கிரீடத்தை கழட்டிவிட்டு வீட்டுக்குள் நுழையுங்கள்

இந்திரா நூயி வாழ்க்கை தத்துவம்

இடத்துக்கும் நேரத்திற்கும் தகுந்தாற்போல் நம்மை மாற்றிக்கொள்வதும் வளைந்துகொடுப்பது மட்டுமே வெற்றிக்கு வழி என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் இந்திரா நூயி. இடத்துக்கு தகுந்தபடி வளைந்து கொடுத்துதான் போகவேண்டி இருக்கும். இதற்காக நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக்கொள்வதோ, தண்டித்துக்கொள்வதோ சரியல்ல என்கிறார் இந்திரா நூயி.

வெற்றி நாயகி இந்திரா நூயி பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம். 1995ம் ஆண்டு சென்னையில் பிறந்த இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி, கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தார். அதன்பிறகு ஐஐஎம் கொல்கத்தாவில் எம்.பி.ஏ. முடித்தார். இன்றைய கார்ப்பரேட் உலக போட்டியை சமாளிப்பதற்கு எம்பிஏ படிப்பு மட்டும் போதாது என்பதை தெரிந்துகொண்டு, யேல் யுனிவர்சிட்டியில் மேனேஜ்மென்ட் பட்டமும் பெற்றார். அதன்பிறகு பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய இந்திரா 1994ம் ஆண்டு பெப்சி நிறுவனத்தில் நுழைந்தார். அதன்பிறகு அவரது வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இரவும் பகலுமாக அவர் கொடுத்த உழைப்பும், திட்டமிடலும் அவரை உயர்ந்த இடத்தில் நிறுத்தியது. ஆம், பெப்சி நிறுவனத்தின் சேர்மன் மற்றும் சிஇஓவாக பதவி உயர்வு பெற்றார்.

பெப்சிகோ நிறுவன தலைவர் என்ற அந்தஸ்து கிடைத்ததும் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தார் நூயி. தன்னுடைய திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று சந்தோஷப்பட்டார். அந்த சந்தோஷ செய்தியுடன் வீட்டுக்கு வந்தார் நூயி. அம்மாவை பார்த்ததும் உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப்போகிறேன் என்று ஆனந்தமாக சொல்லியிருக்கிறார். அதன்பிறகு நடந்த சம்பவத்தை இப்போதும் நினைவுகொள்கிறார் இந்திரா.

அன்று வீட்டுக்கு சந்தோஷமாக வந்த இந்திராவிடம், நீ சொல்வதை பிறகு கேட்கிறேன். உடனே கடைக்கு போய் ஒரு பால் வாங்கி வா என்று சொல்லியிருக்கிறார் அவரது அம்மா. வேலைக்காரர்களிடம் சொல்லி வாங்கியிருக்கலாமே என்று இந்திரா கேட்க, நான் சொல்வதற்கு மறந்துவிட்டேன், இப்போது போய் வாங்கிவா என்று மீண்டும் சொல்லியிருக்கிறார்.

என் கணவர் சீக்கிரம் வந்திருப்பாரே, அவரை வாங்கச் சொல்லியிருக்கலாமே என்று கேட்டிருக்கிறார். அவர் சீக்கிரம் வந்தார் என்பது உண்மைதான், ஆனால் அவர் மிகவும் களைப்பில் இருந்தார் அதனால் அவரிடம் சொல்லவில்லை, நீ பால் வாங்கிவா என்று மீண்டும் சொல்லியிருக்கிறார்.

தன்னுடைய கோபம், ஆத்திரத்தை மறைத்துக்கொண்டு பால் வாங்கிவந்திருக்கிறார் இந்திரா நூயி. அப்போது அவரிடம், நீ மிகப்பெரிய பதவியை அடைந்திருக்கிறாய் என்பது தெரியும். உன் வெற்றியில் எனக்கும் பெருமிதம் பெருமை உண்டு. ஆனால் இந்த வீட்டுக்குள் நீ ஒரு அம்மா, மனைவி மற்றும் மகளாகத்தான் இருக்கவேண்டும். அதனால் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு உன் தலையில் இருக்கும் கிரீடத்தை கழற்றிவிட்டு வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

தான் எத்தனை பெரிய பதவியில் இருக்கிறோம், தன்னை பார்த்து இப்படி பேசுவதா என்று ஒரு கணம் நூயிக்கு ஆத்திரம், கோபம் வந்திருக்கிறது. ஆனால், அடுத்த கணம் உண்மையும் புரிந்திருக்கிறது. அம்மா, கணவன் மற்றும் குழந்தைகளிடம் நிறுவன தலைவர் போன்று நடக்கமுடியாது என்பது தெரிந்ததும், உடனே குடும்பப் பெண்ணாக மாறியிருக்கிறார் இந்திரா நூயி.

இதுதான் வளைந்துகொடுத்தல். இதனால் எந்த கெடுதலும் விளையப்போவதில்லை. இப்படி வளைந்துகொடுத்தால்தான் குடும்ப நபர்களை வெற்றிகொள்ள முடியும் என்ற உண்மை தெரிந்ததும் உடனடியாக இறங்கிவந்தார் நூயி. வீட்டுக்கு வெளியே ஒரு தலைவராகவும், வீட்டுக்குள் ஒரு குடும்பப் பெண்ணாகவும் இருப்பதில் இந்திரா நூயி எந்த வருத்தமும் இல்லை. அலுவலகம், வீடு இரண்டும் தன்னுடைய இரண்டு கண்கள் என்பதை புரிந்துகொண்டதால் உடனடியாக வளைந்துகொடுத்தார். அதனாலே வெற்றிகரமான நிர்வாகியாக உயர்ந்திருப்பதுடன், சந்தோஷமான குடும்பத்தலைவிக்கு இலக்கணமாக இருக்கிறார். இவர் 2009ம் ஆண்டின் போர்பஸ் ஆய்வறிக்கையின்படி இந்திராநூயி, உலகின் மிகவும் சக்திவாய்ந்த 3-வது நபராக குறிப்பிடப்பட்டார்.

அதனால் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். எல்லா நேரமும் தான் சொல்வதுதான் நடக்கவேண்டும் என்று உறுதியாக நிற்பவரால், வெற்றிகரமான தலைவராக இருக்கவே முடியாது.

Leave a Comment