• Home
  • சக்சஸ்
  • வெற்றி தனக்கானது, அடுத்தவருக்கு அல்ல.

வெற்றி தனக்கானது, அடுத்தவருக்கு அல்ல.

Image

வித்தியாசமான யானை சிங்கம் கதை

எவரெஸ்ட் சிகரத்தை ஒரு முறை அடைவது ஆகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அதற்காக அவர் ஒவ்வொரு வருடமும் எவரெஸ்ட் சிகரத்தை அடையவேண்டும் என்று அர்த்தம் இல்லை. தேவையெனில் அடுத்த முறை இன்னமும் குறைந்த நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்து வெற்றி காணலாம். அதேபோல் மலை ஏறுவதற்கு வழிகாட்டியாக தன்னை வடிவமைத்துக்கொண்டு புதியவர்களை ஊக்குவிக்கலாம். இப்படி ஒரு வெற்றியானது, நான்கு பக்கமும் பறந்து செல்லும்படி தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தடுத்து அடையவேண்டிய இலக்குகள் தெளிவாகும்போது, வுழிப்பு வருமே தவிர தலைக்கனம் தோன்றாது.

வெற்றிக்குப் பிறகு தலைக்கனம், ஆணவம் இல்லாமல் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை சொல்கிறது இந்த குட்டிக்கதை.

ஒரு காட்டில் சிங்கம் ராஜாவாக இருந்தது. அந்த சிங்கத்திற்கு உணவு தேடிக்கொடுக்கும் ஆட்காட்டி வேலையை ஒரு நரி செய்துவந்தது. எந்த இடத்தில் மிருகங்கள் வேட்டையாடுவதற்கு வசதியாக இருக்கிறது என்பதை கண்டறிந்து, சிங்கத்திடம் நரி சொல்லும். உடனே சிங்கம் வேட்டையாடி தனக்குத் தேவையான உணவை  எடுத்துக்கொண்டு மீதத்தை நரியிடம் கொடுத்துவிடும். சிங்கத்தின் சேவகன் என்பதால் காட்டில் உள்ள விலங்குகள் சிங்கத்திற்கு கொடுக்கும் மரியாதையை நரிக்கும் கொடுத்தன. இல்லையென்றால் தன்னை காட்டிக்கொடுத்து தின்ன வைத்துவிடும் என்று மற்ற மிருகங்கள் நரிக்கும் பயந்தன.

ஒரு யானை கூட்டத்திற்கு அருகே நரி போனபோது, எந்த யானையும் நரியை மதிக்கவில்லை. எனக்கு தகுந்த மரியாதை கொடுக்கவில்லை என்றால் சிங்கத்தை அனுப்பி உங்கள் கூட்டத்தையே அழித்துவிடுவேன் என்று எச்சரிக்கை செய்தது நரி. அதையும் யானைகள் கண்டுகொள்ளவில்லை. அதனால் கோபமான நரி, நேரடியாக சிங்கத்திடம் சென்றது. இந்த காட்டுக்கு நீங்கள் ராஜாவாக இருக்கும்போது, அந்த யானையும் தன்னை ராஜா என்று சொல்லி வருகிறது. இதனை இப்போதே நீங்கள் தட்டிக்கேட்கவில்லை என்றால் நாளை அத்தனை மிருகங்களும் யானைக்குத்தான் மரியாதை கொடுப்பார்கள் என்று கோள் மூட்டியது

அதனால் கோபமான சிங்கம் உடனே யானை எங்கே இருக்கிறது என்று அறிந்து சண்டைக்குப் போனது. என்னதான் வீரமாக சண்டை போட்டாலும் சிங்கத்தின் பாய்ச்சல் யானையிடம் பலிக்கவில்லை. தனது தும்பிக்கையால் சிங்கத்தை தூக்கி வீசியது. உயிர் தப்பினால் போதும் என்று சிங்கம் தனது இருப்பிடத்திற்கு ஓடிப்போனது. உடனே அத்தனை மிருகங்களும் இனி யானைதான் காட்டுக்கு ராஜா என்று கூக்குரல் போட்டன. ஆனால் யானையோ, நான் தலைவனாக இருக்க ஆசைப்படவில்லை. அந்தப் பதவியில் சிங்கமே இருக்கட்டும் என்று பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தது.

அடுத்த நாள், அந்த யானை குளித்துவிட்டு ஒற்றையடிப் பாதை வழியாக தனது இருப்பிடத்திற்கு வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே சேற்றில் புரண்ட பன்றி ஒன்று உடலெங்கும் சேறுடன் வரவே, அந்த பாதையில் இருந்து விலகி பன்றி செல்வதற்கு வசதியாக யானை வழிவிட்டது. சிங்கத்திடம் தோற்ற யானை தனக்குப் பயந்து வழி விடுகிறது என்று நினைத்து பன்றிக்கு கொண்டாட்டமாகிவிட்டது. இனிமேல் நானே இந்தக் காட்டுக்கு ராஜா என்று ஆடிப்பாடியது. அதைக் கவனித்த சிங்கம் யானையிடம் வந்து, ஏன் அந்த பன்றியுடன் சண்டை போடவில்லை என்று கேட்டது.

அதற்கு யானை, என்னுடைய வேலை சண்டை போடுவது அல்ல. குளித்துவிட்டு வந்த என் மீது சகதி படக் கூடாது என்றுதான் விலகினேன். யார் ராஜாவாக இருந்தால் எனக்கென்ன, என்னுடைய பலம் எனக்குத் தெரியும். அதனால் என் வேலையை நான் செய்துகொண்டு இருக்கிறேன். மற்றவர்களை பற்றி கவலைப்படுவது எனக்கு தேவையில்லாத விஷயம் என்றது யானை.

இந்த யானையைப் போன்றுதான் மனிதன் வெற்றியை மதிக்கவேண்டும். இந்த யானையின் தெளிவு ஒவ்வொரு வெற்றியிலும் வரவேண்டும். வெற்றி பெறுவதற்காக மட்டுமே திறமையைக் காட்டவேண்டுமே தவிர, எப்படி வெற்றி அடைந்தேன் என்பதை பிறருக்கு எடுத்துக்காட்டுவதற்காக திறமையை வீணடிக்கக்கூடாது.

முதல் முறை பெற்ற வெற்றியில் என்னென்ன தவறுகள் செய்திருக்கிறோம் என்பதை பார்த்து, அந்த குறைகளை அடுத்து களையவேண்டும். தன்னிடம் ஒரு குறையும் இல்லை, அதனால்தான் வெற்றி பெற்றோம் என்று நினைப்பது அழகல்ல. மேலும் இத்தனை சிரமம் இல்லாமல் அடுத்து எப்படி எளிதாக வெற்றி பெறலாம் என்று யோசிக்க வேண்டும். தான் மட்டும் வெற்றி பெற்றால் போதாது, தன்னுடன் உழைத்தவர்கள், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு நபர்களையும் வெற்றியை நோக்கி அழைத்துச்செல்ல வேண்டும். இதுதான் உண்மையான வெற்றியாளனின் அழகு.

Leave a Comment