• Home
  • சர்ச்சை
  • ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவியின் இந்து அவதாரம்

ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவியின் இந்து அவதாரம்

Image

உண்மை என்ன..?

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பேர் குவிந்துவருகிறார்கள். இதில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி கலந்து கொண்டிருப்பது இந்துக்களை குஷிப்படுத்தியிருக்கிறது.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் ஒன்று கூடும் இடமான திரிவேணி சங்கமம் அமைந்துள்ள உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 45 நாட்கள் நடைபெறும் கும்பமேளாவில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி கலந்துகொள்வது இந்துக்களை குஷிப்படுத்தியிருக்கிறது.

இது குறித்து பேசும் இந்துமத ஆதரவாளர்கள், ‘’ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை கொடுத்தவர் இந்திய ஆன்மீக ஞானி நீம் கரோலி பாபா என்று சொல்லப்படுகிறது. 1970களில் ஸ்டீப் ஜாப்ஸ் உச்சகட்ட மனநெருக்கடியில் இருந்தார், தொட்டதெல்லாம் தோல்வி, எதிர்காலம் தெரியா அளவு நெருக்கடி, திரும்பும் திசையெல்லாம் அவமானம் என அவரின் வாழ்வு இருளில் இருந்தது எதிர்காலம் தெரியா கடும் இருளில் சிக்கியிருந்தவருக்கு மன ஆறுதல் தேவைபட்டது.

அதை அவரின் மதம் கொடுக்கமுடியவில்லை, அமெரிக்க மனநல மருத்துவர்களால் கொடுக்க முடியவில்லை. பெரும் பெரும் தொழிலதிபர்களால் யாராலும் தன்முனைப்பு கும்பலாலும் கொடுக்க முடியவில்லை மேல்நாட்டில் மனநிம்மதியினை ஆன்மீகத்தில் அடையமுடியும் என நம்புவோர் இந்தியாவில் வரும் இடங்கள் இரண்டு ஒன்று ஹிமாலயம் இன்னொன்று தமிழக திருவண்ணாமலை. ஸ்டீவ் ஜாப்ஸ் இங்கெல்லாம் சுற்றினார், அன்று அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது, வாழ்வில் வெறுத்துபோன ஒரு மேல்நாட்டு இளைஞன் அவ்வளவுதான்.

கடைசியில் அவர் சரணடைந்த இடம் உத்திரகாண்டில் இருக்கும் மகா ஞானி நீம் கரோலி பாபா ஆஸ்ரமம் காஞ்சி எனும் சொல் அங்கு கைஞ்சி என அழைக்கபடும், உத்திரகாண்ட் கைஞ்சியில் கரோலிபாபா ஆஸ்ரமம் உண்டு, மகானான அவர் திருவண்ணாமலை ரமணரின் சாயல் அவரை கண்டால் தன் துயரம் தீரும் என சென்றார் ஸ்டீப் ஜாப்ஸ், ஆனால் கரோலி பாபா சில மாதங்களுக்கு முன்பே காலமாகியிருந்தார் ஆனாலும் ஸ்டீவ் ஜாப்ஸ் அங்கு தங்கினார், அங்கு அவர் அமர்ந்த சில நாட்களிலே அவர் உள்ளம் தெளிந்தது, பெரிய தெளிவு பிறந்தது.

அதன் பிறகு பெரும் தெளிவு பெற்றவராக, அச்சம் பயம் குழப்பம் நீங்கியவராக அமெரிக்கா திரும்பினார் கரோலி பாபாவில் பிரசாதமாக கொடுக்கபட்ட ஆப்பிளை தன்னோடு வைத்திருந்தார், அதையே தன் கம்பெனியின் அதிகார லட்சினை ஆக்கினார் அடுத்த 15 ஆண்டுகளில் உலகின் மாபெரும் சக்தியாக வளர்ந்தார் அமெரிக்க பெண் லோரன் பாவல் என்பவரை திருமணம் செய்தார், அவரும் முழு இந்து.

இன்று அந்த லோரன் பாவல் ஜாப்ஸ், கயாவில் கணவனுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு திரிவேணி சங்கத்தில் நீராட பிரக்யாகை வந்திருக்கின்றார் அவரின் அலுவல் பெயர் பழைய பெயராக இருந்தாலும் தற்போது இந்துவாக அவர் சூட்டியிருக்கும் பெயர் கமலா. ஒரு இந்துவாக, இந்துமதத்தில் அடைக்கலமாகி தெளிவுபெற்றவராக நின்ற ஜாப்ஸின் மனைவி இந்து மனைவியாக தன் கணவனின் கடமைதேடி இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அந்த பரம்பொருள் இன்னும் எல்லா வரங்களையும் பலத்தையும் அவரின் முன் ஜென்ம கர்ம்படி கரோலி பாபாவின் ஆசி மூலம் வழங்கட்டும் காவி அணிந்து ருத்திராட்ச மாலை அணிந்து அந்த அம்மையார் சுத்த இந்துவாக வந்தது நெஞ்சை நெகிழவைக்கும் காட்சி நம்மில் ஒருவராக அந்த மேல்நாட்டு இந்து சகோதரியினை வரவேற்பதில் தேசம் பெருமையும் மகிழ்வும் கொள்கின்றது’’ என்று கொண்டாடுகிறார்கள்.

குழப்பம் இல்லாத மனிதர்கள் யாருமே இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் அப்படி குழப்பத்துடன் இந்தியா வந்தது உண்மை. ஆனால், எங்கேயும் இந்து மதமே எனக்கு தீர்வு தந்தது என்று சொல்லவே இல்லை. அவர் இந்தியாவில் உள்ளுணர்வைக் கண்டுபிடித்து நடக்க வேண்டும் என்பதையே கற்றுக்கொண்டேன் என்பதையே சொன்னார்.

அதாவது, “அமெரிக்காவில் நாம் அறிவைப் பயன்படுத்துகிறோம். இந்தியக் கிராமங்களில் அறிவைவிட உள்ளுணர்வைப் பயன்படுத்துகிறார்கள். உலகத்தின் மற்ற எல்லா மக்களையும்விட இந்தியர்களிடம் மட்டுமே உள்ளுணர்வு வளர்ச்சியடைந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அறிவைவிட மிகச் சக்தி கொண்டது உள்ளுணர்வுதான். (இந்திய அனுபவத்தால்) நான் அறிவைவிட உள்ளுணர்வை நம்பத் தொடங்கினேன்.’’ என்று கூறியிருக்கிறார். இதன் அர்த்தம் அவர் இந்து மதத்தை ஏற்றுக்கொண்டார் என்பது அல்ல. இந்துக்கள் வேறு மதம் மாறும்போது கோபமாகும் இந்துக்கள் இப்படி ஒரே ஒருவர் வருவதைக் கொண்டாடுகிறார்கள் என்று நாத்திகவாதிகள் கிண்டல் செய்கிறார்கள்.  

Leave a Comment