• Home
  • யாக்கை
  • பெண் பிள்ளைக்கு இந்த டெஸ்ட் எடுக்க மறக்காதீங்க

பெண் பிள்ளைக்கு இந்த டெஸ்ட் எடுக்க மறக்காதீங்க

Image

தைராய்டு பட்டாம்பூச்சி

டீன் ஏஜ் மற்றும் வளரிளம் பெண்களுக்கு இன்று மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது, உடல் பருமன். இதற்கு தைராய்டு குளறுபடியே முக்கிய காரணமாக இருக்கிறது. உடல் பருமன் மட்டுமின்றி முகத்தில் முடி வளர்வது, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கும் இது காரணமாகிறது.

ஆகவே, பெண் பிள்ளைகளும் பெற்றோரும் தைராய்டு சுரப்பி பற்றி தெளிவாக அறிந்துகொள்வது நல்லது. கழுத்துப் பகுதியில் ஒரு பட்டாம்பூச்சி போன்ற வடிவில் இருப்பது தைராய்டு சுரப்பி. இதனுடைய முக்கியமான பணி, தைராக்சின், டிரை ஐயடோ தைராக்சின் மற்றும் கால்சிடோனின் ஆகிய ஹார்மோன்களை சுரக்க வைப்பது தான். உடல் வளர்ச்சி, மூளை செயல்பாடு, உணவு செரிமானம், இதயத் துடிப்பு போன்ற பல்வேறு உடல் இயக்கத்திற்கு தைராக்சின் ஹார்மோன் அவசியம்.  

ஒவ்வொரு நபரின் உடல் தன்மைக்கு ஏற்ப தைராக்சின் சுரக்க வேண்டும். பொதுவாக 50 கிலோ எடை கொண்ட பெண்ணுக்கு 80 மைக்ரோகிராம் அளவுக்கு தைராச்சின் தேவைப்படுகிறது. தைராக்சின் குறைவாக அல்லது அதிகம் சுரப்பது தைராய்டு பிரச்னையாக கருதப்படுகிறது.

தைராக்சின் போதிய அளவுக்கு உற்பத்தி ஆவதற்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது. ஆண்களை விட பெண்களே தைராய்டு குளறுபடியில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தைராக்சின் குறைவாக சுரந்தால் ஹைபோ தைராய்டிசம் என்றும், அதிகமாக சுரந்தால் ஹைபர் தைராய்டிசம் என்றும் அழைக்கப்படுகிறது.

தைராக்சின் குறைவாக சுரந்தால் உடலில் கொழுப்பு எரிவதும், நாடித்துடிப்பும் குறைகிறது. கொழுப்பு எரிக்கப்படுவது குறைவதால் உடல் எடை அதிகரிக்கிறது.  அதேநேரம் ரத்த அழுத்தம் அதிகரிப்பதுடன் தூக்கம் வருவது பிரச்சனையாக இருக்கிறது.

கர்ப்பிணிகளுக்கு ஹைப்போ தைராய்டிசம் பிரச்னை இருக்கும்பட்சத்தில், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம். உடல் பருமன், முகம் மற்றும் கால் வீக்கம், சோர்வான உணர்வு, பசியின்மை, அதிக தூக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் குழப்பம், வலி, முடி உதிர்தல், அதிக முடி வளர்ச்சி போன்றவையும் இதன் அறிகுறிகளாக இருக்கின்றன.

ஹைபர் தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடியுல்ஸ் கட்டிகள் ஏற்படலாம். இந்த கட்டிகளில் 85 சதவீதம் சாதாரண கட்டியாகவும், 15 சதவீதம் புற்றுநோய் கட்டியாகவும் மாறலாம்.

உடல் எடை குறைதல், கை கால் நடுக்கம், திடீரென மனநிலை மாற்றம், தூங்கும்போது சீரற்ற மூச்சு, தாறுமாறான இதயத்துடிப்பு, கண் பார்வை மங்குதல், அடிக்கடி வயிற்றுப்போக்கு, பெண்களுக்கு மாதவிடாய் குளறுபடிகளும் ஹைபர் தைராய்டிசம் நோய்க்கான அறிகுறிகளாக இருக்கிறது.

தைராய்டு சுரப்பியின் நிலையை அறிய ரத்தப் பரிசோதனை மேற்கொள்வது போதுமானது. தைராய்டு ஸ்டுமிலேட்டிங் ஹார்மோன் டெஸ்ட் மூலம் உடலில் தைராய்டு சுரப்பியின் அளவை பரிசோதித்துக்கொள்ள முடியும்.

அயோடின் மற்றும் செலினியம் சத்து அதிகமுள்ள உணவுகளை சரியான அளவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு குளறுபடிகளை ஓரளவு தவிர்க்கலாம். பச்சைக் காய்கறிகளில் அயோடின் சத்து கூடுதலாக இருக்கின்றன. வெள்ளரிக்காய் ஜூஸ், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை அதிகரிக்கும், மஞ்சள் மற்றும் மிளகு கலந்த ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் ஹார்மோன் சீராக சுரக்கவைக்கவும், தைராய்டு இயக்கத்தை சீராக்கவும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெய். தேங்காய் பூ போன்றவை தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம். பெர்ரி பழங்களான ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரி போன்றவை சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக இருக்கின்றன.

ஆப்பிளில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் குவெர்செடின் போன்ற முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கவும் தைராய்டு செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது. தைராய்டு ஹார்மோன்களை சீராக்க உதவும் வைட்டமின் டி முட்டையில் அதிகம் இருக்கிறது. தொடர் நடை பயிற்சியும் ஹார்மோன் கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது.

பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்த தருணங்களில் இருந்தே ஹார்மோன் சுரப்பு பரிசோதனை செய்யத் தொடங்குவது நல்லது. இதனால் திடீரென எடை அதிகரிப்பு, முகத்தில் முடி போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிவிடலாம். மாதவிலக்கு குளறுபடிகளில் இருந்தும் தூக்கப் பிரச்னைகளில் இருந்தும் விடுதலை பெற முடியும்.

தைராய்டு சுரப்பியை பத்திரமா பாத்துக்கோங்க.

Leave a Comment