மனமே மந்திரம்
இந்த உலகில் பல கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கையில், அவர்களில் ஏன் வெகு சிலர் மட்டுமே வெற்றியடைகிறார்கள் என்ற கேள்விக்கு மனம்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. வெற்றியடைபவர் நேர்மறை சிந்தனையையும், தோல்வியடைபவர் எதிர்மறை சிந்தனையையும் கொண்டிருப்பதே, அதற்கு மூலகாரணம். வாழ்க்கையைப் பொறுத்தவரை சிறுசிறு தோல்விகள், தடைகள், புறக்கணிப்புகள் என எல்லாம் வரத்தான் செய்யும். எல்லாவற்றையும் கடப்பதற்கு தேவை மன வலிமை. ஆனால் அதைப் பெறாத சிலர்தான் மன வலிக்குள் மூழ்குகிறார்கள். மனதை கட்டுப்படுத்தி, நம்முடைய லட்சியங்களையும் எண்ணங்களையும் எப்போதும் உயர்ந்த நிலையை நோக்கியவாறு செலுத்தினால், மனதில் எந்த துன்பமும் இருக்காது.
ஒருவர் எவ்வளவு திறமைமிக்கவராக, எத்தனை பணக்காரராக இருந்தாலும் என்ன? அவரது மனம் நிம்மதியாக இல்லையென்றால், அவரை வெற்றி பெற்றவராக கருதவே முடியாது. ஆம், மனம் உறுதியாகவும், வலிமையாகவும், எதையும் சந்திக்கும் வல்லமை கொண்டதாகவும் அமைவதுதான் முக்கியம். சவால்கள் நிறைந்த வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டுமானால், சக்தி வேண்டும். அந்த சக்தியைக் கொடுப்பதுதான் மனம்.
மனிதனின் மனம் குறித்து உலகம் முழுவதும் எத்தனையோ ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும், யாராலும் அதனை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஒரே நொடியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சென்றுவரும் வேகம் கொண்டது. அத்தைகைய மனதை நல்ல சிந்தனைகளைக் கொண்டு நிரப்ப வேண்டும். அதுதான், நமக்கும் நம்மைச் சார்ந்து இயங்குபவர்களுக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும்.
அன்பையும், பொறுமையையும் போற்றிவந்த மனம், இன்று வெறுப்பையும் வன்முறையையும் கொட்டும் இடமாகிவிட்டது. மனிதன் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் அவனது மனமே வித்தாகிறது. மனம் அமைதியாகவும் நல்லெண்ணத்துடனும் இருந்தால் மட்டுமே அவனுடைய சிந்தை, சொல், செயல் அனைத்தும் நலமாக இருக்கும்.
அக்கம்பக்கத்தினரை பார்த்து, ஆடம்பரமாக வாழ்வதுதான் மட்டும்தான் வாழ்க்கை என்று பலரும் அலைகின்றனர். அதனாலே கொலை, கொள்ளை, வன்முறை, வன்புணர்வு உள்ளிட்டவை நாள்தோறும் அதிகரித்துவருகின்றன. மனித மனம் சுயதேவைகளுக்காக விதிமுறைகளை மீறி மாறும்போதுதான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது போலவே, மனதை வலிமைப்படுத்துவதும் முக்கியம். ஏனென்றால் உணர்ச்சிகளின் பிறப்பிடம் மனம்.. நல்ல உணர்வுக்ளைத் தூண்டி, தீய உணர்வுகளை வெளியேற்றினால் மட்டுமே வலிமை கிட்டும். பிரச்னைகளே இல்லாத வாழ்வு வேண்டும் என்று வேண்டுவதைவிட பிரச்னைகளை எதிர் கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொள்வதே நல்லது. நம்மை காயப்படுத்தவும் விமர்சிக்கவும் எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும். பின்னால் பேசுபவர்களுக்கு காது கொடுத்தால் நாம் முன்னே செல்லவே முடியாது.
நல்ல மனதுடன் செயலாற்றுங்கள். அதனால் வரும் விளைவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டால், அதுவே நிம்மதியும் இன்பமும் கொடுத்துவிடும்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்