• Home
  • சக்சஸ்
  • நீச்சல் வீராங்கனை ஷிவானி கட்டாரியா

நீச்சல் வீராங்கனை ஷிவானி கட்டாரியா

Image

சாதனை மேல் சாதனை..!


‘விளையாட்டுகளில்  சாதனைகள் புரிவது  எளிதானதல்ல. இதற்கு சவால்களை எதிர்கொள்ள தியாகமும், அர்ப்பணிப்பும், பொறுமையும் அவசியம்’ என்கிறார், 2016ம் ஆண்டு தெற்காசிய போட்டிகளில் தங்கப்பதக்கமும், பெண்களுக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நிகழ்வில் தேசிய அளவில் சாதனையும் படைத்த ஷிவானி கட்டாரியா.
தற்போது தாய்லாந்து நாட்டின் ஃபுகேட்டில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் ஷிவானி, நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஷிவானி, 6 வயது முதலே நீச்சல் பழகி வருகிறார். இதற்காக, அவருடைய தந்தை, அவரை நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் செல்வாராம். ஆனால் ஷிவானி,  ஆரம்பகாலத்தில் நீச்சல் பயிற்சியை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக்கொண்டாரே தவிர, பின்னாளில் அதில் கோலோச்சும் வீராங்கனையாக மாறுவோம் என நினைத்துக்கூட பார்த்ததில்லையாம்.


தன் வீட்டுக்கு அருகிலிருந்த பாபா கங் நாத் நீச்சல் பயிற்சி மையத்தில் நடந்த கோடைக்கால பயிற்சி வகுப்புகளை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக் கொண்டிருந்த ஷிவானி,  விளையாட்டாகத்தான் ஒரு போட்டியில் குதித்தார். மிக எளிதாக வெற்றி கிடைத்தது. அதன் பின்னர் உள்ளூர்ப் போட்டிகள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கி, பரிசுகளை வெல்ல ஆரம்பித்ததன் பலன், நீச்சல் மீது அவருக்கு ஆர்வமும் ஈடுபாடும் வந்துவிட்டது. இதையடுத்து தீவிர பயிற்சி எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டிய ஷிவானி, மாநில மற்றும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார்.


நீச்சலில் ஷிவானி சாதிப்பதற்கு அவருடைய குடும்பத்தார், பக்கபலமாக இருந்துள்ளனர். குறிப்பாக, தன் சகோதரருடன் மேற்கொண்ட பயிற்சியும் போட்டியுமே ஷிவானியை மேலும் வளர்ச்சிக்கு அழைத்துச் சென்றது. ஒரு கட்டத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெறத் தொடங்கிய ஷிவானி, இளம் வயதுடையோருக்கான போட்டிகளில் பல்வேறு சாதனைகளை முறியடிக்கத் தொடங்கினார். ஆரம்பக்கட்டத்திலேயே ஜூனியர் நிலைப் போட்டிகளில் கிடைத்த வெற்றிகள், எதிர்காலத்தில் சீனியிர் நிலையில் விளையாட தகுதிப்படுத்திக்கொள்ள ஷிவானிக்கு உதவியது.
ஹரியானா மாநிலத்தில் அப்போது சூடேற்றப்பட்ட நீச்சல் குள வசதி இல்லாததால், குளிர்காலத்தில் பயிற்சி பெற முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறார், ஷிவானி. இதனால், தன்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகுமோ என்றுகூட எண்ணி அச்சப்பட்டுள்ளார். அதனால் 2013ஆம் ஆண்டு தனது சொந்த ஊரை விட்டு பெங்களூரூக்கு குடிபெயர்ந்தார் ஷிவானி.


அங்கு வந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டதன் விளைவு, அந்த ஆண்டே ஆசிய ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆறாம் இடத்தைப் பிடித்து அசத்தினார். பின்னர், 2014ம் ஆண்டு யூத் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் விளையாடிய ஷிவானி, 2016ம் ஆண்டு குவஹாத்தியில் நடைபெற்ற தெற்காசியப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வென்றார். இந்த வெற்றியே, அவருக்கு 2016 ரியோவில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக்கில் இடம்பிடிக்க வேண்டும் என்ற இலக்குக்கு உந்துசக்தியாக இருந்தது.  ‘ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றது பெரிய படிப்பினையாகவும், எதிர்கால சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொள்ள சிறந்த அனுபவமமாகவும் அமைந்தது’ என்கிறார், ஷிவானி.

மேலும் அவர்,  ‘இந்தியா முழுக்க விளையாட்டு பயிற்சிக்கான வசதிகள் அதிகரித்திருக்கிறது. நாட்டில் இன்னும் அதிக பெண் பயிற்சியாளர்கள் வேண்டும். அப்போதுதான் இன்னும் பல உலகத்தரம் வாய்ந்த பெண் விளையாட்டு போட்டியாளர்களை உருவாக்க முடியும்’ எனச் சொல்லும் ஷிவானி, அர்ஜுனா விருதை வெல்வதையே லட்சியமாகக் கொண்டிருக்கிறார்.
நம்பிக்கை வெல்லட்டும்!

Leave a Comment