ஆச்சர்ய தகவல்
மன அழுத்தம் என்றாலே கெட்டது அல்ல. எச்சரிக்கை செய்வதாகவும், ஊக்கம் கொடுப்பதாகவும், ஆபத்தை முன்கூட்டி உணர்த்துவதாகவும் நல்ல மன அழுத்தம் இருப்பதுண்டு.
தேர்வு நெருங்குகையில், பணம் கையிருப்பு தீர்கையில், நீண்ட தூரப் பயணத்துக்குத் திட்டமிடுகையில் மன அழுத்தம் நல்லது. இது, நீண்ட நேரம் உழைப்பதற்கும், மாற்றங்களை ஏற்பதற்கும் உதவுகிறது. ஆனால், இந்த மன அழுத்தம் நீண்ட காலம் தொடர்வதே சிக்கலாக மாறுகிறது.
மன அழுத்தம் தொடர்வதால் தூக்கத்தில் பிரச்னை தோன்றும். அடுத்து உடல் வலி, ஜீரணக் கோளாறு, உறவுகளில் சிக்கல் என்று படிப்படியாக பல சிக்கல்களை உருவாக்கிவிடும். இதுபோன்ற தருணங்களில், இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும் என்று வாய்விட்டுச் சொல்லுங்கள். நீங்கள் பலமானவர், முக்கியமான நபர் என்று உங்களுக்கு நீங்கள் சொல்லிக்கொள்ளுங்கள். இதில் போதிய முன்னேற்றம் தென்படவில்லை என்றால் நெருங்கிய நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். தெரிந்தவர்களிடம் பேசுவதற்கு தயக்கம் இருந்தால் மருத்துவர் அல்லது கவுன்சிலிங் செய்பவர்களிடம் பேசுங்கள்.
இந்த எளிதான வழியை விட்டு பலரும் குடிப் பழக்கம், சூதாட்டம், லீவு போட்டு ஊர் சுற்றுதல் போன்ற பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள். இது, மன அழுத்தத்தை அதிகரிக்குமே தவிர, குறைப்பதில்லை. தலைவலி, காய்ச்சல் போன்று மன அழுத்தமும் அவ்வப்போது வந்து போகும் என்பதை புரிந்தாலே, தப்பித்துவிடலாம்.