• Home
  • சினிமா
  • ஸ்டாலின் எதிர்ப்பு… நந்தனுக்குப் பாராட்டு.?

ஸ்டாலின் எதிர்ப்பு… நந்தனுக்குப் பாராட்டு.?

Image

சீமான் சினிமா அரசியல்

ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது சீமானின் வழக்கம். அந்த வகையில் இன்றைய நிலையிலும் தமிழகம் முழுக்கவே ஜாதித் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது என்பதை அழுத்திச் சொல்லியிருக்கிறது இரா.சரவணனின் நந்தன் திரைப்படம். அதனாலோ என்னவோ, பாராட்டுகளை அள்ளித் தெளித்திருக்கிறார் நாம் தமிழர் சீமான்.

நந்தன் படத்தை சாதிய இழிவு தீண்டாமையை ஒழிக்கும் புரட்சித் தீக்குச்சி என்று வர்ணித்திருக்கும் சீமான், ‘’ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அணையாமல் சுட்டெரிக்கும் சாதிய நெருப்புக்குப் பலியான நந்தனின் மீளெழுச்சியையும், தமிழ்ச்சமூகத்திற்குத் தேவையான ஓர்மையுணர்ச்சியையும் பதிவுசெய்யும் ஆகப்பெரும் படைப்புதான் நந்தன்!

தனது வாழ்நாள் முழுமைக்கும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கும், ஆதிக்கவுணர்வுகளுக்கும் எதிராகப் போராடியப் பேராசான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், “அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டும்தான்!” என்கிறார். அவர் போதித்து 70 ஆண்டுகளைக் கடந்தும் விளிம்பு நிலை மக்களுக்கான அதிகாரமும், சாதிய பாகுபாடற்ற சமூக விடுதலையும் கிடைக்கப் பெறாத தற்காலச்சூழலில், “நாங்கள் ஆள்வதற்கல்ல; இங்கே வாழ்வதற்கே அதிகாரம் தேவை!” என்று அடித்தட்டு மக்களின் உள்ளத்து உணர்வாய் உரத்து முழங்குகிற சமூக நீதிக்குரல்தான் நந்தன்!

“சாதிதான் சமூகமென்றால், வீசும் காற்றே நஞ்சாக மாறட்டும்!” எனும் கவிஞர் தம்பி பழநிபாரதியின் அறச்சீற்றம் மிகுந்த மொழியே, ஒடுக்கப்பட்ட ஆதித்தொல்குடிமக்களின் ஆற்றவியலா வலியைக் கூறும். அதனைத் திரைமொழியில் வடித்திருக்கின்ற பெருங்காவியம்தான் நந்தன்! இரத்தம், சதை, எலும்பு, நரம்பு, பசி, உறக்கம், கனவு, கண்ணீர் என எல்லாம் கொண்ட சக மனிதனைப் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தும் கொடுமையைத் தோலுரித்து, மண்ணின் மக்களின் வலியைப் பதிவு செய்யும் திரை ஆவணம்தான் நந்தன்! பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் வருணாச்சிரமக் கோட்பாடு விளைவித்திட்ட சாதியக் கட்டுமானத்தினால் மண்ணுக்குள் புதைந்திட்ட மானுடத்தைப் பேசும் படம்தான் நந்தன்! இது பொழுதைப் போக்குவதற்கான திரைப்படம் அல்ல; பொழுதை ஆக்குவதற்கான படம், நாம் வாழும் சமூகத்தின் பழுதை நீக்கி, சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் புரட்சிக்காவியம்தான் நந்தன்!

ஏழை, பணக்காரன் எனும் வர்க்கம் மாறும்; ஆனால், வர்ணம் மாறாது. பிறப்பின் வழியே சுமத்தப்பட்ட இழிசொல் மாறாது. அதன் வலியைத் துளியும் மாறாது திரைமொழியில் கொண்டு வந்து, சாதிய எண்ணம் கொண்டோரையும் குற்றவுணர்ச்சிக்குள் தள்ளி, மானுடராய் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்யவல்ல சமூகப்பொறுப்புணர்வுமிக்கத் திரைக்காவியமாய் நந்தன் எனும் இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ள என்னுடைய அன்பு இளவல் இரா.சரவணன் அவர்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்; உள்ளன்போடு உச்சிமுகர்ந்து பாராட்டுகிறேன்.

இத்திரைப்படத்தின் முதன்மைப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அன்புத்தம்பி சசிகுமார் அவர்கள் பல திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் முத்திரைப் பதித்து, மக்கள் மனங்களை வென்றிருந்தாலும் இத்திரைப்படம் அவரது திரைவாழ்வின் பெரும் பாய்ச்சல். ‘அயோத்தி’ திரைப்படத்தில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தம்பி சசிகுமார், இத்திரைப்படத்தில் சாதியத்தின் கொடுமைகளைக் காட்டி சமூக விடுதலையைக் கோரும் மகத்தானப் படைப்பில் தன்னை முழுவதுமாகப் பொருத்திக் கொண்டிருக்கிறார். வழமையான தோற்றம், உடல் மொழி, நடை, உரையாடல் உச்சரிப்பு என அனைத்தையும் மொத்தமாக மாற்றி, வேறு ஒர் ஆளாக முற்றிலும் மாறி, கதாபாத்திரமாகவே வாழ்ந்து, திரைப்படத்திற்கு உயிரூட்டியிருக்கின்ற தம்பி சசிகுமாரின் நடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..’’ என்று பாராட்டியிருக்கிறார்.

தம்பிகளாவது தியேட்டரில் போய் படத்தைப் பாருங்கப்பா.

Leave a Comment