சிம்பிள் தீர்வுகள்
கைக் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி என்றால் அதனால் படும் அவஸ்தை வெளிப்படையாகத் தெரிந்துவிடும். அதனால், சிகிச்சை அளிப்பது சுலபமாக இருக்கும். ஆனால், காது வலியால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு கதறுவார்கள். காது பக்கம் கையை வைத்துக்கொண்டு கத்துவார்கள். காது வலியா… அந்த வலியின் தீவிரம் என்னவென்று புரியாமல், என்ன செய்வது என்றும் புரியாமல் பெற்றோர் அதிர்ந்துவிடுவார்கள்.
பெரும்பாலும் இரவு பாதித் தூக்கத்தில் எழுந்தே காது வலிக்கிறது என்று குழந்தைகளும் சிறு வயதினரும் அழுகிறார்கள், உடனடியாக மருத்துவமனைக்கும் செல்ல இயலாமல், எந்த சிகிச்சையும் செய்ய முடியாமல் பெற்றோர்களும் பிள்ளையும் பெரும் அவஸ்தைக்கு ஆளாகிறார்கள்.
காது வலி ஏன் வருகிறது?
பொதுவாக காது வலி குளிர் மற்றும் மழை காலத்திலே அதிகம் வருகிறது. அதோடு சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் இருக்கும் நேரத்திலே காதுவலி அல்லது காது அடைப்பு உண்டாகிறது. காது மூக்கு மற்றும் தொண்டையை இணைக்கும் யுஸ்டாஸியன் பாதையில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படுவதால் வீக்கம் ஏற்பட்டு அழுத்தம் மற்றும் வலியை உண்டாக்குகிறது. எழுச்சி எனப்படும் கட்டி, குருமி ஆகியவற்றால் குழந்தைகளுக்கு கடுமையான காதுவலி ஏற்படலாம். கன்னம் அல்லது காதில் அடிபடும் நேரத்தில் ‘சவ்வு கிழிதல்’ ஏற்பட்டு நோய்த் தொற்றுப் பரவலாம். பட்ஸ் பயன்படுத்துதல், ஷாம்பூ நுழைதல், வெடி சத்தம், பெரிய மணியோசை, பட்டாசு சத்தம் ஆகியவை காரணமாகவும் காது வலி உண்டாகலாம்.
இவை தவிரவும் பல்வேறு காரணங்களால் காதுவலி ஏற்படலாம்.
- சைனஸ் தொற்று
- பல் வலி
- தொண்டை தொற்று
- தாடை வலி
- அலர்ஜி
- ஹெட்போன் பயன்பாடு
விமானப் பயணத்தில் சின்னக் குழந்தைகளுக்கு காது அடைப்பு, காது வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த பிரச்னை தரை இறங்கியதும் சரியாகிவிடும். அதிக புகையினூடே பயணம், சிகரெட் புகை காதுக்குள் செல்வது போன்றவையும் காது வலிக்கு காரணமாக இருப்பதுண்டு. நீச்சல் குளத்தில் குளிப்பதன் காரணமாக நிறைய பிள்ளைகளுக்கு காது வலி ஏற்படுவதுண்டு.
அவசர நிவாரணம்
இதுபோன்ற தருணங்களில் தேங்காய் எண்ணெய்யைக் காய்ச்சி இளஞ்சூடாக பிள்ளையின் காதில் ஊற்றுவதை வழக்கமாக பெரும்பாலோர் வைத்திருக்கிறார்கள். இது, ஆபத்தான பழக்கம் ஆகும். இதற்குப் பதிலாக வெந்நீர் மற்றும் குளிர் ஒத்தடம் கொடுப்பது தற்காலிக தீர்வு தரும். துணியை இளஞ்சூடான நீரில் நனைத்து தண்ணீரை பிழிந்துவிட்டு குழந்தையை ஒருக்களித்து படுக்க வைத்து இரண்டு புற காதுகளிலும் வைத்து எடுக்கலாம். அதே போன்று குளிர்ந்த நீரிலும் துணியை நனைத்து காதுகளில் ஒத்தடம் கொடுக்கலாம்.
காது வலி ஏற்படும்போது குழந்தையை படுக்கையில் சமமாக படுக்க வைக்காமல் கொஞ்சம் உயரமாக வைக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு தலையணை வைத்துப் படுக்க வைக்கலாம். இந்த காலகட்டத்தில் சுவிங்கம் மென்று தின்பது ஓரளவு நிவாரணம் தரும். ஜலதோஷத்தினால் ஏற்படும் காது வலிக்கு ஆயி பிடித்தல், சூடான சூப் அல்லது திரவங்கள் எடுத்துக்கொள்வது தற்காலிக நிவாரணம் தருகிறது.
காது வலிக்கு பூண்டுச்சாறு நல்ல பயன் தருவதாகக் கூறப்படுகிறது. பெரியவர்கள் இதனை பயன்படுத்தலாம். குழந்தை என்றால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் காது சொட்டு மருந்து அல்லது மருந்துகள் எடுத்துக்கொள்வதே நல்லது. பொதுவாக தொற்று நோயினால் ஏற்படும் காது வலி சில நாட்களுக்கு நீடிக்கும். எனவே, மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.