• Home
  • சக்சஸ்
  • உருவத்தால் வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை

உருவத்தால் வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை

Image

பவுமா எனும் போராளி

சுனில் காவஸ்கர், சச்சின் போன்ற ஜாம்பவான்கள் சராசரிக்கும் குறைவான உயரம் கொண்டவர்கள். ஆனால், இந்தியாவின் சராசரி உயரம் குறைவு என்பதால் யாரும் அவர்கள் உருவத்தைப் பார்த்து கேலி செய்தது இல்லை.

ஆனால், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் பவுமா உயரம் 5.31 அடி என்றாலும் அவரை குள்ளன் என்று கேலி செய்வார்கள். ஏனென்றால் தென்னாப்பிரிக்க வீரர்களின் சராசரி உயரம் 6.2 அடி. அது மட்டுமின்றி தென்னாப்பிரிக்க அணியில் கண்டிப்பாக இரண்டு கருப்பின வீரர்கள் இடம்பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அதனால் கோட்டாவில் வந்தார் என்றும் கிண்டல் செய்வார்கள்.

இந்த கிண்டல், கேலி, புறக்கணிப்புகளைத் தாண்டியே அணியில் இடம் பிடித்தார். அதன் பிறகும் அவருக்கு புறக்கணிப்புகள் இருந்தன. போட்டியில் சதம் அடித்து இருப்பார் ஆனால் அந்த புகைப்படத்தை போடாமல், அவர் அவுட் ஆகும் புகைப்படத்தை வைத்து இருப்பார்கள் இத்தனைக்கு அந்த போட்டியில் தென்னாப்பீக்க அணி வென்று இருக்கும்.

இந்த விமர்சனங்கள், குறிப்பாக அவரது ஆரம்ப காலத்தில், அவரது திறமையை மறைத்து, அவருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தின. ஆனால், பவுமா இவற்றை தனது ஆட்டத்தின் மூலம் தகர்த்தெறிந்து, 2016 இல் அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சதமடித்து (113 ரன்கள்)  தனது திறமையை நிரூபித்தார். 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சேஸிங்கில் தடுமாறி,1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றபோது, அவர் “சேஸிங்கில் எந்த திட்டமும் இல்லை” என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது .அது அவரது வெள்ளை மனதுக்கு ஒரு சான்று.

Rassie van der Dussen and Temba Bavuma celebrate a 50 run partnership of South Africa during day 4 of the third 2021 Betway Test Series game between South Africa and India at Newlands Cricket Ground in Cape Town on 14 January 2022 © Ryan Wilkisky/BackpagePix

கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் அடித்து விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தென்னாப்பிரிக்காவின் 27 ஆண்டு கோப்பை ஏக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார்.

நாங்கள் ஒடுக்க படுத்தபட்டவர்கள் தானே தவிர திறமையற்றவர்கள் இல்லை. திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காதவர்கள், கிடைக்கும் வாய்ப்புகளில் திறமையை முழுமையாக வெளிப்படுத்துபவர்கள் என்பதை நிருபித்திருக்கிறார் பவுமா. இந்த இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்சில் 74 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில். இரண்டாவது இன்னிங்ஸில் 282 என்ற இலக்கை எட்டிப் பிடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்க அணி.

‘’நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்த விதத்தில் சந்தேகங்கள் இருந்தன. இந்த வெற்றி அதை தீர்த்து வைத்து விட்டது. ஒரே தேசமாக நாம் இணைவதற்கான வாய்ப்பு இது. இந்த வெற்றியை நாம் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடுவோம்’ என்ற வெள்ளை மனதுடன் பேசியிருக்கிறார்.

யார் இந்த பவுமா..?

நிறவெறி தாண்டவமாடிய தென்னாப்பிரிக்காவில் 1990ம் ஆண்டு லங்காவில் பிறந்தவர் டெம்பா பவுமா. கேப்டவுனிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கிறது லங்கா என்கிற ஊர். லங்கா ஓர் கருப்பர் நகரம். 99% கருப்பின மக்கள் மட்டுமே வாழக்கூடியப் பகுதி. கேப்டவுனில் வேலை பார்க்கக்கூடிய கருப்பினத்தவர்கள் அங்கே தங்க முடியாது. தங்களின் அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு அவர்கள் நகருக்கு வெளியே சென்றுவிட வேண்டும். அப்படி நகருக்கு வெளியே அவர்கள் குழுவாக தங்கியிருந்த இடம்தான் லங்கா. அங்கேதான் தெம்பா பவுமாவும் பிறந்தார்.

ஏழ்மை குடிகொண்டிருக்கும் பின் தங்கிய பகுதி. மக்கள் நிறவெறியால் அடக்கப்பட்டனர். அரசே அவர்களை ஒடுக்கியது. பவுமாவின் அப்பா ஒரு பத்திரிகையாளர். கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்ட உறவினர்கள் அவருக்குண்டு. இதனால் அந்த லங்காவின் இருளைக் கிழித்துக் கொண்டு வெளியே வர பவுமாவுக்கு ஒரு பிடிப்பு கிடைக்கிறது. ஆனாலும் கிரிக்கெட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவர் நிறைய தடைகளை தாண்டி வர வேண்டியிருந்தது.

வறுமை, கொடுமைக்கு இடையிலும் கிரிக்கெட்டை பவுமா கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். பவுமா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு ஆசிரியர், ‘இன்னும் 15 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?’ என்பதை எழுதிக் கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார். ‘இன்னும் 15 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க அணியின் ஜெர்சியை அணிந்து கிரிக்கெட் ஆட வேண்டும். தென்னாப்பிரிக்க அணியில் இணைந்ததற்காக பிரதமரிடம் கைக்குலுக்கி வாழ்த்துப் பெற வேண்டும்.’ என பவுமா தன்னுடைய கனவை எழுதியிருக்கிறார்.

அதேநேரம் கிரிக்கெட்டில் அவர் மிகப்பெரிய ஹிட்டர் கிடையாது என்றாலும், க்ளாஸாக விளையாடுவார். ஒவ்வொரு ரன்னுக்கும் உயிரைக் கொடுத்து உழைப்பைக் கொட்டும் தீர்க்கம் அவரிடம் இருந்தது. அதனால்தான் கடினமான பிட்ச்களில் அணிக்கு தேவையான பங்களிப்பை செய்துகொடுத்து தன்னுடைய இடத்தை நிலைப்படுத்திக் கொண்டார்.

2016 இல் அவர் பிறந்த லங்காவுக்கு அருகே இருக்கும் நியூ லேண்ட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தன்னுடைய முதல் சதத்தை அடித்தார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் கருப்பின வீரர் ஒருவர் அடித்த முதல் சதம் அதுதான். மைதானத்தில் கூடியிருந்த லங்கா மக்கள் ஆனந்த கண்ணீர் விட்டு தங்களின் சாயலாக வென்று நிற்கும் பவுமாவை கொண்டாடினர்.

கருப்பினத்தவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை தகர்க்கும் வகையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டிலும் இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தென்னாப்பிரிக்க அணியில் குறைந்தபட்சமாக 2 வீரர்களாவது கருப்பினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடுதான் கிரிக்கெட்டில் கருப்பினத்தவர்களின் பங்களிப்பையும் உறுதி செய்தது.

தென்னாப்பிரிக்க தேசிய அணியில் இடம் பிடித்து, தனது முதல் அறிமுகபோட்டியிலேயே சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட் வீரராக மாறிய பிறகும், அவர் தனது குறுகிய உயரத்திற்காக தொடர்ந்து கேலி செய்யப்பட்டார். அப்போது தென்னாப்பிரிக்கா ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. பின்னர் டெஸ்ட், ஒரு நாள், T20 ஆகிய மூன்றிலும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அவர் தனது டி20 அணியை உலகக் கோப்பை இறுதிப் போட்டிவரை வழிநடத்தி துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவிடம் தோற்றார். இருப்பினும், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை,

இப்போது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். தெம்பா பவுமாவின் கதை உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது. எதுவும் இல்லாவிட்டாலும் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்று நம்மை ஊக்குவிக்கிறது. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணி என்றாலே அதிர்ஷ்டமில்லாத அணி என்ற பெயர் உண்டு. ஏராளமான நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் இது வரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றது கிடையாது, சவுத் ஆப்பிரிக்கா என்றால் அரையிறுதி, இறுதி போட்டி என்று வருவார்கள் அதன் பிறகு அவர்களாவே தோற்றுப் போவார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு இயற்கையும் சதி செய்ததுண்டு. வெற்றி பெறும் நிலையில் மழை குறுக்கிட்டு வெற்றியை திசை மாற்றிவிடும். டிஎல்எஸ் முறையில் எடுக்க இயலாத ரன்கள் இலக்காக வழங்கப்படும்.

இது போன்ற அத்தனை சிக்கல்களுக்கும் ஒரு வெற்றியைப் பதிலாகக் கொடுத்திருக்கிறார் பவுமா. நிறவெறி நிறைந்து இருக்கும் தேசத்தில் இருந்து வந்து இருக்கும் முதல் கறுப்பின கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மகத்தான சாதனை. அத்தனை விமர்சனங்களையும் உடைக்கும் சக்தி வெற்றிக்கு உண்டு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் பவுமா.

Leave a Comment