நம்பிக்கை நாயகி
மரணம் ஒன்றைத் தவிர, இந்த உலகில் வேறு எதுவுமே மனிதனுக்கு நல்ல முடிவாக அமைந்துவிடுவதில்லை. ஏனென்றால், அடுத்த நொடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ரகசியம் யாரும் அறியாதது.
சின்னச்சின்ன திருப்பங்களையும் முடிவாக நினைத்து அச்சப்படுபவர்கள்தான் ஏராளம் அந்த திருப்பத்தின் எல்லை வரையிலும் சென்று பார்த்தால்தான், அங்கே வேறு ஒரு வழி இருப்பது தென்படும். ஆனால், தூரத்தில் பார்க்கும்போது, எதுவும் தெளிவாகத் தெரிவதில்லை. எனவே, வழியில்லை என்று திகைத்து நின்றுவிடுகிறார்கள்.
மதிப்பெண் குறைவாக வாங்குதல், தேர்வில் தோல்வி அடைதல், காதல் தோல்வி, கடன் தொல்லை, உடல் வியாதி, வியாபாரத்தில் நஷ்டம், குடும்பத்தில் புரிதல் இன்மை போன்ற அற்பமான காரணங்களைக்கூட எதிர்கொள்ள முடியாமல், தற்கொலை செய்துகொள்பவர்கள், தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் ஏராளம்.
எத்தகைய தோல்வியில் இருந்தும், எத்தகைய சிக்கலில் இருந்தும் ஒருவரால் மீண்டுவர முடியும் என்பதுதான் உண்மை. இந்த சோதனைகள், வேதனைகளில் இருந்து நிச்சயம் வெளிவர முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை ஆழ்மனதில் நங்கூரம் போன்று பதிந்திருக்க வேண்டும்.
எத்தகைய துன்பம் வந்தாலும், அதில் இருந்து மீண்டு சாதனை படைக்க முடியும் என்பதற்கு வாழும் உதாரணமாக இருப்பவர் திரைப்படக் கலைஞரும் நாட்டியக் கலைஞருமான சுதா சந்திரன். அவரது கதையைக் கேளுங்கள்.
திருச்சிக்கு பக்கத்தில் நடந்தது அந்த கொடூரமான சாலை விபத்து. இடுப்புக்கு கீழே பலத்த காயம் ஏற்பட்டது சுதா சந்திரனுக்கு. தன் மகள் உயிர் பிழைத்ததே அதிசயம் என நிம்மதி பெருமூச்சு விட்ட சுதாவின் பெற்றோருக்கு, அடுத்ததாக பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
“ஸாரி. இந்தப் பொண்ணோட உயிரை காப்பாத்தணும்னா… ஒரு காலை எடுத்தாகணும்” என்று சொன்னார்கள் டாக்டர்கள்.
‘கூடாது’ என்று கதறினார்கள் சுதாவின் பெற்றோர். “மூணு வயசிலேயே எந்தப் பாட்டை கேட்டாலும் டான்ஸ் ஆடுவா டாக்டர். பெரிய டான்ஸரா வரணும்னு அவளுக்கு ஆசை.
ப்ளீஸ். எப்படியாவது அவள் காலை எடுக்காமல் காப்பாத்திடுங்க டாக்டர்.” என்று கெஞ்சினார்கள். அவர் முடியாது என்று சொன்னதும், பிரபலமான பல டாக்டர்களை சந்தித்தார்கள்.
ஆனால் எல்லா டாக்டர்களும் சொன்ன ஒரே விஷயம், “வேறு வழியில்லை. இந்தப் பொண்ணு உயிரை காப்பாத்த இருக்கற ஒரே வழி… காலை எடுக்கறதுதான்.” வேறுவழியின்றி கண்ணீருடன் அதற்கு சம்மதித்தனர் பெற்றோர். சுதா சந்திரனின் வயது அப்போது 16. முழங்காலுக்கு கீழே தன் வலது காலை பறி கொடுத்து விட்டு நின்ற சுதா சந்திரனை பார்த்து சொந்தக்காரர்கள் எல்லாம் கவலைப்பட்டார்கள்.
“இனி சுதாவின் வாழ்க்கை சூனியமாகி விடுமோ..?” என்று கண்ணீர் வடித்தார்கள்.
ஆனால், அந்த விபத்தின் காரணமாக தன்னுடைய ஆசையையும் லட்சியத்தையும் விட்டுக்கொடுக்க சுதா தயாராக இல்லை. எனவே, சிறிதும் தளர்வின்றி ஒற்றைக் காலில் நின்று ஓய்வின்றி போராடினார் சுதா. இரவும் பகலும் இருபத்து நான்கு மணி நேரமும் சுதா தன் ஆழ்மனதுக்குள் சொல்லிக் கொண்ட மந்திர வார்த்தைகள் இதுதான்.
“சாதிப்பேன். நான் சாதிப்பேன். மீண்டும் மேடைகளில் நடனமாடி நிச்சயமாக
நான் சாதிப்பேன்.” – இந்த வார்த்தைகள் சுதாவின் ஆழ்மனதுக்குள் பதிய பதிய … அவரது ஆழ்மனம் தன் அற்புத சக்தியைக் காட்டியது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த டாக்டர் சேத்தி என்பவரை சுதாவுக்கு அடையாளம் காட்டியது.
சுதா சந்திரனின் நடன ஏக்கத்தை நன்கு புரிந்து கொண்ட டாக்டர் சேத்தி செயற்கைக் காலை சுதாவுக்குப் பொருத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக நடக்கத் தொடங்கினார் சுதா. ஆனாலும் நடனமாட வேண்டிய அளவுக்கு செயற்கைக் கால் ஒத்துழைக்க வேண்டுமே..?
தினமும் இரவும் பகலும் பல மணி நேரங்கள் செயற்கைக் காலுடன் தள்ளாடி தள்ளாடி கடும் நடனப் பயிற்சிகளை மேற்கொண்டார் சுதா சந்திரன். வலியால் உயிர் போனது.
மீண்டும் மீண்டும் விழுந்தார். மீண்டும் மீண்டும் எழுந்தார்.
டாக்டர் சேத்தியும் அரும்பாடுபட்டு செயற்கைக் காலில் பல்வேறு மாற்றங்களை செய்து கொடுக்க … பலகால பலத்த முயற்சிக்குப் பின் ஒரு நாள் … சுதாவின் லட்சியம் வென்றது.
1984-ஆம் வருடம் செயற்கைக் காலுடன் ஒரு முழுநேர நடன நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார் சுதா சந்திரன். பத்திரிகைகள் எல்லாம் சுதா சந்திரனை பாராட்டி பக்கம் பக்கமாக எழுதினார்கள். அதைப் பார்த்து விட்டு உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் சுதாவுக்கு அழைப்புகள் வரத் தொடங்கின.
அப்புறம் என்ன ?
இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் சுதா சந்திரனின் நடன நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தது. அவருக்கு பேரும் புகழும் குவிந்தது. 1985 ல் சுதா சந்திரனின் சாதனையை மையமாக வைத்து ‘மயூரி’ என்ற திரைப் படம் தெலுங்கில் வெளி வந்து, ஓஹோ என்று ஓடி சூப்பர் ஹிட் ஆனது.
சுதா சந்திரனே அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தார். படமும் ஜெயித்தது. சுதா சந்திரனின் லட்சியமும் ஜெயித்தது.
இதுகுறித்து சுதா சந்திரன் சொல்வது என்ன தெரியுமா..? “நம் மனம்தான் நம் வெற்றிக்கும் தோல்விக்கும் முக்கியமான காரணம். நம்மால் நிச்சயம் முடியும்ங்கிற மனோபாவத்தை வளர்த்துக்கிட்டா நம்மால் எதையும் சாதிக்க முடியும். இதுதான் என் வாழ்க்கை எனக்கு சொல்லிக் கொடுத்த பர்சனல் பாடம்.” என்றார்.
ஆழ்மனதின் அற்புதம் எப்படிப்பட்டது என்பதற்கு உதாரணமாக என்றென்றும் இருப்பார் சுதா சந்திரன்.