மாலை டியூஷனில் மாணவர்களுக்கு சுண்டல்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 155

பெருநகர சென்னைக்கு மேயராவதற்கு முன்பிருந்தே மாணவர் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சைதை துரைசாமி. மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், இலவச ஜெராக்ஸ், கட்டண உதவி என்று பல்வேறு சேவைகள் செய்ந்து வந்தார் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டை மாடல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சுண்டல் வழங்கி ஊக்கப்படுத்துவதை தொடர்ந்து செய்து வந்தார்.

அதே பாணியில், அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் மாலை நேர டியூஷனில் பங்கேற்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சுண்டல் கொடுப்பதற்கு முன்வந்தார் சைதை துரைசாமி. தன்னுடைய சொந்தப் பணத்தில் மாணவர்களுக்கு சுண்டல் கொடுக்கும் நடைமுறையைக் கொண்டுவந்தார். மேயர் தன்னுடைய சொந்த செலவில் சுண்டல் கொடுப்பதை அறிந்த ஆசிரியர்கள், தலைமை அசிரியர்கள் ஆகியோர் தங்கள் சொந்த செலவில் சிறப்பு வகுப்புகளுக்கு வரும் மாணவ, மாணவியருக்கு சிற்றுணவு வாங்கித்தர முன்வந்தார்கள்.

இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான அன்பை அதிகரித்தது. மேயர், ஆசிரியர்கள் ஆகியோர் தங்கள் வளர்ச்சிக்காக இத்தனை தூரம் பாடுபடுகிறார்கள் என்பதை அறிந்து மாணவர்களும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார்கள். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. மாநகராட்சி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கத் தொடங்கியது.

ஒருசில பள்ளிகளில் இரவு 7 மணி வரையிலும் டியூஷன் நடத்தப்பட்ட நேரத்தில், எதிர்பாராத மின் தடை ஏற்படும் சூழல் உருவானது. இந்த வகையில் மாணவர்களுடைய படிப்புக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக சென்னையில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஜெனரேட்டர் நிறுவுவதற்கு மேயர் சைதை துரைசாமி நடவடிக்கை மேற்கொண்டார். இது போன்ற செயல்களால் தனியார் பள்ளிக்கு இணையாக மாநகராட்சிப் பள்ளியும் வளர்ச்சி அடைந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment