லீவு எடுங்க… ஜாலியா இருங்க

Image

லீவு எடுக்காமல் வேலை செய்வதும் நோய்

பொதுவாக கூலி வேலைக்காரர் தொடங்கி ஐ.ஏ.எஸ். பணியாளர் வரை உடல் கோளாறு அல்லது தவிர்க்கவியலாத குடும்ப நிகழ்வுகளுக்கு மட்டுமே விடுப்பு எடுக்கிறார்கள். சிறுவணிகர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கடைக்காரர்கள் பெரும்பாலும் விடுப்பு எடுப்பதே இல்லை. காவல் துறை, மின்சாரம், பால், பூ போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கு விடுப்பு கிடைப்பது குதிரைக் கொம்பு.

வார விடுமுறை தவிர்த்து மாதத்தில் இரண்டு நாட்களாவது வேலை அழுத்தத்திலிருந்து முழு விடுதலை வேண்டும் என்றும் பணிச்சூழல் அச்சமாக இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறது உளவியல்.

ஊழியர்கள் வருடத்திற்கு 20 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்கலாம் என்றாலும், நிறைய பேர் அந்த சலுகையை அனுபவிப்பதில்லை. பணி பாதுகாப்பு குறித்த பயம், மேல் அதிகாரிகளின் கண்டிப்பு காரணத்தினாலே  பலரும் லீவு எடுப்பதைத் தவிர்க்கிறார்கள்.

ஆனால், வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமா இருக்கணும், நான் இல்லைன்னா சிக்கலாயிடும், லீவு போட்டா வேலை குவிஞ்சிடும் என்றெல்லாம் காரணம் சொல்லிக் கொள்கிறார்கள். உண்மையில், விசுவாசத்திற்காக எந்த நிறுவனமும் சம்பளம் தருவதில்லை. வேலையில் தவறு செய்தால் உடனே வெளியே அனுப்பிவிடுவார்கள். யார் இல்லை என்றாலும் நிறுவனம் இயங்கிக்கொண்டே இருக்கும்.

எனவே, உங்களை தவிர்க்க முடியாதவர் என்று எண்ணிக்கொள்ளாமல் அவ்வப்போது விடுப்பு எடுத்துக்கொண்டு ஜாலியாக ஊர் சுற்றுங்கள் அல்லது வீட்டிலேயே என்ஜாய் செய்யுங்கள். லீவு உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரக்கூடியது.

அதனால் தான் ஃபிரான்ஸ் நாட்டில் யாரேனும் இரண்டு மாதம் தொடர்ந்து லீவு எடுக்கவில்லை என்றாலே, கவுன்சிலிங் செய்து கட்டாய விடுப்பு கொடுக்கிறார்கள். அப்படியொரு நிலை நம் நாட்டில் இல்லை என்றாலும் நீங்களே லீவு எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் பணியை அதிகம் நேசிப்பதும், சார்ந்திருப்பதும் ஒரு நோய்.

எனவே, வேலையிலிருந்து கொஞ்சம் விலகியே நில்லுங்கள். அதுவே ஆரோக்கியத்திற்கு நல்லது.  

  • எஸ்.கே.முருகன்,
  • 9840903586

Leave a Comment