வெற்றி நிச்சயம்
‘உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளது’ என்று சொன்னதுடன், அதற்குத் தக்கபடி வாழ்ந்து காட்டியவர் சுவாமி விவேகானந்தர். இவர், கொல்கத்தாவில் வசித்த விஸ்வநாத தத்தர் – புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வராக, 1863 ஜனவரி 12ல் அவதரித்தார். பெற்றோர் அவருக்கு நரேந்திரன் எனப் பெயர் இட்டனர். சிறுவயதிலேயே தியானத்தில் மூழ்க தொடங்கிய அவர், பின்னாளில் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராகச் சேர்ந்தார். மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராகத் திகழ்ந்ததால் நரேந்திரன், விவேகானந்தர் என்று அழைக்கப்பட்டார்.
சிறு வயது முதல் வேதாந்தங்களை நன்கு கற்றுணர்ந்த விவேகானந்தர், அதை மக்களிடம் உணர்த்துவதற்காக இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் கடுமையான துறவு வாழ்க்கை மேற்கொண்டார். ராமநாதபுரத்துக்கு வருகை புரிந்த விவேகானந்தர், அப்போது அங்கு மன்னராய் இருந்த பாஸ்கர சேதுபதியின் வேண்டுகோளை ஏற்று சிகாகோ சென்றார். அங்கு மிகப்பெரிய சொற்பொழிவை ஆற்றினார் சுவாமி விவேகானந்தர். அதுவே, அவருக்கு உலக அளவில் பெயரை வாங்கித் தந்தது.
அதன் பிறகு தொடர்ந்து அயோவா, சென்லுயி, டெட்ராயிட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் உரையாற்றினார். அப்படி வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டவர் ஒருவர், ‘உங்கள் நாட்டுக்கும் எங்கள் நாட்டுக்கும் நீங்கள் கண்ட வித்தியாசம் என்ன’ என்று கேட்டார். அதற்கு, ‘குடும்ப வாழ்க்கையில் உள்ள ஒழுக்கம்தான் வித்தியாசம்’ என்றார் விவேகானந்தர். ‘எப்படி’ என்றார் அயல்நாட்டார். ‘உங்களது நாட்டில் தாயைத் தவிர, பல பெண்களை தாரமாக நினைக்கிறார்கள். எங்கள் நாட்டிலோ தாரத்தைத் தவிர, மற்ற பெண்களை தாயாக நினைத்து வணங்குகிறார்கள்’ என்றாராம் விவேகானந்தர்.
இப்படித் தொடர்ந்து எழுச்சியுரை ஆற்றிய சுவாமி விவேகானந்தரின் கம்பீரத்தில் மனதைப் பறிகொடுத்த மேலை நாட்டுப் பெண்மணி ஒருவர், அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். சுவாமி அந்தப் பெண்ணிடம், ‘ஏனம்மா இந்த ஆசை’ என வினவினார். அதற்கு அவர், தங்களைப்போல் அறிவாளியான குழந்தை எனக்கு வேண்டும் என்பதற்காக உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்’ என்றார். அதற்கு சுவாமிஜி, ‘ஏன் அம்மணி… அறிவாளியான மகன்தானே வேண்டும்? என்னைத் தங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் தாயே’ என்று மென்மையாக எடுத்துக் கூறியபோது, அந்த அயல்நாட்டுப் பெண்மணி அதிசயித்து நின்றாராம்.
அதேபோல் சுவாமிஜி அமெரிக்காவில் தங்கியிருந்தபோது… அவர் இருந்த நீரோடைக்கு அருகில் இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் லேசாக அசைந்துகொண்டிருந்தன. அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால், அவர்களால் ஒரு முட்டையோட்டைக்கூடச் சுட முடியவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலைப் பார்த்த விவேகானந்தர் புன்னகைத்தபடி இருந்தார்.
இதைக் கண்ட ஓர் இளைஞன் அவரிடம், ‘பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல்போன்று தெரியும். ஆனால், நீங்கள் நினைப்பதுபோல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல’ என்றான். உடனே, விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறிவைத்துச் சுட ஆரம்பித்தார். அங்கு மிதந்த அத்தனை முட்டையோடுகளையும் அவர் சுட்டுத் தள்ளினார். இதைப் பார்த்து பெரிதும் வியப்படைந்த இளைஞர்கள், அவரிடம்… ‘நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டுத் தள்ளியிருக்கிறீர்கள்’ என்றனர்.
அதற்கு விவேகானந்தர், ‘என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன்முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன்’ என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள், ‘அப்படியானால் ஒரு குறிகூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது’ என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், ‘எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும்’ என்று பதிலளித்தார்.
அதேபோல் இன்னொரு சமயம், அமெரிக்காவில் நண்பர் ஒருவருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார் விவேகானந்தர். அங்கு வழியில் இருந்த கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு சிறிய குழியில் தூரத்திலிருந்து பந்தைச் சரியாக அந்தக் குழியில் விழவைக்க வேண்டும். அதுதான் போட்டியின் விதி. விவேகானந்தருக்குப் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஒவ்வொருவருக்கும் நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும்’ என்று சொல்லப்பட்டது. ‘எனக்கு ஒரேயொரு வாய்ப்பு போதும்’ என்றார் விவேகானந்தர்.
அருகிலிருந்த நண்பர், ‘இது முடியாது’ என்றார். ஆனால் விவேகானந்தர், ஒரு வாய்ப்பிலேயே பந்தைக் குழிக்குள் சரியாகச் செலுத்திவிட்டார். அவருக்குப் பரிசு கிடைத்தது. அவருடைய நண்பர், ‘எப்படி இது உங்களால் முடிந்தது’ எனக் கேட்டார். அதற்கு விவேகானந்தர்,
‘கிடைக்கும் வாய்ப்பைச் சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும்; திறமைகளைச் செயலில் காட்ட வேண்டும்; பயன்பாடுகளை நினைத்துக்கொள்ள வேண்டும்’ என்று பதிலளித்தார்.
எவருக்கும், வாய்ப்புகள் என்பது வாசற்கதவுகளைத் தட்டிக்கொண்டிருப்பதில்லை… ஆனால், வாய்ப்பு வரும்பட்சத்தில் அதனை அவர்கள் துணிவுடன் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சம்பவங்களே உதாரணம். பலவீனத்தோடு வாழ்ந்த இளைஞர்களிடம், ‘பலமே வாழ்க்கை… பலவீனமே மரணம்’ என்று நம்பிக்கை வித்துகளை விதைத்த விவேகானந்தரை… 1902 ஜூலை 4, இந்த மண் வசப்படுத்திக்கொண்டது, இளைஞர்களுக்கு ஏமாற்றமே!