மூன்றாவது மொழி பிரச்னைக்கு சூப்பர் தீர்வு..!

Image

மோடி ஏற்றுக்கொள்வாரா..?

தமிழ் நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணித்தே தீர்வது என்று மோடியின் மத்திய அரசு அடம் பிடிக்க, நுழைய விடவே மாட்டோம் என்று ஸ்டாலினின் திராவிட அரசு மல்லுக்கட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாவது மொழி ஒன்றை கற்றுக்கொள்வோம், அது தொழில்நுட்ப மொழியாக இருக்கட்டும் என்று பலரும் ஆலோசனை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் கென்னித்ராஜ் அன்பு கொடுத்திருக்கும் தீர்வு இது. ‘’இந்தி மொழி திணிப்பது மூலம் ஜனநாயகத்தின் அடையாளமான  பல்வேறு மொழி,பல்வேறு கலாச்சாரங்களை கொண்டுள்ள இந்தியா எனும் மாநிலங்களின் கூட்டமைப்பில் , ஒன்றிய அரசு ஒரு ஓர்மையை, ஒற்றை மொழி ஆதிக்கத்தை  உருவாக்க முயல்வதாகவே  உள்ளது. ஆனால் பிற மாநிலங்கள் போல தமிழ்நாடு அதை ஏற்றுக்கொள்ளாது.

 அறிவியல், அரசியல், வரலாறு, இலக்கியம், இலக்கணம், பண்பாடு, வணிகம் என பல்வேறு தளங்களில் பரந்து விரிந்து இருக்கும் தமிழ் மொழியை, அதன் தொன்மையை எந்த மொழியாலும் ஈடு செய்ய முடியாது. ஒழுங்கான பள்ளிக்கூட வகுப்பறை கட்டமைப்பு, தொழில் உற்பத்தி, சுகாதார கட்டமைப்பு எதுவும் இல்லாத வட மாநிலங்களில் முதலில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி கொடுங்கள். இருக்கும் பாடத்தையே படிக்க முடியாமல், இடை நிற்றல், குறைந்த கற்றல் விகிதம் என இருக்கும் மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து  மேற்சொன்ன அனைத்திலும் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு அறிவுரை சொல்வது என்பது கோமணம் கட்டிக்கொண்டு இருப்பவர் வேட்டி அணிந்து இருப்பவரிடம் ஆடை சுதந்திரத்தை பற்றி பேசுவது போல உள்ளது.

இந்தி மொழி மட்டும் என்று சொல்லவில்லை, ஏதேனும்.ஒரு இந்திய மொழி என்றுதான் சொல்கிறோம் என அவர்கள் சொல்வது எல்லாம் ஏற்புடையது அல்ல. ஒவ்வொரு பள்ளியிலும் குறிப்பிட்ட மாணவர்கள் ஒரு மொழியை விரும்புவார்கள் .1000 மாணவர்கள் படிக்கும் பள்ளியில்  200 பேர் இந்தி எண்டும், 200 பேர் உருது என்றும், 200 பேர் மராத்தி என்றும் , இன்னும் 400 பேர் வேறு இரண்டு மொழிகளையும் கேட்டால் அந்த பள்ளிக்கூடம் அனைத்து மொழிகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்குமா?

ஒரு பள்ளிக்கு இந்த நிலை என்றால் தோராயமாக 50 ஆயிரம் பள்ளிகளுக்கு ஒவ்வொரு மொழிக்கும் 50 ஆயிரம் வேற்று மொழி ஆசிரியர்கள் வேண்டும் அல்லவா ? ஒரு மொழிக்கு ஒரு பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் எனில் 5 மொழிக்கு  வெவ்வேறு மொழிகளில் 10 ஆசிரியர்கள் …அப்படி எனில் 50 ஆயிரம் பள்ளிகளுக்கு ? 5 லட்சம் பல்வேறுமொழி ஆசிரியர்களை நியமிப்பதா? அத்தகைய ஆசிரியர்கள் இருக்கிறார்களா? அல்லது இறக்குமதி செய்யப்படுவார்களா ? அல்லது மாணவர்கள அச்சுறுத்தி, மார்க் மூலம் மிரட்டி இந்தியை தேர்ந்து எடுக்க சொல்வார்களா ? இந்த கவலை எல்லாம் அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அப்படி ஒரு கட்டமைப்பே பெரும்பாலான வட மாநில பள்ளிகளில் இல்லை. தமிழ் நாட்டில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இன்று வரை நிரப்ப படாமல் உள்ள நிலையில் எப்படி மற்றவர்களை நியமிப்பார்கள் ? இது எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை நாங்கள் தேர்ந்து எடுத்து உள்ள மாநில அரசு எங்கள் பிரதிநிதியாக தீர்மானிக்கும். நீங்கள் சொல்வதை எல்லாம் எங்களால் செய்ய முடியாது ! எங்களுக்கு என்ன தேவையோ அதை தான் செய்வோம் ! நாங்கள் என்ன படிக்க வேண்டும் , என்ன உண்ண வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கவே முடியாது. அது எங்கள் உரிமை. தமிழ்நாட்டின் கோவில்களில் சமஸ்கிருத்ததை விட்டதனால் இந்த நாள் வரை தமிழில் அர்ச்சனை செய்யவே அத்தனை போராட்டம். பிற மொழிகள் இங்கு வந்தால் கல்வியிலும் அதே நிலை தான். கடவுளை விட முக்கியமானது கல்வி . அதில் எந்த சமரசமும் இல்லை

உள்ளூரில் பேச தமிழ், வெளியூர், வெளிநாடுகளில் பேச ஆங்கிலம் இதுவே எங்கள் திட்டம், கொள்கை. நீங்களும் ஆங்கிலம் படியுங்கள், உலகத்தோடு இணையுங்கள். உங்களுக்கு  ஆங்கிலம் வரவில்லை என்பதற்காக, உங்கள் மொழியை எங்கள் மீதி திணிக்காதீர். அப்படி மூன்றாவதாக ஏதேனும் ஒரு மொழி தேவை என நினைத்தால் Python, C என எதேனும் ஒரு தொழில் நுட்ப மொழியை இந்தியா முழுவதும் அமல் படுத்துங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியானது கிடைக்கும்’’ என்று வழிகாட்டுகிறார்.

நல்ல தீர்வாக இருக்கிறது. இதை இந்தியா முழுக்கவும் பின்பற்றலாம்.

Leave a Comment