பூங்காக்கள் எண்ணிக்கை உயர்த்த நடவடிக்கை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 173

மக்கள் நெருக்கம் அதிகரிக்கும் நகரங்களில் பூங்காக்கள் மட்டுமே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு நகரம் திட்டமிடப்படும் நேரத்திலேயே பூங்காவுக்கு குறிப்பிட்ட அளவு இடம் ஒதுக்கப்படுவது அவசியம். தாவரங்கள், பறவைகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கு பூங்காக்கள் மிகவும் முக்கியம். சுற்றுச்சூழலுக்கு அரணாகவும், நிலத்தடி நீர் பாதுகாப்பாகவும், நகரத்தின் பசுமை முகமாகவும் பூங்காக்கள் திகழ்கின்றன.

அது மட்டுமின்றி, காங்கிரிட் காடு எனப்படும் வீட்டுக்குள் வசிக்கும் மனிதர்களுக்கு உற்சாகம் அளித்து புத்துணர்வூட்டும் பணியையும் பூங்கா மேற்கொள்கிறது.  சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வேலை நிமித்தம் வந்துசெல்லும் வெளியூர்வாசிகளுக்கு தற்காலிக நிழற்கூடமாகவும், நேரம் போக்கும் புகலிடமாகவும்  பூங்காக்கள் விளங்குகின்றன..

குழந்தைகள் ஓடியாடி விளையாடும் அளவுக்கு இட வசதியுள்ள வீடுகளை சென்னையில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அதனால் குழந்தை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு பூங்காக்கள் மிகப்பெரும் ஆறுதலாக விளங்குகின்றன. உழைத்துக் களைத்து ஓய்வு காலத்தைக் கழிக்கும் முதியோர்களுக்கு மாலை நேரங்களில் ஆறுதல் தருவதும் பூங்காக்கள்தான். விடுமுறை நாட்களில் மாணவச் செல்வங்கள் ஆனந்தமாக விளையாடுவதற்கும் பூங்காக்கள் உதவியாக இருக்கின்றன. எந்தச் செலவும் இல்லாமல் மக்களுக்கு ஆனந்தமும், நகரத்திற்கு பசுமை கொடையும் தரும் பூங்காக்களின் எண்ணிக்கையைக் கண்டதும் மேயர் சைதை துரைசாமி அதிர்ந்தே போனார்.

426 கி.மீ. பரப்பளவு கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சியில் சைதை துரைசாமி பதவிக்கு வந்த நேரத்தில் மொத்தமே 260 பூங்காக்கள் மட்டுமே இருந்தன. ஏன் இத்தனை குறைவான எண்ணிக்கை என்று ஆய்வு செய்தார். 1856ம் ஆண்டே சென்னை கார்ப்பரேசனாக மாறி இருந்தாலும், 1919ம் ஆண்டுதான் முழுமையாக சட்டதிட்டங்கள் வரையறுக்கப்பட்டன.  அந்த 1919 முதல் 1996  வரை 91 பூங்காக்கள் மட்டுமே சென்னையில் இருந்தன. அதன்பிறகு  1996 முதல் 2001  வரை 85 பூங்காக்களும்,  2001 முதல் 2006  வரை 40 பூங்காக்களும்,  2006 முதல் 2011 வரை 44 பூங்காக்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது.

சென்னையின் மக்கள் தொகை பெருக்கத்திற்கும், நெருக்கத்திற்கும் இந்த எண்ணிக்கை கொஞ்சமும் பொருத்தமில்லை என்பதை உணர்ந்தார். அதனால் உடனடியாக பூங்காக்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டார். இந்த விஷயத்தில் 40 பூங்காக்கள் அல்லது 50 பூங்காக்கள் என்று தொடங்குவது மக்களுக்கு எந்த வகையிலும் சரிப்படாது என்று முடிவு செய்து ஒரே நேரத்தில் 300 பூங்காக்கள் தொடங்கவேண்டும் என்று திட்டமிட்டார். இத்தனை பூங்கா சாத்தியமாகுமா என்று அதிகாரிகளே மலைத்து நின்றார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment