சீனப் போர்க்கலை
சீனப் போர்க்கலை வல்லுநர் சுன் சூ (Sun Tzu) உங்களுக்குத் தெரிந்திருக்கும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர் வாழ்ந்தவர். அவர் எழுதியிருக்கும் போர் நுணுக்கங்கள், போர் வியூகங்கள் நாம் வாழும் நவீன காலத்திலும் கூட செல்லுபடியாகின்றன.
உலக அளவில் சுன் சூவின் கருத்துகள் அடங்கிய ‘ போர் செய்யும் கலை’ என்ற புத்தகம் இல்லாத ராணுவக் கல்லூரி நூலகங்கள் எதுவும் இருக்க முடியாது.
சுன் சூ அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?
‘உங்கள் எதிரியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள உங்கள் எதிரியாகவே நீங்கள் மாற வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.
‘எதிரிப்படையை தாக்குவதை விட எதிரியின் வியூகத்தைத் தாக்குவதே மிக முதன்மையானது.’ ‘எதிரியை நீங்கள் சுற்றிச்சூழ்ந்து கொள்ளும் போது அவன் தப்பிச் செல்ல வழியைத் திறந்து விடுங்கள்’ இப்படிச் சொன்னவரும் கூட சுன் சூ தான்.
‘எதிரி பின்வாங்கி ஓட வசதியாக அவனுக்குத் தங்கத்தில் ஒரு பாலம் அமைத்துக் கொடுங்கள்’ என்றவரும் சுன் சூ தான்.
‘துளி ரத்தம் சிந்தாமல் எதிரியை தோல்வியில் தள்ள வேண்டும்’ என்ற சிந்தனை உடையவர் சுன் சூ. சீனாவில் மாசேதுங் நடத்திய மக்கள் போரின் மகத்தான வெற்றிக்கு சுன் சூ வின் போர் உத்திகளும் ஒரு காரணம்.
அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த ராணுவ இயல் நிபுணர்களுக்கு கீழை நாட்டவரான சுன்சூ வைப் பிடிக்காது. அந்த வகையில் அமெரிக்காவில் சுன்சூ வைப் பற்றி ஒரு கிண்டலான நகைச்சுவை வாசகம் ஒன்று உண்டு.
‘இல்லாத இடத்தில் எதிரியைத் தாக்குங்கள். அதுதான் போர்க்கலை’ என்று அமெரிக்கர்கள் சுன் சூவைக் கிண்டலடிப்பார்கள்.
இப்படி கீழை நாட்டு போர்க்கலை வல்லுநர் ஒருவரை நக்கல் செய்த பாவமோ என்னவோ? மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஈரானுடன் அமெரிக்கா மோதிவிட்டு இப்போது விழி பிதுங்கி நிற்கிறது.
- மோகன ரூபன்
