணக்கமாகிறார். இதற்கிடையே ராமநாதபுரத்தில் குண்டு வெடிக்கவே பழி சசிகுமார் மீது விழுகிறது. சசிகுமாரைத் தேடி அலையும் போலீசில் இருக்கும் வில்லன், இறுதியாக சென்னை வந்து அந்த குடும்பத்தைப் பிடிக்க முயல்கிறார். ஆனால், அந்தக் காலணியில் இருக்கும் அத்தனை பேருமே ஈழத்தமிழ் பாஷையில் பேசி, சசிகுமார் குடும்பத்தைக் காட்டிக்கொடுக்காமல் காப்பாற்றுகிறார்கள். இதுதான் கதை.
இதனை அருமையான திரைக்கதை மூலம் அருமையான ஒரு படைப்பாக மாற்றி, இரண்டரை மணி நேரம் சென்றதே தெரியாமல் படத்தோடு ஒன்றவைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். சசிகுமார், சிம்ரனைத் தாண்டி அவரது மகனாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. கிளைமாக்ஸ் காட்சியில் என்ன நடக்குமோ என்று நம்மை சீட்டின் நுனிக்கே கொண்டுவருகிறது காட்சிகள். மொத்தத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி – குட் ஃபேமிலி படம்.
சிறந்த நடிகர் : பிரதீப் ரங்கநாதன் (டிராகன், டியூட்)
ரஜினிக்குக் கூலி, தனுஷ்க்கு இட்லி கடை, சிவகார்த்திகேயனுக்கு மதராஸி போன்ற படங்கள் வெளியாகியிருந்தாலும், சிறந்த நடிகர்களுக்கான ரேஸில் இவர்கள் இடம் பெறவே இல்லை.
அதேநேரம், ‘பைசன்’ துருவ் விக்ரம், ‘குடும்பஸ்தன்’ மணிகண்டன், ‘வணங்கான்’ அருண் விஜய், ‘மாமன்’ சூரி, ‘காந்தா’ துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தாலும் இவர்கள் எல்லோரையும் ஓரம் கட்டிவிட்டு சிறந்த நடிகர் விருது பெறுகிறார் பிரதீப் ரங்கநாதன்.
இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான டிராகன், டியூட் இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட். தன்னுடைய உருவத்திற்கு ஏற்ற கேரக்டர், அந்த கேரக்டருக்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்து இன்றைய இளைசுகளின் டார்லிங் ஆகியிருக்கிறார் பிரதீப்.
லவ் டுடே படத்தில் தனுஷைப் போலவே பிரதீப் நடிக்கிறார் என்று பேசப்பட்டதை அடுத்தடுத்த படங்களில் முழுமையாகத் தவிர்த்து, பாக்கியராஜ் பாணியில் புதிய நாயகனாக உருவெடுத்துள்ளார். ஆகவே, 2025ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஹிட் கொடுத்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் தமிழ் லீடர் சிறந்த நடிகர் விருது பெறுகிறார்.
சிறந்த நடிகை விருது : அனுபமா பரமேஸ்வரன் (பைசன் காளமாடன்)
கடந்த ஆண்டு வெளியான படங்களில் நடிகைகளுக்கு எந்த படத்திலும் பெரிய வாய்ப்புகளே இல்லை. நித்யா மேனன் இட்லி கடை படத்திலும் தலைவன் தலைவியிலும் நன்றாக நடித்திருந்தார் என்றாலும், இதே போன்ற நடிப்பை பல படங்களில் காட்டிவிட்டார். மதராஸி படத்தில் ருக்மணி வசந்த் ஒரளவு சிறப்பாக நடித்திருந்தார்.
அதேநேரம், கொஞ்சநேரமே பைசன் படத்தில் வந்தாலும், தன்னுடைய கேரக்டரை சிறப்பாகவே நடித்திருந்தார் அனுபவமா பரமேஸ்வரன். எனவே, இந்த ஆண்டு சிறந்த நடிகை விருது அனுபமாவுக்குச் சேர்கிறது.
சிறந்த நடிகர் சிறப்பு பரிசு : சசிகுமார் (டூரிஸ்ட் ஃபேமிலி)
இயக்குனராக இருந்து நடிகரான பிறகு ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்புத் திறனை மேம்படுத்தி வருகிறார் சசிகுமார். அவருக்கு மற்றுமொரு சவாலான கேரக்டர் தான் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தர்மதாஸ் கதாபாத்திரம். அதனை கனகச்சிதமாக கையாண்டிருக்கிறார் சசிகுமார்.
மனைவி சிம்ரனிடம் காட்டும் ரொமான்ஸாக இருக்கட்டும், மகன்களிடம் காட்டும் பாசமாக இருக்கட்டும், காலணிவாசிகள் ஒவ்வொருவரிடமும் காட்டும் அன்பாக இருக்கட்டும், தாஸாகவே வாழ்ந்திருக்கிறார் சசிகுமார். அதிலும், சசிகுமாருக்கும், எம்.எஸ்.பாஸ்கருக்கும் இடையேயான காட்சிகளில் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள்.
ஈழத் தமிழரின் பேச்சில் தொடங்கி, அவர்களின் வாழ்க்கை முறை வரை நம் கண் முன்னே காட்டியிருக்கும் சசிகுமார் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதுக்குத் தகுதியானவர்.
சிறந்த நடிகை சிறப்பு பரிசு : சிம்ரன் (டூரிஸ்ட் ஃபேமிலி)
90-ஸ் கிட்ஸ்களின் கவர்ச்ச்சிக் கன்னியாக இருந்த சிம்ரனுக்கு, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் ஒரு கம்பேக் மூவி. கவர்ச்சியான நாயகியாக மட்டுமின்றி ஒரு நல்ல குடும்பத் தலைவியாகவும் தன்னால் நடிக்க முடியும் என்பதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார் சிம்ரன்.
இலங்கை தமிழில் பேசக்கூடாது என்று அண்ணன் யோகி பாபு சொன்ன பிறகு, மற்றவர்களுடன் சாதாரண தமிழில் பேச திணறுவது, மகனும் கணவனும் கஷ்டத்தில் இருக்கும்போது அவர்களைப் பார்த்து தவிப்பது, அக்கம் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களுடன் பாசமாக பழகுவது என்று படம் முழுக்க மிடில் கிளாஸ் அம்மாவாகவே வாழ்ந்திருக்கும் சிம்ரன் இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசை பெறுகிறார்.
சிறந்த இயக்குநர் விருது : மாரி செல்வராஜ் (பைசன் காளமாடன்)
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், எப்படி பெரியவனாகி தனது லட்சியக் கனவை அடைந்தான் என்ற கதையை கிராமங்களில் நிலவும் சாதிச் சூழல்களுக்கு நடுவில் சிறப்பாகச் சொன்ன இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த ஆண்டும் ஒரு சிறந்த படத்தை தமிழ் திரையுலகுக்கு கொடுத்துள்ளார்.
பாரதிராஜாவுக்கு பிறகு கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு நகர்ந்த தமிழ் சினிமாவை தன் படங்களின் மூலம் மீண்டும் கிராமங்களுக்கு எடுத்துச் செல்கிறார் மாரி செல்வராஜ்.
பைசன் படத்தில் ஜாதியால் பிரிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவன், தன்னைவிட ஜாதியில் உயர்ந்த ஒருவரின் பைக்கில் பயணிப்பதும், பேருந்தில் ஒரு ஆடு எதிர் தரப்பினரின் காலில் சிறுநீர் கழிப்பதும் எப்படி மிகப் பெரிய வன்முறையாக மாறுகிறது என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ். ஒரு நூல் பிசகினாலும் சாதிப் பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புள்ள கதையை எடுத்து கத்தி மேல் நடண்டிருக்கிறார் மாரி செல்வராஜ். ஜாதியை தாண்டி தங்கள் துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் ஒரு படமாகவும் ‘பைசன் காளமாடன்’ படத்தைத் தந்த மாரி செல்வராஜ், இந்த ஆண்டின் சிறந்த இயக்குநராக உயர்ந்து நிற்கிறார்.
அறிமுக இயக்குநர் விருது : அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் ஃபேமிலி)
வன்முறைகள் நிறந்த தமிழ் சினிமா படங்களால் காயம் பட்டிடிருந்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை அன்பே வெல்லும் என்ற கருத்தைக் கொண்ட டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் மயிலாறகால் வருடிய அபிஷன் ஜீவிந்த் இந்த ஆண்டின் சிறந்த அறிமுக இயக்குநர் விருது பெறுகிறார்.
அகதிகளாக வரும் ஒரு குடும்பத்தின் கதையை பிழியப் பிழிய சோகமாகத் தருவது எளிது. அந்த சோகத்தை எல்லாம் கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் சொல்லலாம் என்று ஒரு புதிய ஸ்டைலில் படம் இயக்கியிருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். இன்னும் இவர் பல விருதுகள் வெல்வார்.
சிறந்த நம்பிக்கை இயக்குனர் விருது : இளங்கோ ராம் (பெருசு)
சாதாரண குடும்பப் படம் என்று ஆரம்பித்தால், எவரும் சொல்லத் துணியாத ஒரு விஷயத்தை புதிய கோணத்தில் காட்டிய படம் பெருசு. கொஞ்சம் எசகுபிசகான கதை. அதாவது வயதான ஒருவர் இறந்துவிடுகிறார், அவருடைய மூத்த மகன் சுனில் ரெட்டி, இளைய மகன் வைபவ், மனைவியாக நக்கலைட்ஸ் தனம், மச்சினியாக விஜய் டிவி புகழ் தீபா ஆகியோர் மட்டுமே படத்தைத் தாங்கிப் பிடிக்கும் கேரக்டர்கள்.
பெரியவர் இறந்துவிட்டலும் அவரது பிறப்புறுப்பு மட்டும் விரைத்து நிற்கிறது. அந்த காட்சி மற்றவர்களின் கண்களுக்குப் பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பெரியவரின் குடும்பம் படும் பாடு தான் கதை. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க, அறிமுக இயக்குனரான இளங்கோ ராம் படத்தை இயக்கி இருக்கிறார்.
வித்தியாசமான ஒரு கதையை, கொஞ்சமும் ஆபாசம் இல்லாத திரைக்கதையாக்கி, பார்ப்பவர்களுக்கும் முகம் சுழிக்கும் வகையிலான காட்சிகள் இன்றி, அழகாகக் கொடுத்திருக்கும் இளங்கோ ராம், சிறந்த நம்பிக்கை இயக்குனருக்கான பொருத்தமான தேர்வு.
சிறந்த கதை, திரைக்கதை விருது : பிரவீன் ; ஆர்யன்
கிரைம் தொடர்பான படங்கள் இயக்குவதுதான் மிகவும் சிரமம்” என்பதாக Screeplay King என்றழைக்கப்படுகிற இயக்குனர் பாக்கியராஜே கூறியிருக்கிறார். அப்படியிருக்க அசாத்திய தைரியத்தில் ‘ஆர்யன்’ படத்தில் இதுவரை தமிழில் தொடாத புதிய பாணியில், வில்லன் இறந்த பின்னரும் கொலைகள் தொடர்ச்சியாக நடக்கிறது என்ற ’நாட்’டை வைத்து நேர்த்தியாக கதையை அமைத்து, அதனைப் பிசிறு தட்டாமல் விறுவிறுப்பான திரைக்கதையாக்கி நமக்கு அளித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரவீன்.
அதிலும், கிளைமேக்ஸில் படம் முடியும்போது உடைபடும் ட்விஸ்ட் வேறு ரகம். நடிகருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதை மீதும் திரைக்கதை மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் பிரவீன் சிறந்த கதை, திரைக்கதைக்கு விருது பெறுகிறார்.
சிறந்த நகைச்சுவை நடிகர் விருது : யோகி பாபு (டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி)
எப்போதும் போலவே இந்தாண்டும் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார் யோகி பாபு. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிகுமாரின் குடும்பத்தை சென்னையில் வீடெடுத்து தங்க வைப்பது, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்தையும் பெற்றுக் கொடுப்பது, என அடுத்தடுத்த காட்சிகளில் தனக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் யோகி பாபு. நடுவில் கொஞ்ச நேரம் காணாமல் போனாலும், கிளைமாக்ஸ் காட்சியில் மீண்டும் தோன்றும் போது நடக்கும் சம்பவங்கள், அதை யோகி பாபு கையாண்ட விதம் ரசிக்கும்படியாக அமைந்தது எனலாம்.
டூரிஸ்ட் ஃபேமிலி படம் மட்டுமல்லாமல், தலைவன் தலைவி படத்திலும் ஆங்காங்கே தோன்றி, தோன்றும் காட்சிகளில் எல்லாம் கிளாப்ஸை அள்ளுகிறார் யோகி பாபு. இந்த இரண்டு படங்களுக்காகவும் இந்தாண்டுக்கான சிறந்த நகைச்சுவை நடிகராக யோகி பாபு தேர்வுசெய்யப்படுகிறார்.
சிறந்த நகைச்சுவை நடிகர் சிறப்பு பரிசு : சுனில் ரெட்டி (பெருசு)
பெருசு படத்தில் வைபவ் ஹீரோவாக இருந்தாலும், அவரது அண்ணனாக நடித்திருக்கும் சுனில் ரெட்டி தான் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். இறந்த தந்தையின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை மறைக்க குடும்பத்தினரோடு சேர்ந்துகொண்டு சுனில் படும் பாடு செம இயல்பு.
பக்கத்துக்கு வீட்டுக்காரர் அடிக்கடி கதவைத் தட்டும்போதும் அவரிடம் உண்மையைச் சொல்ல முடியாமல் திணறும் காட்சியாகட்டும், தந்தையின் நிலை குறித்து பெண் மருத்துவரிடம் சொல்ல முடியாமல் நெளியும் காட்சியாகட்டும், சித்தப்பாவான முனீஷ்காந்த் உண்மையை ஊருக்குச் சொல்ல முற்படும்போதெல்லாம் தடுக்கும் காட்சியாகட்டும், தம்பியான வைபவுடன் சரக்கடித்தபடி தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதாகட்டும், எல்லா காட்சிகளிலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சுனில் ரெட்டி.
சிறந்த இசையமைப்பாளர் விருது : ஏ.ஆர்.ரஹ்மான் – படம் தக் லைஃப்
கமல் – மணிரத்னம் காம்போவில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஏமாற்றம் தந்த படமாக இருக்கலாம். ஆனால் அந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை ஏமாற்றவில்லை. மாறாக படம் கொஞ்சம் சொதப்பலாக இருந்தாலும், சில நாட்களுக்காவது பாடல்கள் அதைத் தூக்கிப் பிடித்தன. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தன. இதன்மூலம் தமிழ் திரையுலகில் இன்னும் தான்தான் சக்ரவர்த்தி என்பதை நிரூபித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
கேட்க கேட்க பிடிப்பதல்ல…. முதல் முறை கேட்கும்போதே பிடித்துப் போவதுதான் ஒரு நல்ல பாட்டுக்கு அடையாளம். அந்த வகையில் ‘தக் லைஃப்’ படத்தில் இடம்பெற்ற ‘முத்தமழை இங்கு’, விண்வெளி நாயகா’, ’சுகர் பேபி’ ‘ஜிங்குச்சா’ என அத்தனை பாடல்களும் முதல் முறை கேட்கும்போதே ரசிகர்களை கொள்ளை கொண்டன.
அந்த வகையில் பார்த்தால் இந்த ஆண்டும் தமிழ் திரையுலகின் இசைச் சக்ரவர்த்தி ஏ.ஆர்.ரஹ்மான்தான்.
சிறந்த பாடல் விருது : வழித்துணையே (டிராகன்)
இந்த ஆண்டு சூப்பர்ஹிட் பாடல் என்றால் ரஜினியின் கூலி படத்தில் இடம்பெற்ற மோனிகா. சுபலாசினி, அனிருத் ஆகியோர் பாடியிருந்த இந்த பாடல் மெகா ஹிட் அடித்தது. அதேபோல் ரெட்ரோ படத்தில் கன்னிமா பாடல், தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடல் பரவலாக பாராட்டப்பட்டது.
இவை எல்லாவற்றையும் விட டியூட் படத்தில், ‘என் மூச்சவ பேச்சவ என் மூச்சவ பேச்சவ பேர் சொல்லும் அழகவ எனக்குள்ள கலக்குற ஆக்ஸிஜன் அளவவ யார் அவ யார் அவ… பாடல் இளசுகளின் நெஞ்சைத் தொட்ட பாடலாக உள்ளது.
அதேநேரம் டிராகன் படத்தில் இடம்பிடித்த, ‘வானம் பார்த்து கிடந்தேனே மழையாய் வந்து விழுந்தாயே வழித்துணையே வழித்துணையே நீயே..’ என்ற பாடல் இன்று வரை இசைக்கிறது. ஒரு புதுவித லயத்துடன் வெளியாகியிருக்கும் வழித்துணையே 2025 சிறந்த பாடலாக தேர்வு செய்யப்படுகிறது.
வாழ்த்துக்கள்
சிறந்த பாடகர் ; சித் ஸ்ரீராம் வழித்துணையே – டிராகன்)
இந்த ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த மோனிகா பாடல் பாடிய சுபலாஷினி, கன்னிமா பாடிய சந்தோஷ் நாராயணன், ஊறும் பிளட் பாடிய அபயங்கர் ஆகியோர் குரல் வளத்தினால் அட்டகாசம் செய்திருந்தாலும், டிராகன் படத்தில் இடம்பெற்ற, ‘வழித்துணையே…’ பாடிய சித் ஸ்ரீராம் சிறந்த பாடகர் விருது பெறுகிறார்.
சிறந்த பாடகி ; சின்மயி (முத்தமழை – தக் லைஃப்)
தமிழ் சினிமாவில் நடந்த வித்தியாசமான ஆச்சர்யம். தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் இந்த பாடலை ஒரிஜினலாகப் பாடிய தீ பங்கேற்க முடியாமல் போகவே, அவருக்குப் பதிலாக மேடையில் சின்மயி பாடினார். சின்மயி குரல் இந்த பாடலை ஒரு மேஜிக்காக புரட்டிப் போட்டது. எனவே, சட்டென 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது. தன் குரலால் ஒரு பாடலின் தலையெழுத்தை மாற்றிய சின்மயி 2025 சிறந்த பாடகி விருது பெறுகிறார்.
சிறந்த பாடலாசிரியர் விருது : பால் டப்பா (தனியிசை பாடல்கள்)
ராப் பாடகராக இன்றைய இளசுகள் மனதை கொள்ளையடித்திருப்பவர் பால் டப்பா எனப்படும் அனிஷ். தனியிசைப் பாடல்கள் மூலம் ஏராளமான ரசிகர்களைத் தன்வசப்படுத்தி உள்ளார் பால் டப்பா.
‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ (His name is John) பாடல் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு ராப் பாடியிருக்கிறார்.
டியூட் படத்தில் ஊறும் பிளட் பாடல் பாடியிருக்கிறார். புதிய களத்தில் தமிழில் இறங்கியிருக்கும் பால் டப்பாவை வரவேற்கும் வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் விருது பெறுகிறார்.
காத்து மேல..’, ‘ஐ’ போன்று வைரலான சுயாதீன இசைப்பாடல்களைப் பாடி ஃபேமஸ் ஆகியிருக்கும் பால் டப்பாவின் இயற்பெயர் அனீஷ். ‘மக்காமிஷி’, ‘ஓ மாரா’ எனத் தமிழ் சினிமாவில் இவர் பாடியுள்ள பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட். நடனக் கலைஞர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் எனப் பன்முகமாக இயங்கி வரும் பால் டப்பா மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறார்.
சிறந்த துணை நாயகன் – சரத்குமார் (டியூட்)
வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக அசத்திய சரத்குமார் இப்போது சிறந்த துணை நாயகனாக நடிக்கத் தொடங்கியிருப்பது தனிச்சிறப்பு. துப்பாக்கி எடுத்து நாலு பேரைச் சுட்டு, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, முகத்தை இறுக்கமாக வைப்பதுதான் வில்லனின் இலக்கணம் என்றால், அந்த இலக்கணத்தை மீண்டும் ஒருமுறை உடைத்து ஏறிந்திருக்கிறார் சரத்குமார். (முதல் முறை அவர் புலன் விசாரணை படத்தில் அதை உடைத்து எறிந்திருக்கிறார்.)
டியூட் படத்தில் ஜாதி வெறிபிடித்த, ஜாதிக்காக தன் தங்கையையே கொலை செய்த அமைச்சராக ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சரத்குமார். டியூட் படத்தில் சிரித்துக்கொண்டே நாயகனையும், நாயகியையும் மிரட்டி பணியவைக்கும் அவரது நடிப்பு பாணிக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த துணை நாயகன் விருது பார்சல்.
சிறந்த துணை நடிகை – ரஜிஷா விஜயன் (பைசன் காளமாடன்)
கேரளத்து மாடர்ன் பெண் ரஜிஷா விஜயன். ஆனால் பைசன் காளமாடன் படத்தில் அதற்கான சுவடே தெரியாமல் அக்மார்க் கிராமத்துப் பெண்ணாக மாறி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தம்பிக்காக அப்பாவிடம் பரிந்து பேசுவது, அவன் காதல் கைகூடவேண்டுமே என்று தவிப்பது, க்ளைமேக்ஸ் காட்சியில் தம்பி துருவ் கபடியில் ரைட் செல்லும்போது, அதைப் பார்ப்பதற்கு தைரியமில்லாமல் முகத்தை மூடிக்கொள்வது என்று ஒரு அக்மார்க் கிராமத்து அக்காவகவே மாறியிருந்தார் ரஜிஷா விஜயன். இந்த ஆண்டின் சிறந்த துணை நடிகை என்று அவரை தாராளமாக சொல்லலாம்.
சிறந்த எதிர்நாயகன் விருது : சவுபின் சாஹிர் (கூலி)
ரஜினி, கமல், அஜித், தனுஷ் படங்கள் வந்தாலும் சிறந்த வில்லன் என்பதற்கும் சரியான போட்டி இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இட்லி கடை படத்தில் அருண் விஜய் வில்லனாக சிறப்பாக நடித்திருந்தார் என்றாலும், அவரது கேரக்டர் எந்த வகையிலும் ஒட்டாத ஒன்றாகவே அமைந்துவிட்டது.
தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டில் மலையாள கரையில் இருந்து வில்லனாக இறக்குமதி செய்யப்பட்டவர் சவுபின் சாஹிர். கூலி படத்தில் முக்கிய வில்லன் நகார்ஜுனாதான் என்றாலும், அவரை ஓவர்டேக் செய்து ரசிகர்களின் மனதில் பச்சென்று ஒட்டிக்கொள்கிறார் சவுபின்.
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் மென்மையான வேடத்தால் மனம் கவர்ந்த இந்த சேட்டன், ‘கூலி’யில் கொடுரமாக நடித்து ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்தார். சத்யராஜ், ஆமிர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா என்று பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்தாலும் ரஜினிக்கு அடுத்ததாக சவுபின்தான் ரசிகர்கள் மனதில் நின்றார். அவர்தான் இந்த ஆண்டின் சிறந்த வில்லன்.
நல்லா இருங்க சேட்டன்.
மொக்கை திரைப்படத்துக்கு விருது
நல்ல படங்களைப் பாராட்டுவது போன்று மரண மொக்கை படங்களையும் விமர்சனம் செய்யவேண்டியது ரொம்பவே அவசியம். அந்த வகையில் சிக்கியிருக்கிறார் மணிரத்னம்.
தக் லைஃப் – மணிரத்னம் (இயக்குனர்), கமல், சிம்பு (நடிப்பு)
சென்ற ஆண்டும் மிக மொக்கையான படத்திற்கான விருது கமல் நடித்த இந்தியன் 2 படத்துக்குத்தான் சென்றது. இந்தமுறையும் கமல் நடிப்பில் வெளியான தக் வைஃப் படத்துக்குத்தான் செல்கிறது. அரதப்பழசான கேங்ஸ்டர் கதையாகினும் திரைக்கதையில் புதுமை புகுத்தியிருந்தால் படம் கொஞ்சமாவது தேறியிருக்கும். கதையிலும் சொதப்பல், திரைக்கதையிலும் சொதப்பலோ சொதப்பல் என மக்களாலும், சமூக வலைதளங்களாலும் வச்சு செய்யப்பட்டது இப்படம். தமிழ் சினிமாவின் லெஜெண்ட் இயக்குனரான மணிரத்னமா இதனை இயக்கினார்? என்று கேட்கும் அளவுக்கு மரண மொக்கைப் படம் தான் தக் லைஃப்.
மரண மொக்கை – DD Next Level
தில்லுக்கு துட்டு, டிடி நெக்ஸ்ட், என்று ராகவா லாரன்ஸைப் போல் தொடர்ந்து பேய்களை நம்பி பிழைத்துவந்த சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பேய்ப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.
சந்தானத்தின் பழைய பேய்ப்படங்களைப் பார்த்து சிரித்த ஞாபகத்தில் இந்த படத்துக்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. யூடியூப்பில் படங்களை விமர்சனம் செய்பவரை, தியேட்டருக்கு வரவழைத்து கொல்லும் பேயான செல்வராகவனிடம் இருந்து சந்தானமும் அவர் குடும்பத்தினரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் பட்த்தின் கதை. படத்தில் சந்தானமும் ரஅவரது குடும்பத்தினரும் தப்பித்தார்களோ இல்லையோ ரசிகர்கள் பலரும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடிவந்தனர். சந்தானம் திரும்பவும் காமெடி பக்கம் திரும்பினால் நல்லது.
சிறந்த வெப் தொடர் விருது : சுழல் 2
2023-ம் ஆண்டில் வெளிவந்த சுழல் வெப் தொடரின் இரண்டாம் பாகம்தான் ‘சுழல் 2’. முதல் சீசனில் முக்கியக் கதாபாத்திரங்களாக வந்தவர்களில் சர்க்கரையும் (கதிர்) நந்தினியும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) மட்டும் இதில் இடம்பெற்றிருந்தனர்.
சீசனில் சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞரான லால் கொல்லப்பட, அந்த வழக்கை காவல் உதவி ஆய்வாளரான கதிர் விசாரிக்கிறார். இந்த கொலையை தாங்கள் செய்ததாக சொல்லி 8 பெண்கள் பொலீஸில் சரண் அடைகிறார்கள். அவர்களில் யார் உண்மையான குற்றவாளி என்று கதிர் விசாரணை நட்த்த, அந்த 8 பெண்களும் இருக்கும் சிறையில் மற்றொரு கைதியான ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு உதவி செய்கிறார். கொலை செய்தது யார்? எதற்காக அந்த கொலை நடந்த்து என்பதை பரபரப்பாக சொல்கிறது சுழல் 2 தொடர்.
முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரை ரசிகர்களை சீட் நுனியில் வைத்திருந்த சுழல் 2 தொடரை இந்த ஆண்டின் சிறந்த வெப் தொடர் என்று சொல்லலாம்.
சிறந்த அறிமுக நடிகை : அஞ்சலி சிவராமன் (பேட் கேர்ள்)
இந்த ஆண்டு யுவராஜ் கல்யாணி – நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், ருக்மணி வசந்த் (கன்னட நடிகை தமிழில் அறிமுகம்) – ஏஸ், மிதிலா பாஸ்கர் – ஓஹோ எந்தன் பேபி, சான்வே மேக்னா – குடும்பஸ்தன், கயாடு லோஹர் – டிராகன், நமிதா கிருஷ்ணமூர்த்தி – காந்தி கண்ணாடி என்று எக்கச்சக்கம் நடிகைகள் வந்திருந்தாலும் சூப்பர் டூப்பர் ஹிட் அறிமுக நடிகை என்று யாரும் இல்லை.
ஆனால், அறிமுக நடிகைகளில் பேட் கேர்ள் அஞ்சலி சிவராமன் குறிப்பிட்ட வகையில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். இயக்குனர் வெற்றிமாறனும், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் இணைந்து தயாரித்த பேர் கேர்ள் படத்தை வர்ஷா பரத் இயக்கியிருக்கிறார்.
அறிமுக நடிகையான அஞ்சலி சிவராமன். படத்தின் பெயருக்கேற்றத் தோற்றத்திலும், செயலிலும், பழகும் விதத்திலும், கண்களால் உணர்ச்சிகளை கடத்தும் விதத்திலும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் அஞ்சலி சிவராமன். முதல் படம் என்பதே தெரியாத அளவுக்குத் திறமையான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகை விருது பொருத்தமான தேர்வு.
சிறந்த அறிமுக நடிகர் விருது : பாலா (காந்தி கண்ணாடி)
இந்த ஆண்டு விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி – ஃபீனிக்ஸ், ஆகாஷ் முரளி (முரளியின் இரண்டாவது மகன்) – நேசிப்பாயா, பவிஷ் – நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், குமரன் தங்கராஜன் – குமார சம்பவம், ருத்ரா (விஷ்ணு விஷால் தம்பி) – ஓஹோ எந்தன் பேபி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
அதேநேரம், சின்னத்திரையில் நகைச்சுவையில் கலக்கிக் கொண்டிருந்த பாலா முதன் முதலில் வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய் கிரண் தயாரித்த இப்படத்தை ஷெரிஃப் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார். நகைச்சுவை நடிகரான சூரியை நம்பி எப்படி விடுதலைப் படத்தை வெற்றிமாறன் கொடுத்தாரோ அதுபோல, பாலாவை நம்பி இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் ஷெரிஃப்.
தனக்கு நகைச்சுவை மட்டுமல்ல உணர்ச்சி பூர்வமான கேரக்டர்களிலும் நடிக்கத் தெரியும் என்பதை பாலா இப்பட்டம் மூலம் நிரூபித்திருக்கிறார். சிறந்த இயக்குனரும், நடிகருமான பாலாஜி சக்திவேலுக்கு இணையாக ஹீரோவாக முதல் படத்திலேயே பாலா ஸ்கோர் செய்திருப்பதால் அறிமுக நடிகர் விருதுக்குத் தகுதியானவர் பாலா.
