கடவுளின் குழந்தை
பாலிவுட் உலகின் அழகு தேவதையான ஆலியா பட் சமீபத்தில் ஏடிஹெச்டி பாதிப்பு குறித்து வெளிப்படையாகப் பேசி விழிப்புணர்வு கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு பெற்றோரும் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை இது.
நடிகை ஆலியா பட் என்றதும் பால் வடியும் டீன் ஏஜ் பெண் முகம் நினைவுக்கு வரும். அதேநேரம், அவர் உருவாக்கிய சர்ச்சைகளும் நினைவுக்கு வரும். ஏனென்றால் வாரிசு சினிமா தொடங்கி மி டூ வரை ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் இவர் மீது உண்டு.
சரி, தவறு என்று இனம் பிரித்துப் பார்க்காமல் பேசுபவர். இது எந்த அளவுக்கு என்றால், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய ஜனாதிபதி யார் என்று கேள்வி எழுப்பப்பட்டதும் ஒரு நொடி கூட யோசிக்காமல், ‘பிரித்விராஜ் செளகான்’ என்று ஒரு பெயரைக் கூறினார். ஒட்டுமொத்த அரங்கமும் அவரை கேலி செய்து சிரித்தது. அதன் பிறகு சர்தார் ஜோக்ஸ் போன்று ஆலியா பட் ஜோக்ஸ் என்று எக்கச்சக்க முட்டாள் ஜோக்ஸ் அவரைப் பற்றி வலம் வந்தன.
எக்குத்தப்பாகப் பேசிவிட்டு அல்லது எதையாவது தவறாகச் செய்துவிட்டு மாட்டிக்கொள்வது ஆலியா பட்டிற்குப் புதிதில்லை. ஆனால், இதற்கான காரணம் குறித்து முதல் முறையாக மன்ம் திறந்து பேசியிருக்கிறார். தான் ஒரு ஏடிஹெச்டி பாதிப்பு உள்ளவர் என்பதை தைரியமாக இப்போது ஒப்புக்கொண்டுள்ளார். திருமணமாகி, ஒரு பெண் குழந்தைக்குத் தாயான பிறகே இதனை வெளியே சொல்வதற்குத் தனக்கு தைரியம் வந்ததாகவும் கூறியிருக்கிறார்.
இந்த ஏடிஹெச்டி பாதிப்பு குறித்துப் பார்க்கும் முன்பு ஆலியா பட் பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம்.
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மகேஷ் பட்டிற்கும் பிரிட்டிஷ் நடிகை ரஸ்தானுக்கும் பிறந்த ஆலியா பட்டுக்கு இப்போது வயது 31. மும்பையில் உள்ள ஜாம்னாபாய் நர்சி என்ற பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இளம் வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். 2012ம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அந்த படத்தையடுத்து ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கங்குபாய் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்த நேரத்தில் ரன்பீர் கபீரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பு அவர் நடித்த கடைசி படம் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்.. இப்போது ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்துள்ள நிலையில் ஜித்ரா படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நுழைந்திருக்கிறார்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் ஆலியா பட், தனக்கு ஏடிஹெச்டி பாதிப்பு சின்ன வயதில் கண்டறியப்பட்டது என்பதைத் தெரிவித்திருக்கிறார். இந்த பாதிப்பு காரணமாக தன்னால் எந்த ஒரு விஷயத்திலும் சில நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது, எதிலும் ஆழ்ந்து கவனம் செலுத்த இயலாது என்பதையும் பேசியிருக்கிறார்.
சினிமா நடிகைகளுக்கு ஏதேனும் ஒரு நோய் இருப்பது தெரியவந்தால் ரசிகர்கள் அவர்களை பரிதாபமாகப் பார்ப்பார்கள். கொண்டாடவும் மதிக்கவும் மாட்டார்கள் என்பதை எல்லாம் நடிகை சமந்தா உடைத்து முன்னேறியிருக்கிறார், அவரே நான் உண்மையை வெளியே சொல்வதற்கு இன்ஸ்ப்ரேஷன் என்று பாராட்டியிருக்கிறார். நடிக்க வந்த காலத்திலே நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு பல படங்களின் வாய்ப்பை இழந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் நோயில் இருந்து போராடி ஜெயித்து சினிமாவையும் வென்றவர் சமந்தா. குடும்பம் அவர் பக்கம் நிற்கவில்லை என்றதும், அது எத்தனை பெரிய குடும்பம் என்பதை எல்லாம் கண்டுகொள்ளாமல் வெளியே வந்தவர்.
அந்த வகையில் நடிகை சமந்தா மீது இருக்கும் அன்பு காரணமாக அவரது புதிய பட விழாவுக்கு வரவழைத்து, அந்த மேடையில் பேசிய ஆலியா பட், ’’எனது அன்பிற்குரிய சமந்தா. திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் ஹீரோ. உங்களது திறமை, உங்களது வலிமை, ஒரு படத்திற்காக உடலை நீங்கள் வருத்திக் கொள்வதைப் பார்க்கும்போது எனக்கு உத்வேகமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.
ஒரு பெண்ணாக இருப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். அதிலும் ஆண்களின் ஆதிக்கம் இருக்கக்கூடிய சமூகத்தில் வெற்றிகரமான பெண்ணாக வாழ்வது சாதாரணமான விஷயம் கிடையாது. சமந்தா நீங்கள் உங்களது சொந்தக் காலில் நிற்கின்றீர்கள். அதனால்தான் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகின்றீர்கள். இதுமட்டும் இல்லாமல் நீங்கள் உங்கள் கால்கள் மூலம் கொடுக்கும் ஒவ்வொரு உதையும் மிகவுமே முக்கியமானது…’’ என்று மனதாரப் பாராட்டியிருக்கிறார்.
யாரும் நோயை மூடி மறைக்கத் தேவையில்லை என்று வெளிப்படையாகப் பேசியிருக்கும் ஆலியா பட், ‘’ஏடிஹெச்டி பாதிப்பை சின்ன வயதிலே கண்டுபிடிக்க வேண்டும். அந்த பாதிப்பு உள்ளவர்களை எல்லா நேரமும் ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபடுத்தி சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தக் குழந்தைகளைக் கவனிப்பதற்கு பெற்றோர்களுக்கு மிக அதிகப் பொறுப்பும், பொறுமையும் தேவைப்படும். இந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி’’ என்கிறார் ஆலியா பட்.
ஒரு தாயாக மாறிய ஆலியா பட் உலகிலுள்ள அத்தனை குழந்தைகள் மீதும் அன்பு செலுத்தும் வகையில், தன்னுடைய பாதிப்பு குறித்து வெளிப்படையாகப் பேசியது மட்டுமின்றி, இந்தக் குழந்தைகளை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கலாம் என்பதையும் பேசியிருக்கிறார். இந்த பிரச்னைக்குத் தீர்வு காணப்படாத காலகட்டத்தில் ஏடிஹெச்டி பாதிக்கப்பட்டவர்களை கடவுளின் பிள்ளை என்று உயர்த்திப் பிடிப்பார்கள் அல்லது சாத்தான் என்று தள்ளி வைப்பார்கள். இப்போது, அவர்களை நெறிப்படுத்தி, இயல்பான வாழ்வுக்குக் கொண்டுவர முடியும் என்பதை பலரும் அறிந்துகொண்டார்கள். இனி, ஏடிஹெச்டி பற்றி பார்க்கலாம்.
அட்டென்ஷன் டெஃபிஸிட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் என்பதே ஏடிஹெச்டி (ADHD) எனப்படுகிறது. எந்த இடத்திலும் நிலையாக இருக்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பது, ஒரு வேலையை பாதியில் விட்டு அடுத்த வேலையைச் செய்வது, யார் சொல்வதையும் அக்கறையுடன் கவனிக்காமை, பிறரது உணர்வுகள் குறித்து அறிய முடியாத தன்மை போன்றவை இந்த பாதிப்பு காரணமாக ஏற்படலாம். இவற்றை நிறைய பேர் குற்றம், குறையாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் நாட்பட்ட நிலையில், இந்த பிரச்னை பெரிதான பிறகே நன்றாகத் தெரியவரும். இந்த பாதிப்பு பல்வேறு பெயரில், பல்வேறு வகையில் நிகழ்கிறது. இங்கு நாம் கவனச்சிதைவு என்பதை எடுத்துக்கொள்வோம்.
.எப்படி கண்டுபிடிப்பது?
துருதுருவென எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பது அல்லது ஏதேனும் ஒரு சிந்தனையில் ஆழ்ந்து யார் சொல்வதையும் கவனிக்காமல் இருப்பது சாதாரண குழந்தைகளின் இயல்பு அல்ல. என்றாவாது ஒரு நாள் அப்படியிருப்பது பிரச்னை அல்ல. எப்போதும் அப்படி இருப்பது கவனச்சிதைவு ஏடிஹெச்டி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
விளையாட்டை பாதியில் நிறுத்துவது, என்ன செய்தோம் என்பதை மறந்துவிடுவதைக் கண்டால் கண்காணிக்க வேண்டும். கவனச் சிதறல், காரணமின்றி கோபப்படுதல், பொருள் வைத்த இடத்தை மறந்துவிடுதல், திரும்பவும் தேடாமல் இருத்தல் போன்ற குறைகளைக் கண்டால் உடனே மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது. முதல் வருடம் இதனை எந்தக் குழந்தையிடமும் எளிதாகக் கண்டறிய இயலாது. ஆனால், இரண்டாவது வயதிலிருந்தே கண்டுபிடித்துவிட இயலும். நிறைய பேர் பள்ளிக்குச் செல்லும் வயதில் தான் இதனை முழுமையாக கண்டறிகிறார்கள். அதனாலே அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது தாமதமாகிறது.
குறை பிரசவக் குழந்தைகளுக்கு ஏடிஹெச்டி குறைபாடு இருக்க வாய்ப்பு உண்டு என்றாலும் அனைத்து குறை பிரசவக் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு இருப்பதில்லை. தலைமுறை தாண்டி தாய் வழி தந்தை வழியில் முன்னோர்களுக்கு இருக்கும் குறை குழந்தைக்குக் கடத்தப்படலாம். கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு, நல்ல சுற்றுச்சூழல் அமையவில்லை என்றாலும் குழந்தைக்குப் பாதிப்பு உண்டாகலாம்.
புகை பிடிப்பது, மது அருந்துவது, தாய் தந்தை இடையேயான சண்டை சச்சரவு காரணமாக தாய் மன அழுத்தத்துக்கு தள்ளப்படுவது போன்ற காரணிகளும் குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. கர்ப்பிணிக்கு நிகழ்வும் சிறு விபத்து, ஊட்டச்சத்து குறைபாடும் காரணமாகலாம். இந்த பாதிப்பு இரண்டு வகையில் தென்படலாம். அதாவது ஹைபர் ஆக்டிவ் எனப்படும் அதிக துருதுருப்பு, இன்ஆக்டிவ் என்பது மிகுந்த மந்தத் தன்மையுடன் இருக்கலாம். சில குழந்தைகளிடம் இரண்டு பாதிப்பும் ஒரு சேர இருக்கலாம்.
சிகிச்சை
ஏடிஹெச்டி என்பது வளர்ச்சி குறைபாடு மட்டுமே என்பதால் இது ஒரு நோய் அல்ல. இதை சீர்செய்வதற்கு மருந்துகள், மன பயிற்சி, செயல்வழி பயிற்சி என மூன்று விதமான சிகிச்சைகளும் தேவைப்படும். இந்தக் குழந்தைகளை எப்படி பராமரிப்பது, எப்படி பயிற்றுவிப்பது, சமூகத்தில் அவர்களை இயல்பாக நடந்துகொள்ள வைப்பது போன்ற பயிற்சிகள் பெற்றோருக்கு அளிக்கப்படுகின்றன.
அதீத ஆற்றல் அல்லது அதீத மந்த நிலையை சரி செய்வதற்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது என்றாலும் இவை மட்டுமே தீர்வு அல்ல. பயிற்சிகள், புதுப்புது விளையாட்டுகள் மூலமே இவர்களை மற்றவர்கள் போன்று செயல்படச் செய்ய முடியும். ஏதேனும் ஒரு செயலை செய்விப்பதற்கு தொடர்ந்து ஊக்கம் கொடுப்பது, சோர்வடையாமல் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுவதும் முக்கியமான பயிற்சிகள்.
ஒரு வேலையைக் கொடுத்து தானாகவே முடிக்க வைத்து, அதற்காக குழந்தைக்குப் பரிசு அளிப்பதன் மூலம், கவனத்தை ஈர்க்க முடியும். ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையிடம், ‘இங்கு அமர்ந்து சாப்பிட்டால் அடுத்த வேளை உணவின்போது ஒரு சாக்லேட் கிடைக்கும்’ என்று ஆர்வம் தூண்டினால் அந்த எதிர்பார்ப்பிலேயே சாப்பிடும். காலப்போக்கில் இது பழகி விடும். உணவில் மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும் இதே முறையைப் பின்பற்றுவதன்மூலம் இக்குறையை நிவர்த்தி செய்ய முடியும்.
இவர்கள் சிறு வயதில் மிகத் திறமையாக செயல்படலாம். வேகமாக ஓடலாம். ஆனால், இவர்களால் ஒரே கவனத்துடன் நீண்ட நேரம் ஓட முடியாது என்பதால் ஓட்டப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது. எனவே, முன்கூட்டியே பிரச்னை கண்டறியும் பட்சத்தில் விரைவில் அவர்களை இயல்பான சூழலுக்குப் பழக்க முடியும். 10 வயதுக்கு மேல் குறை கண்டறியும் பட்சத்தில் அவர்களை புதிய பழக்கத்திற்குக் கொண்டுவருவது மிகுந்த சிரமம். எனவே குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலை சரியாக இருக்கிறதா என்பதை பெற்றோர் இருவரும் இணைந்து கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஏடிஹெச்டி பாதிப்பு கண்டறியப்பட்டால் மனம் உடைந்து போக அவசியமில்லை. வழக்கமான குழந்தைக்குக் கொடுப்பதை விட இரண்டு மடங்கு அக்கறை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது மட்டுமே பிரச்னை. சரியாக வளர்க்கப்பட்டால் அப்படியொரு குறை இருப்பதை அவர்கள் சொன்னால் மட்டுமே வெளியுலகிற்குத் தெரியவரும்.
அந்த வகையில் ஏடிஹெச்டி என்றால் அச்சப்பட அவசியமில்லை என்பதற்கு வாழும் உதாரணமாக இருக்கும் ஆலியா பட், ஃபகத் பாசில் போன்றவர்களுக்கு நன்றி சொல்வோம்.
.