ஹெல்த் டிப்ஸ்
இன்றைய உணவுமுறை, வேலை, சோம்பேறித்தனம் உள்ளிட்ட பல காரணங்களால் பலரும் பலவித நோய்களுக்குக் காரணமாகின்றனர். இவற்றிலிருந்து அவர்கள் விடுபட சரிவிகித உணவையும், உடற்பயிற்சியையும் மேற்கொள்வது அவசியம். ஜிம்முக்குச் சென்று அவர்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும்கூட, வீட்டிலேயே எளிய முறையில் உடற்பயிற்சி செய்தால், அனைத்துப் பலன்களையும் பெறலாம் என்கின்றனர், மருத்துவர்கள். குறிப்பாக, மாடிப்படி ஏறினாலே, பல பலன்களை அனுபவிக்க முடியும் என்கின்றனர்,
‘இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது படி ஏறுவது நல்லது’ என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.‘மாடிப்படி ஏறுவதால், ரத்த அழுத்தம் குறைவதோடு கால்களுக்கும் வலு கிடைக்கிறது’ என வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டி தன் ஆய்விதழில் குறிப்பிட்டுள்ளது.
வயதாவதால் தசைகள் பலவீனமடைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், வயதோடு தொடர்புடைய உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களும் ஏற்படுகின்றன. இவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அல்லாமல் தசைகளை வலுப்படுத்தக்கூடிய, அதேநேரத்தில் இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்ற வகையான ஏரோபிக் மற்றும் ரெஸிஸ்டன்ஸ் கலந்த பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அலுவலகங்கள், வீடு, ஷாப்பிங் மால் என எங்கே சென்றாலும் படிகள் ஏறுவதற்கு லிஃப்ட், எஸ்கலேட்டர் போன்ற வசதிகளை பயன்படுத்தாமல், படிகளில் ஏறுவதை வழக்கமாக பின்பற்றுவதால், இந்த இரண்டு பயிற்சிகளையும் செய்வதால் ஏற்படும் ஒருமித்த பலன்களைப் பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ஆய்வு. மேலும், மெனோபாஸ் பருவத்தை அடைந்த பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால் இதயத்தின் ரத்தநாளங்கள் இறுக்கமடைவது, மூட்டு இணைப்புகளில் நெகிழ்வுத்தன்மை குறைவு மற்றும் உயர்ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மெனோபாஸ் அடைந்த பெண்களை, ஒரு நாளுக்கு 5 முறை 192 படிகள் ஏறவைத்து 4 வாரங்கள் பயிற்சி மேற்கொண்டு ஆராய்ந்ததில், அவர்களிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டதையும் கண்டறிந்துள்ளனர். தவிர மற்றொரு ஆய்வு ஒன்று, ‘தினமும் குறைந்தபட்சம் 8 மாடி கட்டடம் ஏறி இறங்குபவர்களுக்கு ஆயுட்காலம் கூடும்’ என்று நிரூபித்துள்ளது. வெளிநாடுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் தினமும் படிக்கட்டுகள் ஏறி இறங்குபவர்களில் 33 சதவீதம் பேர் ஆயுள் அதிகரித்துள்ளது என்பதை கணித்துள்ளனர்.
மாடிப்படி ஏறி இறங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம்….
* தினமும் படி ஏறி இறங்குவது ஒரு நல்ல உடற்பயிற்சியாக திகழ்கிறது. இது, உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று கார்டியோ வகை உடற்பயிற்சிகளை செய்வதற்கு ஈடான நன்மைகளை தரக்கூடியது.
* படி ஏறுதல் உங்களைப் பலவிதத்தில் காக்கும். உதாரணத்திற்கு உங்கள் இதயம் மற்றும் நுரையீரலைப் பாதுகாப்பாக வைத்திடும். திடமான நுரையீரல், அதிக அளவிலான ஆக்சிஜனை உள்ளிழுக்க உதவும். அதேபோல் திடமான இதயம், ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை தசைநார்களுக்கு வேகமாக எடுத்துச் செல்ல உதவும்.
* உங்கள் கால்கள் மற்றும் பின்புற தசைகளின் திடத்தை மேம்படுத்தும்.
* தினமும் மாடிப்படிகளைப் பயன்படுத்தினால், மன அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
* தினமும் படிகளைப் பயன்படுத்தும்போது, இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
* மருத்துவரின் அறிவுரையுடன் மாடிப்படிகளில் ஏறுவது, கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறந்த உடற்பயிற்சி என்றும் கூறலாம்.
* மாடிப்படி ஏறுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை ஊக்குவித்து, டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் தீவிரமான பிற நோய்கள் ஏற்படும் இடர்ப்பாட்டை குறைக்கும்.