- எவரெஸ்ட் உச்சியில் என்ன இருக்கிறது..?
இமயமலையின் உச்சியில் எதுவுமே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், அதன் உச்சத்தை அடைவதற்கு ஒரு மாபெரும் போராட்டம் நடத்துகிறார்கள். இதுவே, தோல்விகளுக்கு அஞ்சாத வெற்றியின் தாகம்.
,
எவரெஸ்ட் சிகரம் பற்றி பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம், தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறோம். இமயமலையில், 29,118 அடி உயரம் கொண்டதுதான் இந்த எவரெஸ்ட் சிகரம். பனியால் உறைந்த இமயமலையில் ஏறி, எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சி செய்தவர்களில் வென்றவர்கள் ஒருசிலர்தான்.
பெரும்பாலோர் தோல்வியைத் தழுவி நடுவழியிலேயே திரும்பி வந்துவிட்டனர். மீதிப்பேர் குளிர் தாள முடியாமல் இறந்துபோய்விட்டனர்.
1953ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதியன்று, முதன்முதலாக மனிதன் இந்தச் சிகரத்தைத் தொட்டான். ஆம், நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் மற்றும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹில்லரி ஆகிய இருவர்தான் இச்சாதனையை நிகழ்த்தியவர்கள்.
டென்சிங் என்பவர் ஒரு சாதாரண கூலித்தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர். எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான முயற்சியை 6 முறை மேற்கொண்டு தோல்வியைத் தழுவி இருக்கிறார். பிறகு ஹில்லரியின் அறிமுக நட்பு கிடைத்தது.
ஹில்லரி என்பவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவரும் மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டு தோல்வியைத் தழுவி இருக்கிறார். எனவே, இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பகளாகி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற பல காலம் முயற்சி செய்து, தோல்விகளைச் சந்தித்திருக்கிறார்கள். இவர்களது இடைவிடாது முயற்சி என்பது கடைசியில் வெற்றிபெற்றது.
1953 மே 29ம் தேதி பகல் 11.30 மணிக்கு டென்சிங்கும் ஹில்லரியும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து, அங்கு பிரிட்டிஷ் கொடியையும், இந்தியக் கொடியையும் ஐ.நா. சபை கொடியையும் பறக்கவிட்டனர். இவர்களுடைய சாதனையை அன்று உலகமே பாராட்டி மகிழ்ந்தது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற தத்துவத்தின் அடிப்படையில் வெற்றிபெறுவதற்கான அரிய வாய்ப்புகள் நம்மை வந்து சேரும்.
வெற்றி என்பது உடனே அடையக்கூடிய இலக்கு அல்ல… இடையில் தோல்விகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து ஆக வேண்டும். பிறகு வெற்றிபெற்றதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது டென்சிங், ஹில்லரி மூலமாக நாமும் அறிந்துகொள்வோமாக.