ஆசிரியர் பக்கம்.
நாம் உண்ணும் உணவு, பருகும் நீர், சுவாசிக்கும் காற்று, சுற்றுச்சூழல், தூக்கம், தொற்று மற்றும் மரபணுக்களே மனிதர்களுக்கு நோய் உண்டாக்குவதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலான நோய் உருவாக மனம் முக்கியக் காரணியாகத் திகழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, உடல் நன்றாக இருந்தால் மனம் நன்றாக இருக்கும் என்பதை நம்பாதீர்கள். மனம் நன்றாக இருந்தால் மட்டுமே உடலும் நன்றாக இருக்கும்.

உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் மனம் ஆதிக்கம் செலுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். சோகம், துக்கம் போன்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு நுரையீரலில் ஆக்சிஜன் சீராக சென்றுவருவதில்லை. இது ஆஸ்துமாவுக்குக் காரணமாகிறது. பிடிவாதம், ஆங்காரமான மனநிலை கணையத்தின் செயல்பாட்டை சிக்கலாகிறது. இதனாலும் நீரிழிவு ஏற்படலாம்.
அதிக வெறுப்புடன் வாழ்க்கையைத் தள்ளுபவர்கள், மனதின் ஆழத்தில் கசப்புகளை சேமித்து வைத்திருப்பவர்களுக்கு கால்சியம் ஆக்சிலேட் சுழற்சியினால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. எரிச்சல், நம்பிக்கையின்மை காரணமாக மாதவிலக்கு சுழற்சி மாறுதலடைந்து கர்ப்பப்பை பிரச்னைகள் உருவாகின்றன.
அதிக உணவுகளால் கொழுப்பு சேர்வது போலவே அதிக சோம்பேறித்தனம், மந்தமான சிந்தனை காரணமாகவும் உடலில் கொழுப்பு சேர்கிறது. மன அழுத்தம் அதிகரிக்கும்போது உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. எதிர்மறை சிந்தனை, பயம், அச்சம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
சுருக்கமாகச் சொல்வது என்றால் பயம், சந்தேகம். துக்கம், கவலை, மன அழுத்தம், பதற்றம். பொறாமை, கோபம், ஆத்திரம், வெறுப்பு, பேராசை, ஏமாற்றம், போட்டி மனப்பான்மை போன்றவை உடலில் நோய் ஏற்படுவதற்குக் காரணமாகின்றன.
இவற்றை நிவர்த்தி செய்வதற்கான மருந்தும் நம்மிடமே உள்ளன. புன்னகை, சிரிப்பு, அன்பு, நட்பு, நன்றி, காதல், நேசம், இரக்கம், கனிவு, பரிவு, மன்னிப்பு, கொடை, நம்பிக்கை, தாராள மனப்பான்மை, டேக் இட் ஈஸி, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே எந்த நேரமும் புன்னகை அணிந்துகொண்டு ஆரோக்கியத்தை மட்டும் வரவேற்போம்.
எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர். தொடர்புக்கு ; 9840903586